October 24, 2021

நியூஸ் 7 தமிழ் ரியல் ஓனர் வைகுண்டராஜன் தலைமுறைவு?

சிபிஐ பிடியில் சிக்காமலிருக்க தாது மணல் அதிபர் வைகுண்டராஜன் இரண்டு நாட்களாக படகில் தப்பிச் சென்று நடுக்கடலில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முயற்சிப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
vaikundarajan
தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக்குழு துணைத் தலைவர் மற்றும் தலைவராக 30.4.2007 முதல் 29.4.2012 வரை இருந்தவர் சுப்பையா. இவர் தனது தாய் ஜானகி, சகோதரர் ஜெயராமன் ஆகியோருடன் சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்ததாக சிபிஐ கடந்த 2012ல் வழக்குப்பதிவு செய்தது. சுப்பையா சொத்து குவிப்பதற்கு தாது மணல் அதிபர் வைகுண்டராஜனும், அவரது சகோதரர் ஜெகதீசனும் உதவியதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இதற்கு ஆதாரமாக வங்கி பண பரிவர்த்தனை பதிவுகளை தாக்கல் செய்தது. மேலும், வைகுண்டராஜன், ஜெகதீசனை கைது செய்யும் முயற்சியில் சிபிஐ இறங்கியது.இதையடுத்து, இருவரும் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவை நீதிபதி ஜி.சொக்கலிங்கம் தள¢ளுபடி செய்தார். வைகுண்டராஜன், ஜெகதீசனை பிடிக்க சிபிஐ மீண்டும் முயற்சி மேற்கொண்டது.

ஆனால், இருவரும் திடீரென தலைமறைவாகினர். இதையடுத்து, சிபிஐ தனிப்படை அமைத்து அவரது அலுவலகங்கள், மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் தேடுதல் வேட்டையை தொடர்ந்தது.தாங்கள் கைது செய்யப்பட்டால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்று கருதி சிபிஐ வசம் சிக்காமல் இருக்க வைகுண்டராஜனும், அவரது சகோதரர் ஜெகதீசனும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் இருவரும் முன்ஜாமீன் பெற ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கிடையே சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் குறுக்கிட்டதால் சிபிஐ பிடியில் சிக்காமல் இருப்பதற்காக இருவரும் படகில் தப்பிச் சென்று கடலில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வைகுண்டராஜனுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அவரது ஆதரவாளர்கள் தனிப்படகையும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே வைகுண்டராஜனுக்கு கடலில் பயணம் செய்த அனுபவம் இருப்பதால், எவ்வித சிரமமும் இன்றி அவர் கடலில் தங்கியுள்ளார். குமரியில் போலீஸ் தேடினால் மின்னல் வேகத்தில் தூத்துக்குடி கடல் பகுதிக்கு வரும் வகையில் அதிவேகமாக செல்லும் விசைப்படகை ஏற்பாடு செய்து அதில் அவர் வலம் வருவதாக தெரிகிறது.