September 27, 2021

நினைச்சது ஒண்ணு.. கிடைச்சது ரெண்டு! – முதலீட்டாளர் மாநாட்டில் ஜெ. ஹேப்பி

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் ஆயிரம் முதலீட்டாளர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து 4 ஆயிரம் முதலீட்டாளர் களும் கலந்து கொண்டனர். மாநாட்டின் ஒரு பகுதியாக தொழில் கண்காட்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 208 நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்து இருந்தன. பெருந்தொழில்களைச் சார்ந்த 107 நிறுவனங்களும், சிறுதொழில் சார்ந்த 101 நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றன.
tn cm sep 11
மாநாட்டின் நிறைவு நாளான நேற்று காலை முதல் 8 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த கருத்தரங்குகள் நடைபெற்றன. நிறைவாக நேற்று மாலை 4 மணி அளவில் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலீட்டாளர்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வரவேற்றார். விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு நிறைவு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “எனது அரசின் கொள்கைகளால், இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வரக்கூடிய இறுதி செய்யப்பட்ட முதலீட்டு தொகை, இதுவரை தமிழக சரித்திரத்தில் பெறப்படாத தொகையாகும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அதாவது, இறுதி செய்யப்பட்டுள்ள முதலீட்டு தொகை 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் ஆகும். இது, இந்த மாநாட்டின் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு இரட்டிப்பு தொகை ஆகும்.

அதுமட்டுமல்ல, 1991–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் தமிழக அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பெற்ற ஒட்டுமொத்த முதலீட்டு அளவைவிட இந்த மாநாட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற முதலீட்டு அளவு அதிகம் ஆகும். இன்று மட்டும் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, பத்திரங்கள் பரிமாறப்பட்டன.

இந்த முதலீட்டு தொகையில், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 286 கோடி ரூபாய் உற்பத்தி துறையிலும், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 136 கோடி ரூபாய் எரிசக்தித் துறையிலும், 10 ஆயிரத்து 950 கோடி ரூபாய் தகவல் தொழில் நுட்பத் துறையிலும், ஆயிரத்து 955 கோடி கைத்தறி மற்றும் ஜவுளித்துறையிலும், ரூ.800 கோடி வேளாண் துறையிலும், ரூ.500 கோடி மீன்வளத் துறையிலும் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த 2012–ம் ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை நான் அறிவித்திருந்தேன். அது இந்த மாநாட்டில் நேரடியாக வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டின் மூலம் 5 ஆயிரத்து 345 மெகாவாட் மின்சாரம் தயாரிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதில் மட்டும் ரூ.35 ஆயிரத்து 356 கோடி முதலீடு செய்யப்படும்.

அதுமட்டுமல்லாமல், ரூ.16 ஆயிரத்து 533 கோடி முதலீட்டை கொண்டு வரக்கூடிய 10 ஆயிரம் நடுத்தர மற்றும் சிறு தொழிற்சாலைகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. மொத்தத்தில் இந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்றி அடைந்து உள்ளது: என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.