October 21, 2021

நாளிதழ்களின் விலையும்*** நாட்டு மக்களின் நிலையும் (6) *** By கதிர்

பத்திரிகை அதிபர் தொடர்ந்தார்:

பத்திரிகையின் உரிமையாளர் என்ற அடிப்படையில் அமைந்த செல்வாக்கு ஓர் எல்லையோடு நின்றுவிடும். ஆசிரியருக்கு அப்படியல்ல. அரசு எந்திரத்தின் அனைத்து தளங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், நட்புறவை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். யாரும் உள்நோக்கம் கற்பிக்க மாட்டார்கள். நாடறிந்த பிரபலங்களை ஆசிரியர் பொறுப்பில் நியமிக்கும்போது இந்த வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாகும்.
daily Newspaper.dog. jan 28
இன்று நம்முடன் மோதும் பத்திரிகை இந்த ஏற்பாட்டை எவ்வளவு சாதுரியமாக பயன்படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

காலையில் பிரதமரோடு வாக்கிங், மதியம் ஜனாதிபதி மாளிகையில் பகலுணவு, இரவில் மேலைநாட்டு தூதருடன் விருந்து என்கிற அளவுக்கு மேலிடத்து தொடர்புகளை பலப்படுத்திக் கொள்கின்றனர்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் விதமாக எந்த செய்தியும் பிரசுரம் ஆகாமல் பார்த்துக் கொள்வதால், உறவில் விரிசல் விழுவதில்லை. பதிலுக்கு, அதிகாரத்தில் உள்ளவர்களால் இவர்களின் பல்வேறு தொழில்களுக்கு எந்த தொல்லையும் வராமல் பாதுகாக்கப்படுகிறது.

வங்கி கடன், மின்சார கட்டணம், வருமான வரி, தொழிலாளர் பிரச்னை என்று பலவகையிலும் ஒரு தொழிற்சாலை வழக்கமாக எதிர்கொள்ளும் எந்த தலைவலியும் இவர்களுக்கு வராது.

அது மட்டுமல்ல. அரசின் பரிசுகள், விருதுகள், கவுரவ பதவிகள் போன்றவை இவர்களுடன் நெருக்கமாக இருக்கும் அல்லது இவர்களால் கைகாட்டப்படும் நபர்களுக்கே கிடைக்கும்.

தேசிய கண்ணோட்டம், நீரோட்டம் என்று பேசினாலும், தங்களின் இதர தொழில்கள் தடம் பதிக்காத தென்னிந்தியா பக்கம் இவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. மேற்கிலும் கிழக்கிலும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக பலமில்லாத ஒரு கட்டமைப்பை நிர்மாணித்திருக்கிறார்கள். அகில இந்திய இருப்பு என்பது பெயரில் மட்டும்தான்.

அரசின் கொள்கைகள், திட்டங்களில் வரவிருக்கும் மாறுதல்கள் குறித்து இவர்கள் முன்னதாகவே மோப்பம் பிடித்து, வேண்டியவர்களோடு விவரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். வெளி உலகத்துக்கு தெரியாமல் இப்படியொரு பெரிய நெட்வொர்க் உருவாக்கி, நாட்டு வளத்தில் தங்கள் பங்கை சத்தமில்லாமல் பிரித்துக் கொள்கின்றனர்.

வேறு எதையும்விட வாசகர்கள் முக்கியம் என்று நினைத்தால் இப்படி செயல்படுவார்களா?

— இந்த கேள்வியுடன் ஒரு பத்திரிகை குறித்த தனது எண்ணங்களை நிறைவு செய்த அதிபர், புலனாய்வு இதழியலின் முன்னோடியாக போற்றப்பட்ட பத்திரிகையை அடுத்ததாக கையிலெடுத்தார்.

(தேடுவோம்)

கதிர்