October 16, 2021

நினைவில் நின்றவள் – திரை விமர்சனம்

இன்றைய காலக் கட்டத்தில் எத்தனையோ பொழுதுபோக்கு சித்திரங்கள் வந்து போன நிலையில், படிப்பினைகளையும், சர்ச்சைக்குரிய விஷயங்களை எடுத்து அலசி ஆராய்ந்து அறிவு சார் விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.இந் நிலையில், ‘நினைவில் நின்றவள்’ எனும் சினிமா வியாபாரத்திற்கு அப்பாற்பட்ட ஒரு திரைப்படம் வெளி வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஒரு திரைப்படத்தை தைரியமாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று இன்றைய காலகட்டத்தில் யாரேனும் உத்திரவாதம் தர இயலுமா? அல்லது அவ்வாறுதான் குடும்பத்துடன் பார்க்கும் தகுதி படைத்த படங்களும்தான் வருகிறதா? குத்து, வெட்டு, கொலை, மரணம், குத்தாட்டம், சட்டத்திற்குப் புறம்பான தவறான செயல்கள், தாதா, மாஃபியா, ஏமாற்றுதல் என்று வர்ஜ்ஜா வர்ஜ்ஜியம் இல்லாமல் எல்லாப் படங்களின் உள்ளிலும் புகுத்தப்பட்டு மூன்றாம் நாள் கலெக்ஷனொடு கல்லாப் பெட்டியை எண்ணிப் பார்க்கும் வியாபாரிகள்தான் பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் அதிகம்.
Ninaivil-Nindraval-
அதையும் மீறி சிலர், நல்ல திரைப்பட விரும்பிகள், மக்களுக்காக திரைப்படம் எடுக்கத் துணிந்து வருகிறார்கள். அவர்களால்தான் இன்னமும் மக்களுக்கு தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும் எனும் எண்ணம் துளியேனும் மிச்சம் இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய விஷயமாக நீதி மன்றம் எடுத்துக் கொண்டுள்ள கருணைக் கொலை விஷயத்தை, ‘நினைவில் நின்றவள்’ எனும் திரைப் படத்தில் எப்படி 2 மணி நேரத்திற்குள் ஒரு தீர்வையும், அந்த சர்ச்சைக்கு இப்படியும் ஒரு முடிவு எடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து ஒரு திரைப் படத்தை தந்துள்ளது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.

நடிப்பில் புலிகள், முதல் வரிசை நடிக நடிகைகள் என யாரும் இன்றி, கதையை மட்டும் முன் நிறுத்தி வெளியாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் பாராட்டுக் குரியவர்கள். கதை முதலில் இருந்தே தொய்வின்றி பயணிக்கிறது. இடை வேலையில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. காதலன் காதலி திருமணத்தை தடை செய்ய முயலும் காதலியின் அப்பா என திரைக்கதை நேரடியாக சொல்லப் பட்டுள்ளது.

கருணைக்கொலை செய்யும் மிக கனமான பாத்திரத்தில் கதாநாயகன் அஸ்வின் சேகர் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே சிறப்பாக நடித்துள்ளார். பாடல்,சண்டை காட்சிகளில் நல்ல வேகம் .நீதி மன்றம் வழக்காடலில் தலைவாசல் விஜயின் நடிப்பு அருமை. அதே போல திரைக்கதையை ஒப்புக்கு செய்யாமல், அதன் பின்புலத்தில் உள்ள சட்ட நுணுக்கங்களையும் அதன் உட்பிரிவுகளையும் தெளிவாக அலசி இருக்கிறார்கள். ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை ‘வழக்கு எண் 18/9’ மிக நேர்த்தியாக பாலாஜி சக்திவேல் கையாண்டது போலவே, இந்தப் படத்தில் இயக்குனர் அகஸ்திய பாரதி கையாண்டுள்ளார்.

சட்டென்று எதிர்பாராமல் நிஜ வாழ்வில் புற்று நோயினால் அகால மரணம் அடைந்த இயக்குனர், இந்தப் படத்தின் முதல் பிரதியை திருப்தியுடன் பார்த்து விட்டே சென்றார் என்பது சற்றே ஆறுதல் தரக்கூடிய விஷயம்.டி இமானின் பாடல்கள் 5 இல் 3 ஓஹோ இரகம். சட்டென்று வரும் ரீமிக்ஸ் பாடல் ஆச்சர்யப் பட வைக்கிறது…..

ஒளிப்பதிவு நேர்த்தி. என்னைப் போன்ற புகைப்படக் கலைஞர்கள் காணும் சில ஒளிப்பதிவு விதிகள் சற்றும் மீறப் படாமல் உள்ளது. லைட்டிங்கில் தெளிவு இருக்கிறது. கேமெரா அகேலா கிரேனை உபயோகிக்கத் தயங்கவில்லை. இந்தப் புகைப்படம் (ஸ்டில்ஸ்) எடுத்தது நமது முக நூல் நண்பரும் எனது ஆசானுமான திரு ஸ்டில்ஸ் ரவி அவர்கள். அது குறித்து நான் விமர்சிப்பது என்பது இயலாத காரியம். குருவிற்கு மிஞ்சிய சிஷ்யன் நான் இல்லை.

என்னைப் பொறுத்தவரை ‘நினைவில் நின்றவள்’ எனும் திரைப்படம் நிச்சயம் ஒரு மனத் திருப்தி அளிக்கக் கூடிய குடும்பத்துடன் கட்டாயம் காண வேண்டிய, கதையம்சமுள்ள ஒரு நல்ல திரைப்படம்.

மதிப்பெண்கள்: 68/100

டிமிடித் பெட்கோவ்ஸ்கி’