September 17, 2021

நிறத்தில் வேறுபாடு தான் உலகில் பல புரட்சிகளுக்கும், விடுதலைப் போராட்டங்களுக்கும் வித்திட்டுள்ளது.

சமீபத்தில் பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று, “கருப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றும் கிரீம்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடுவதில்லை, இந்தத் தொலைக்காட்சி இன வெறிக்கு எதிரானது’ என ஒளிபரப்பியதைக் கண்டு வியந்தேன். இது காட்சி ஊடகத் துறையில் அனைவராலும் பாராட்டுதலுக்குரிய ஒரு முடிவாகும்.உலகில் மனிதர்கள் மத்தியில் மதத்தில் வேறுபாடு, இனத்தில் வேறுபாடு, மொழியில் வேறுபாடு, பண்பாட்டில் வேறுபாடு, நிறத்தில் வேறுபாடுகள் காணப் படுகின்றன. இதில் முக்கியமாகப் பார்க்கப்படுவது நிற வேறுபாடு தான்.

edit feb 20

நிறத்தில் வேறுபாடு தான் உலகில் பல புரட்சிகளுக்கும், விடுதலைப் போராட்டங்களுக்கும் வித்திட்டுள்ளது. நாம் பிறந்ததிலிருந்து நமது குணத்தை, செயல்பாட்டை, இடத்தை அல்லது நிலையைத் தீர்மானித்து தனது அதிகாரத்தை செலுத்தி வருகிறது இந்த நிற பேதம். அழகு என்று வரும் போது முதலாவதாக முன் வைக்கப்படுவது தோல் நிறம்தான்.பெண்களுக்கான சிவப்பு அழகு பசைகளை பயன்படுத்தினால் ஐந்து அல்லது ஆறு வாரங்களில் சிவப்பாகி விடலாம் என்று பொய் விளம்பரங்கள் செய்து பல பெண்களின் இருக்கும் முக அழகையும் கெடுத்து சொறி, முகப்பரு போன்ற பல்வேறு சரும நோய்களை உருவாக்கி, இவைகளை நீக்க இந்தப் பசையைப் பயன்படுத்துங்கள் என்று விளம்பரப்படுத்தி பல கோடி ரூபாய்களை அழகு சாதனப் பொருள்களை விற்கும் நிறுவனங்கள் சம்பாதித்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் சிவப்பு நிறம் தான் உயர்ந்தது என்ற மாயையை அப்பாவி பெண்கள் மனதில் விதைத்து, தாழ்வு மனப்பான்மையை வளர்த்து காசை வீணே செலவழிக்க வைக்கிறார்கள். ஆனால், இதுவரை யாரும் சிவப்பழகானதாக சரித்திரம் இல்லை.சமீபக் காலமாக ஆண்களுக்கான சிவப்பு அழகு பசைகளும் சந்தைக்கு வந்து விட்டன. இதிலும் பல இளைஞர்கள் மூழ்கி தங்களை இளமைப் பருவ அழகை இழந்து, நிறம் ஏதும் மாறாமல் முகம் எங்கும் சரும நோய்கள் ஏற்பட்டு புண்களுடன் காணப்படுகிறார்கள். இதிலும் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் நடித்து மக்களிடையே நிற வேற்றுமையை உருவாக்குகிறார்கள் (ஆனால், இத்தகைய நடிகர், நடிகையர்கள் இம்மாதிரியான நிற அழகு பசைகளை பயன்படுத்துவதில்லை என்பது வேறு விஷயம்). வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று வசனமும், படத்திற்கு தலைப்பும் வைத்து வெள்ளை நிறத்துக்கு தூபம் போடுகின்றனர்.

இன பேதம் போலவே நிற பேதமும் மனித மனங்களில் தாழ்வு மனப்பான்மையைத் தான் உருவாக்கும்.நம் தோலின் நிறம் மரபணுவால் தீர்மானிக்கப்படுகிறது. மனிதர்களின் தோலின் நிறத்தை நிர்ணயிப்பது தோலில் இருக்கும் “மெலனின்’ என்ற நிறமிகள் தான். மெலனின் அதிகம் உள்ளவர்கள் கறுப்பாகவும், குறைவாகவுள்ளர்கள் வெளுப்பாகவும் இருப்பார்கள். தோலின் கீழ் அடுக்கில் உள்ள “மெலனோஸைட்’ என்னும் வகையைச் சேர்ந்த செல்கள் தான் மெலனினை உற்பத்தி செய்கின்றன எனவும், தோல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மெலனின்தான் சூரியனின் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் தோலுக்குள் ஊடுருவும் அளவை கட்டுப்படுத்துகின்றன. இவை அதிகமாகும் போது தோலுக்குக் கெடுதல் விளைவிக்கும் என்றும் மெலனின் உற்பத்தி குறைவானவர்களுக்கு தோல் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறுகின்றனர்.

சுருக்கமாக சொன்னால் வெள்ளையாக இருப்பவர்களை விடக் கருப்பாக இருப்பவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு இயற்கையிலேயே அளிக்கப்பட்டிருக்கிறது. சிவப்பானவர்களை விடக் கருப்பு சருமம் கொண்டவர்களை தோல் சார்ந்த நோய்கள் தாக்குவது குறைவு எனவும் தோல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.தோல் நிறத்தினை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கல்வி, அறிவியல், விளையாட்டு, கலை, சினிமா, அரசியல், உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் சாதித்தவர்கள் ஏராளமானோர். செனகர் நாட்டைச் சேர்ந்த கெளடியா என்ற கருப்பு பெண், தற்போது பள்ளியில் படித்து வந்தாலும், இவரின் தோல் நிறத்தை பார்த்த மாடலிங் நிறுவனம் ஒன்று மாடலிங்காக இவரை ஒப்பந்தம் செய்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக கெளடியா மாடலிங் துறையில் கலக்கி, வெள்ளை நிறத்து அழகிகளை கதிகலங்க வைத்திருகிறார். “மற்றவர்கள் கூறும் எதிர்மறையான வார்த்தைகளை ஒரு போதும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. எனக்குச் பிடிச்ச கலரு கருப்பு’ என்கிறார் கெளடியா. இது அவரின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.அழகு என்பது நிறம் சார்ந்ததல்ல அது மனம் சார்ந்தது என்பதை நாம் உணரவேண்டும். யார் எந்த நிறமாக இருந்தாலும் நன்றாகப் படித்து சொந்த காலில் நிற்கும் போது அவர்களுடைய அறிவும், தன்னம்பிக்கையும் தான் அவர்களுக்கு அழகைத் தருகிறது. ஒருவரிடம் நாம் காட்டும் பண்புக்கும், அன்புக்கும் நிறம் ஒரு தடையாக இருக்கக் கூடாது.

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்