October 16, 2021

நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்களின் நிலையும்*** (5) By கதிர்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் நிதி, நிர்வாகம், விற்பனை மேலாண்மை கற்றுத் தேர்ந்த நிர்வாகிகள் அவர்கள். பிரபல நிறுவனங்களில் அடிப்படை அனுபவம் பெற்றிருந்தவர்கள். இந்திய பத்திரிகை உலகை அடியோடு புரட்டிப்போடும் சிந்தனை எதார்த்த சூழ்நிலைக்கு அப்பாற்பட்டது என்று பத்திரிகை அதிபருக்கு தயக்கமின்றி சுட்டிக் காட்டினார்கள். பத்திரிகை தொழில் ஏனைய தொழில்களில் இருந்து வேறுபட்டது என்றும்; மாறுபட்ட தர்மங்களுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது என்றும் எடுத்துக் காட்டுகளுடன் விவரித்தார்கள்.
daily Newspaper.dog. jan 25
புது விஷயம் ஒன்றை முதல்முறையாக கேட்பவர் போல ஆர்வம் படர்ந்த முகத்துடன் அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார் முதலாளி. எல்லோரும் முடித்த பிறகு அவர் பேச தொடங்கினார்:

நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று சொன்னேன். சிந்தனையில் மாற்றம் வந்தால்தான் அணுகுமுறை மாறும். பத்திரிகை தொழில் என்பது ஏனைய தொழில்களை போன்றது அல்ல என்று சொன்னீர்கள். உங்களின் இந்த நம்பிக்கையில் எனக்கு உடன்பாடு கிடையாது.

பத்திரிகை என்பது ஒரு பொருள். சோப்பு கட்டி, பல்பு, டீசர்ட் மாதிரி. அதையெல்லாம் தயாரிப்பவர்கள் எப்படி செயல்படுகிறார்களோ, அதே போன்று நாமும் இயங்குகிறோம். லாபம் இல்லாவிட்டால் அவர்கள் தொழிலை நிறுத்திவிடுவார்கள். நாமும் அப்படித்தான்.

நஷ்டம் ஏற்பட்டும் பத்திரிகையை நிறுத்தாமல் நடத்துவதாக யாரும் சொன்னால் நம்பாதீர்கள். அவர்களுக்கு அந்த பத்திரிகையில் லாபம் கிட்டாமல் போகலாம்; ஆனால், பத்திரிகையின் மூலமாக வேறு வழிகளில் ஆதாயம் கிடைத்துக் கொண்டிருக்கும். வேறு வேறு தொழில் செய்பவர்கள் பலர் அந்த தொழில்களுக்கு பாதுகாப்பு அரணாக பத்திரிகை நடத்துகிறார்கள். சிலர் பதவி, செல்வாக்கு பெறுவதற்காக பத்திரிகையில் முதலீடு செய்திருப்பார்கள். அவர்கள் நஷ்டத்தை ஒரு செலவாக பார்ப்பார்கள்.

மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்வதற்காகவே பத்திரிகை நடத்துகிறேன் என்று யாராவது சொன்னால், அவர்கள் உண்மை பேசி பழக்கம் இல்லாதவர்கள். பத்திரிகை தர்மம் என்பது எல்லா தொழிலுக்கும் இருக்கிற தர்மங்கள் போன்றதுதான். சட்டங்களை மீறக்கூடாது, மக்களை ஏமாற்றக்கூடாது, கலப்படம் போன்ற வழிகளில் பொருளின் தரத்தை குறைக்கக்கூடாது, கொள்ளை லாபம் அடிக்கக்கூடாது. இவை எல்லா தொழிலுக்கும் பொருந்தக்கூடிய நியதிகள். உணவு உற்பத்தி, மருந்து மாத்திரை தயாரிப்பு, வாகனங்கள் உற்பத்தி போன்ற தொழில்களில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவர்களுக்கு இல்லாத நுகர்வோர் நலனும் சமூக அக்கறையும் நமக்கு மட்டும் இருப்பதாக எப்படி சொல்கிறீர்கள்?

பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும், வேறு எதை விடவும் மேன்மையான சேவை என்றும் கூறுவது நம்மை தனியிடத்தில் அமர்த்திக் கொள்வதற்காக செய்யப்படும் பிரசாரம். பத்திரிகை தொழிலை புனித பசுவாக சித்தரிக்கும் இந்த கூட்டு முயற்சிக்கு பின்னால் இருப்பது எது?

விமர்சனங்கள், கண்டனங்கள், ஊடுருவிய கண்காணிப்பு ஆகியவற்றில் இருந்து நம்மை விலக்கி வைக்கும் நோக்கம். ’பத்திரிகைகள் யாரையும் விமர்சிக்கலாம், கண்டிக்கலாம், தண்டிக்கவும் முனையலாம்; ஆனால், பத்திரிகைகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை’ என்ற பிம்பத்தை உருவாக்கி அதை நிஜம் போல பராமரிக்கும் நோக்கம்.

புனித பசு என்றால் வணங்க மட்டும்தான் முடியும். பால் கறக்க முடியாது. உண்மையில் இன்று பத்திரிகைகள் எப்படி இயங்குகின்றன? மக்களுக்கு செய்தி அளிப்பது என்ற ஆதார பொறுப்பை அவை எவ்வாறு நிறைவேற்றுகின்றன? உண்மை, நடுநிலை, பாரபட்சமின்மை, துணிவு, நேர்மை, உள்நோக்கம் தவிர்த்தல் முதலான தர்மங்களை எந்த அளவுக்கு பின்பற்றுகின்றன?

— வைத்த கண்வாங்காமல் தன்னை பார்த்துக் கொண்டிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்திருப்பது பத்திரிகை அதிபருக்கு புரிந்தது. வேதம் ஓதுவது யார் என்ற வியப்பு அவர்கள் மனதில் எழுந்தாலும் கவலையில்லை. மிகப்பெரிய பத்திரிகைகளின் செயல்பாட்டை அடுத்து அவர் விமர்சன கத்தியால் கீறிக் காட்டும்போது அந்த அதிர்ச்சி மறைந்துவிடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

(தேடுவோம்)