September 27, 2021

”நான் யசோதா பேசுகிறேன்”… மோடி மனைவி யசோதா பென் பேட்டியில் இருந்து…!

”அப்போது எனக்கு 17 வயது. படிப்பை நிறுத்தி விட்டு அவர் ஊருக்கு சென்றேன். அவர் வீட்டில் குடி புகுந்தேன். ‘ஏன் படிப்பை நிறுத்தி விட்டு இங்கே வந்தாய்?’ என்று அடிக்கடி கேட்டார். ’உங்களோடு வாழத்தான்’ என்றேன்.’நான் சரியான ஊர் சுற்றி. ஒரு இடத்தில் இருக்க மாட்டேன். ஊர் ஊராக போய்க் கொண்டே இருப்பேன். இஷ்டப்பட்ட நேரம் இஷ்டப்பட்ட ஊருக்குபோவேன். அப்போது நீ என்னோடு வந்து என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்பார்.‘நீங்கள் எங்கே போனாலும் உங்களோடு வருகிறேனே?’ என்று சொன்னேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. என்னுடன் பேசுவதையே குறைத்துக் கொண்டார். என் சகோதரர் வீட்டுக்கு நான் போய்விட்டு திரும்பி வரும்போது அவர் வீட்டில் இருப்பதில்லை. படிப்படியாக வீட்டுக்கு வருவதையே நிறுத்தி விட்டார்.
modi wife - apr 13
எப்போதாவது வரும்போது, ‘இந்த வயதில் நீ உன் வீட்டாரை விட்டு விட்டு இங்கே எதற்கு வந்தாய்? உன் ஊரிலேயே இருந்து படிப்பை தொடர்ந்து இருக்கலாமே?’ என்பார். இதே மாதிரி போனதால், நானும் அங்கே தங்குவதை குறைத்தேன். அப்படியே என் அண்ணனுடன் தங்க ஆரம்பித்தேன். வீட்டுக்கு வராத நேரங்களில் அவர் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு சென்றுவிட்டதாக சொல்வார்கள்.

ஆரம்பத்தில் என்னோடு அடிக்கடி பேசினார். என்னவெல்லாம் சமைக்க தெரியும் என விசாரிப்பார். போகப்போக அது குறைந்து விட்டது. மூன்று வருடம் அவர் வீட்டில் இருந்தேன். ஆனால், நாங்கள் இருவரும் சேர்ந்து இருந்ததை கணக்கிட்டால் மூன்று மாதம்தான் இருக்கும்.

நாங்கள் சண்டைபோட்டுக் கொண்டதே இல்லை. ஆனால், அது நாங்கள் சந்தோஷமாக இருந்தோம் என்பதற்கு அடையாளம் இல்லை. நெருக்கம் கிடையாது. நல்லபடி பிரிந்தோம்.

எங்கள் வீட்டுக்கு நான் திரும்பி வந்த பிறகு அவருடன் தொடர்பே இல்லை. என்னை அவர் அழைத்ததும் இல்லை, என்னுடன் பேசியதும் இல்லை. இனியும் பேச மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

ஆனாலும் அவர் நன்றாக வாழ வேண்டும் என்று தினமும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அவரை பற்றி பத்திரிகைகளிலும் டெலிவிஷனிலும் வருகிற செய்திகளை விடாமல் பார்க்கிறேன், படிக்கிறேன். எனக்குத் தெரியும், அவர் எப்படியாவது ஒருநாள் பிரதமராகி விடுவார்.

அவர் என்னை விட்டு பிரிந்ததை நினைத்து நான் அதிகம் கவலைப்படுவது இல்லை. விதி அப்படி இருந்தால் நம்மால் என்ன செய்ய முடியும் என்று மனதை தேற்றிக் கொள்வேன். கெட்ட நேரம் வரும்போது நல்லவர்கள்கூட சரியாக நடக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் அவரும் தவறாக நடக்க நேரிடும். பொய் கூட சொல்ல நேரலாம். அதற்காக நான் வருத்தப்பட வில்லை.

மறுமணம் செய்வது குறித்து நான் சிந்தித்ததுகூட கிடையாது. இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்ட பிறகு யாருக்குதான் அந்த சிந்தனை தோன்றும்? என் இதயம் அதில் ஒட்டவே இல்லை.

என்னுடைய மாமியாரும் நாத்தனார்களும் அன்பாக பேசினார்கள். ஆனால், திருமண வாழ்க்கை பற்றியோ அவரது நடத்தை பற்றியோ கேட்டதில்லை. பள்ளியில் படிப்பை தொடர என் அப்பாதான் முதலில் செலவு செய்தார். அவர் திடீரென இறந்த பிறகு என் அண்ணன்கள் கஷ்டப்பட்டு உதவி செய்தார்கள்.

அந்த காலகட்டத்தில் என் மனது ரொம்ப சங்கடப்பட்ட்து. ஆனால், படிப்பை தொடரும்போது தானாக அதில் ஆர்வம் உண்டானது. 1974ல் பள்ளிப்படிப்பு முடித்து, 76ல் ஆசிரியர் பயிற்சி முடித்து, 78ல் டீச்சர் ஆனபோது நிறைய நம்பிக்கை துளிர்த்தது. வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படும்போது மற்ற எல்லா விஷயங்களும் மறந்து போகும் என்பதை அனுபவ ரீதியாக புரிந்து கொண்டேன்.

இப்போது அந்த வேலையில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டேன். தினமும் 4 மணிக்கு எழுந்து விடுவேன். 11 மணி வரை துர்கா தேவியை வணங்கி பிரார்த்தனை செய்கிறேன். மொத்த வாழ்க்கையும் பக்தி மார்க்கத்தில்தான் போகிறது.

மனம் நினைக்கும்போது உஞ்சா கிராமத்தில் வசிக்கும் அண்ணன் அசோக் மோடி வீட்டுக்கு போவேன். சில சமயம், அருகில் உள்ள பிரமன்வடா கிராமத்தில் வசிக்கும் இன்னொரு அண்ணன் வீட்டுக்கும் போவேன். இப்படிப்பட்ட நிலையில் தங்கைக்கு ஆதரவாக நிற்கும் அண்ணன்கள் ரொம்ப குறைவு. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்.

இப்போது எனக்கு 62 வயது ஆகிறது. நரேந்திரா பாய்க்கும் கிட்டத்தட்ட அவ்வளவுதான் இருக்கும். அவர் நன்றாக இருந்தால் போதும் என்றுதான் எப்போதும் நினைக்கிறேன். மாதம் 14 ஆயிரம் பென்ஷன் வருகிறது. எனக்கு செலவுகள் கம்மி. சொந்தக்காரர்களுக்கு உதவுகிறேன். இதற்கு மேல் இந்த வாழ்க்கையில் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.

(தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 01.02.2014 தேதியிட்ட இதழில் பிரசுரமான பேட்டி. சந்தித்தவர் லட்சுமி அஜய்).