July 28, 2021

நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூலம் விசாரணை

இந்திய நீதித்துறை வரலாற்றில், கோர்ட்டில் நடைபெறும் வழக்கின் விசாரணையை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, கடந்த செப்டம்பரில் முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு புரட்சி ஏற்படுத்தியது நம்ம சென்னை ஹைகோர்ட். இதனிடையே இராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ‘ஸ்கைப்’ மூலம் விசாரணை நடத்திய சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூலம் விசாரணை நடத்திய நீதிபதி, போலீஸார் திருமணத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டு மேலும் கொஞ்சம் டெக்னாலஜி புரட்சி ஏற்படுத்தியுள்ளார்
court nov 15


இராமநாதபுரம் அடைக்கலமாதா தேவாலயத்தில் இன்று (நவ. 15) ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
தேவாலய நிர்வாகத்தினருக்கும், திருமண வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர் எம். ஜேசு, நேற்று சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையை அணுகினார்.

வழக்கின் அவரசநிலையை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நீதிபதிகள் விடுமுறையில் இருந்ததால், நிர்வாக நீதிபதியான ராமசுப்பிரமணியன், சென்னையைச் சேர்ந்த நீதிபதி எஸ் வைத்தியநாதனை ‘ஸ்கைப்’ மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னையில் தன்னுடைய வீட்டிலிருந்தபடியே மைரோசாப்ட்டின் வீடியோ சாட்டிங் இணையதள சேவையான ‘ஸ்கைப்’ வழியே விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், அடைக்கலமாதா தேவாலயத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். எனினும், ஆலயத்துக்கு வெளியே எவ்வித ஊர்வலமும் நடத்தகூடாது என்றார்.

முன்னதாக வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, இ-மெயில் மூலம் நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.நீதிபதியின் தீர்ப்பு குறித்த தகவல்கள் இராமநாதபுரம் காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணிக்கு இ-மெயில் செய்யப்பட்டன.சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், ‘ஸ்கைப்’ மூலம் நடைபெற்ற முதல் விசாரணை இதுவே என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன