September 20, 2021

வக்கீல் போக்குக் குறித்த விசாரணை!நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக நேரலை!

தமிழகம் முழுவதும் டூ வீலர் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று ஐகோர்ட் ஜட்ஜ் என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது.இதையடுத்து ஐகோர்ட் நீதிபதிக்கு எதிராக மதுரை வக்கீல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தலைமை தாங்கிய மதுரை வக்கீல் சங்கத் தின் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி மீது சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது. சேம்பருக்குள் நடந்த வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது,
court madras sep 30
இன்று பிற்பகல் நடந்த விசாரணையின் போது நீதிபதிகள், மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் தர்மராஜிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தர்மராஜ், தலைவர் என்ற பொறுப்பில் தீர்மானங்களில் கையெழுத்திட்டதாகவும் தனிப்பட்ட முறையில் அவற்றை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி தமிழ்வாணன், “மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், செயலாளரும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினால் பரிசீலிக்கப்படும். இல்லா விட்டால் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பேரமர்வு விசாரணைக்கு மாற்றலாம்” என்று பரிந்துரைத்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி சி.டி.செல்வம், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை.. மதுரை நீதிமன்ற கிளையை சிறிது காலம் மூடி வைக்கலாம். என்றார்.

பின்னர் இந்த வழக்கை 3 பேர் கொண்ட அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டனர். இதையடுத்து விவகாரம் தலைமை நீதிபதிக்கு அனுப்பி விட்டு மறுதேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்தி வைத்தனர்.இதனிடையே இவ்வழக்கு விசாரணை நடவடிக்கைகள் முழுவதும் சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் திரை வைத்து நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அதை சில டி வி சேனல்கள் நேரலை ஒளிப்பரப்பியது. நீதிமன்ற வரலாற்றில், இத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றியது இதுவே முதல் முறை என்பதால் கோர்ட் வளாகம் முழுவதிலுமுள்ள வக்கீல்கள் திரைக்கு முன்னர் கூடி செல்ஃபீ எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.