September 18, 2021

நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்! மின் உற்பத்தி பாதிக்கும்?

பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 7 லட்சம் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 5 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் மின்உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் பா.ஜனதாவின் பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.), ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ். ஆகிய 5 மிகப் பெரிய தொழிற்சங்கங்கள் பங்கேற்று உள்ளதுடன் பா.ஜனதாவின் தொழிற்சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருப்பது மத்திய அரசுக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
coal_miners
நிலக்கரி சுரங்க நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கும், மறு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இது தேசியமயமாக்கல் கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியும், தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் நாடு முழுவதும் உள்ள நிலக்கரி சுரங்க ஊழியர்கள் 5 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி இந்த வேலை நிறுத்தம் நேற்று காலை முதல் ‘ஷிப்டு’ நேரத்திலேயே தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், கொல்கத்தாவில் உள்ள இந்திய நிலக்கரி நிறுவன தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்.

மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களில் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே நிலக்கரி சுரங்கங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையாக இருப்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் தொடங்கி இருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று கருதப்படுகிறது.