September 29, 2021

நீதியரசர் கிருஷ்ணய்யர் காலமானார்

“இந்தியாவில் மரண தண்டனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மரண தண்டனை என்பது மனித உரிமைக்கு எதிரான செயல்” என்று ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தன் பணிக்காலத்தில் குறிப்பிட முடியுமா? சரி… பணி ஓய்வுக்கு பின்னரும் நீதித்துறையின் குறைபாடுகளை சாட்டையால் அடிப்பது போன்று விமர்சிக்க முடியுமா? ஒரு மாநிலத்தில் இருந்து கொண்டே, அந்த மாநிலத்துக்கு எதிரான வழக்கில், மற்றொரு மாநிலத்துக்கு எதிராக கருத்து கூற முடியுமா?
vr krishnaiyaar
இப்படி அனைத்து கேள்விகளுக்கும் ஒரே வரியில் முடியும் நிரூபித்தவர் சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர். வைத்யநாதபுரா ராம கிருஷ்ண அய்யர் என்ற நீண்ட பெயரை சுருக்கி வி.ஆர். கிருஷ்ணய்யர் என்று அனைவராலும் அறியப்பட்ட அவர், 1914ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி இப்போதைய பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலபார் பகுதியில் வைத்யநாதபுரத்தில் பிறந்தார். 1952ம் ஆண்டு கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு அவர் கேரள கம்யூனிஸ்ட் அரசில் சட்டம், மின்சாரம், சிறைத்துறை மற்றும் நீர்பாசனம், சமூக நலத்துறை உட்பட பல துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

பொதுவாக அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் நீதித்துறைக்கு செல்லவிரும்பமாட்டார்கள். ஆனால், கிருஷ்ணய்யர் அடிப்படையில் சட்டம் படித்தவர். அத்துடன் நீதித்துறை குறித்து பல நுணுக்கமான விஷயங்களை தெரிந்தவர். பிரபல வழக்குகளில் வாதாடி வெற்றிபெற்றவர். இப்படி அடுக்கடுக்கான திறமைகள் பெற்ற அவர் 1973ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி பதவியேற்றார். தான் ஏற்றுக்கொண்ட பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல குறிப்பிடும்படியான தீர்ப்புகளை வழங்கினார்.

இந்தியாவில் மரண தண்டனை ரத்து செய்யவேண்டும் என்று குரல் கொடுத்த நீதிபதியும் இவர்தான். நீதித்துறைக்கும் மக்களுக்கும் பல விளக்கங்கள் கொடுக்கும் வகையில் 13க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவர். பத்ம விருது உட்பட 30க்கும் அதிகமான விருதுகளை வென்றவர். எர்ணாகுளத்தில் சமீபத்தில் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரபல அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் உட்பட பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார்.

பெரியாறு அணை குறித்து கேரளா பல முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வந்தபோது, “பெரியாறு இப்போதல்ல, இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் பலமானதாக இருக்கும். அதன் உறுதித்தன்மையில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். பெரியாறு அணையை வைத்து அரசியல் நடத்துவதை கேரள அரசியல்வாதிகள் கைவிடவேண்டும்” என்று பகிரங்கமாகவே தன் கருத்தை பதிவு செய்த பெருமை விஆர் கிருஷ்ணய்யருக்கு உண்டு.

தகவல் உதவி:http://jannalmedia.com/dpages.php?id=2888