September 29, 2021

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்!- மறுபிரகடனத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

பல்வேறு திட்டங்களுக்காக அரசாங்கம் அவ்வப்போது நிலங்களை கையகப்படுத்துகிறது. கடந்த 2013–ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, தனியார் திட்டங்களுக்கான நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால் 80 சதவீத நில உரிமையாளர்கள் (விவசாயிகள்) ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் இணைந்து நிறைவேற்றும் திட்டம் என்றால் அதற்கு அதற்கு 70 சதவீத நில உரிமையாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
approvedbill
மேலும் 5 ஆண்டுகளுக்குள் அந்த நிலத்தை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளிடமே திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்னர் இந்த பிரிவுகள் நீக்கப்பட்டன. சில திருத்தங்களுடன் கூடிய நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றி சட்டமாக்க பாரதீய ஜனதா கூட்டணி அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.

பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு, நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறியது. ஆனால் மேல்–சபையில் போதிய பலம் இல்லாததால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. (தற்போது இந்த மசோதா, பாரதீய ஜனதா எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வில் உள்ளது.) இதனால் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை முதன் முதலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு பிறப்பித்தது. அந்த அவசர சட்டம் காலாவதியாக இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

2–வது முறையாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் வருகிற ஜூன் மாதம் 3–ந் தேதியுடன் (புதன்கிழமை) காலாவதியாக இருக்கிறது. இதனால், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை 3–வது முறையாக பிறப்பிக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதற்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படை தன்மை, நியாயமான இழப்பீடு மறு குடியமர்த்துதல்’’என்ற பெயரிலான இந்த அவசர சட்டத்துக்கு, டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று நிலம் கையகப்படுத்த 3-வது முறையாக அவசர சட்டத்தை மறுபிரகடனம் செய்ய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து உள்ளார்.