January 30, 2023

நூறு ராஜா குரல் ஒலிக்கும்

இவ்வளவு விரைந்து நம் தேர்தல் ஆணையம் செயல்பட்டு இதுவரையில் நாம் பார்த்ததில்லை.

ஆம் ஆ.இராசாவின் பேச்சை அலசி ஆராய்ந்து, நான்கே நாள்களில் நடவடிக்கையும் எடுத்து முடித்து விட்டது தேர்தல் ஆணையம். கடந்த 26 ஆம் தேதி, சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில், திமுக வேட்பாளர் மருத்துவர் நா. எழிலனை ஆதரித்து வாக்குகள் கேட்டபோது, திமுக வின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறப்பு குறித்து இழிவாகப் பேசியதாக, அதிமுக 27 ஆம் தேதி ஒரு புகார் மனு கொடுத்தது. அதனை உடனடியாகத் தமிழ்நாடு தேர்தல் தலைமை அலுவலர், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மற்ற எல்லா வேலைகளையும் தள்ளிவைத்த்துவிட்டு, உடனடியாக 30 ஆம் தேதி ஆ.இராசாவிற்கு அறிக்கை (notice) அனுப்பி, ஒரே நாளில் அதற்கான விளக்கத்தைக் கேட்டனர்.

தேர்தல் பணிகளில் இருந்தபோதும், ஆ. இராசா அடுத்த நாளே அதற்கான விளக்கத்தை அனுப்பி வைத்தார். 24 மணி நேரத்தில் அதனை ஆராய்ந்த தேர்தல் ஆணையம், அவர் விளக்கம் ஏற்கத்தக்கதன்று என்று முடிவெடுத்து, நடவடிக்கையும் எடுத்துள்ளது. அவருடைய திமுக நட்சத்திர பேச்சாளர் என்னும் தகுதியை விலக்கியதோடு, 48 மணி நேரத்திற்கு அவர் தேர்தல் கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.

வெட்டி ஒட்டித் திரித்து வெளியிடப்பட்டுள்ள தன் உரையை முழுமையாகப் படித்துப் பார்த்து முடிவெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளதையும், முதலமைச்சர் மனம் வருத்தப்பட்டிருக்குமானால், அடிமனத்தின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்ததையும் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால் கவிப்பேரரசு வைரமுத்துவின் அம்மாவைப் பற்றி இழிசொற்களால் வசைபாடிய ஹெச்.ராஜா இன்று காரைக்குடித் தொகுதியில் வேட்பாளர். வைரமுத்து ஆண்டாளைப் பற்றிப் பேசியதில் உனக்குக் கோபம் என்றால் அவர் பற்றிப் பேசு, ஏன் அவருடைய அம்மாவைப் பற்றிப் பேசுகிறாய் என்று என்று எந்த ஆணையமும் இதுவரையில் கேட்கவில்லை.

ஒரு கோமாளி நடிகர், பெண் ஊடகவியலாளர் குறித்து மிக இழிவாகப் பாலியல் நோக்கில் பேசியதற்கு எந்த நீதிமன்றமும் எந்த நடவடிக்கையும் இன்று வரையில் எடுக்கவில்லை.

இந்த இரட்டை நிலை ஒருபுறம் இருக்கட்டும். எல்லோரும் அறிந்த, திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு அவர்களின் வழக்கையும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம். அவர் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பத்துரையை விட 94 வாக்குகள் குறைவாகப் பெற்று அப்பாவு தோல்வியடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 203 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவே இல்லை என்பதால், மறு வாக்கு எண்ணிக்கையைக் கோரினார் அப்பாவு. தேர்தல் ஆணையம் செவிமடுக்கவில்லை.

அப்பாவு சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என நான்கு ஆண்டுகள் அலைந்தார். இறுதியில் இரு வேட்பாளர்களின் முன்னிலையில் நீதிமன்றத்திலேயே வாக்குகள் எண்ணப்பட்டன. அப்பாவு கூடுதல் வாக்குகள் பெற்றிருந்ததை அப்போது அறிய முடிந்தது. இறுதி வாக்கு எண்ணிக்கையை ஏற்பதாக இரண்டு வேட்பாளர்களும் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டனர். ஆனாலும், 04.10.2019 அன்று முடிவை அறிவிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. இன்றுவரையில் அவ்வழக்கில் தீர்ப்பு வரவில்லை. இப்போது அவ்வழக்கு வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் 6 ஆம் தேதி அடுத்த தேர்தலே முடிந்துவிடும்.

ஒரு வழக்கில் நான்கே நாள்களில் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இனொரு வழக்கில் ஐந்து ஆண்டுகள் ஆனபின்னும் தீர்ப்பு வரவில்லை.

ஏன் இப்படி?

எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்! ஆனாலும் ஒன்று – 48 மணி நேரம் கொள்கையாளர் ராசாவின் குரல் ஒலிக்காவிட்டால் என்ன, ஆயிரமாயிரம் குரல்கள் இம்மண்ணில் அவர் குரலாய் ஒலிக்கும் |