September 25, 2021

நீதிமன்றம் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது! – ரஜினி காந்த் பேச்சு

முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் 100–வது பிறந்த நாளையொட்டி அவருடைய நினைவு தபால் தலை வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. விழாவில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தபால் தலையை வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
rajani sep 13
தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பேசும் போது, “நீதிக்கும், நேர்மைக்கும் புகழ் பெற்ற நீதிபதி கைலாசம் போன்ற நீதிபதிகள் வாழ்ந்த இந்த சமுதாயத்தில், படிப்படியாக அரசு நிர்வாகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். முன்பெல்லாம் நீதிமன்றத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பினால் உடனடியாக அரசிடமிருந்து பதில் வரும். ஆனால் தற்போது 100 நோட்டீஸ் அனுப்பினாலும் காலதாமதமாகவே பதில்கள் வந்து சேருகின்றன.

நீதித்துறை தரம் குறைந்தது போல் காணப்பட்டாலும் அதன் தரம் குறையவில்லை. எனவே நீதித்துறையின் மீது இருக்கும் நம்பிக்கையை முதலில் மக்கள் இழந்துவிடக்கூடாது. நீதிபதிகளும், வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. நாங்களும் சமுதாயத்தில் இருந்து தான் வருகிறோம். நேர்மையாக இருப்பவர்கள் ஏதேனும் பிரச்சினையில் போய் சிக்கிவிடுவோமோ என்று அஞ்சி எந்த முடிவையும் எடுத்துவிடுவதில்லை. மாறாக நீதித்துறையை தன்னிச்சையாக முடிவெடுக்க விடவேண்டும். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நீதிபதிகள் நியமனம் இருக்க வேண்டும்”என்று அவர் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் தன் பேச்சில், “நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது. அரசியல்வாதிகள் கெட்டுப்போனால் நாடு உருப்படும், மக்கள் கெட்டுப்போனாலும் நாடு உருப்படும், ஆனால் நீதிமன்றம் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது. நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில், முதல் தபால் தலையை பெறுவதற்கு, அவருடைய குடும்பத்தில் அதிகம் நெருக்கமானவன் என்ற தகுதியை விட எனக்கு வேறு தகுதி இல்லை.

அவருடைய மனைவி சவுந்திரா கைலாசம் ஆன்மிகத்தில் பெரும் புலமை பெற்றவர். அவரிடம் எப்படி இதனை பெற்றீர்கள்? என்று ஒரு முறை கேட்டதற்கு, எனக்கு குரு என்னுடைய கணவர் கைலாசம் தான் என்றார். இவரே இவ்வளவு புலமை பெற்றிருக்கும் போது நீதிபதி எவ்வளவு புலமை பெற்றிருப்பார் என்று எண்ணி பார்த்து வியந்து போனேன். பொதுவாக ஞானம் என்ற நிலையை அடையும்போது நான், நீ, நாம், நாங்கள் என்ற வார்த்தைகள் அழிந்துவிடும். எனவே ஆன்மிக வழியில் நாம் ஞானத்தை பெற முயற்சிக்க வேண்டும்.”என்று குறிப்பிட்டார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும் போது, “நீதிபதி கைலாசம் தன்னுடைய வாழ்நாளில் நேர்மையுடன் பணியாற்றி மறைந்துள்ளார். அவருடைய நூற்றாண்டு விழா செய்தியாக ‘பேராற்றல் மிக்க நேர்மை’ தான் இந்த நூற்றாண்டின் செய்தியாக கருதுகிறேன்.

பொதுவாக ‘நீதிமன்றம் சமூகத்தை உற்றுப் பார்ப்பது போல், சமூகமும் நீதிமன்றத்தை உற்றுப்பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை ஏற்க முடியவில்லை. நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை ஆகிய 4 துறைகளும் களங்கம் ஏற்படாமல் இருந்தால் தான் சமூகம் மேம்படும்”என்று வைரமுத்து பேசினார்.