September 29, 2021

நாட்டைக் கெடுக்கும் சொக்கட்டான் விளையாட்டில் கம்யூனிஸ்ட்டுகள்!

அரசியலில், இன்று புரையோடிப் போயிருக்கும் வாரிசு அரசியல், லஞ்சம், ஊழல், சந்தர்ப்பவாதம், தேச விரோதம், மக்கள் விரோதப் போக்கு ஆகியவை, இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தருணத்தில் மக்கள்,16வது பாராளுமன்றத்திற்கு, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க, விரைவில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர்.ஒத்த கொள்கைகள் கொண்டிராத, தொலை நோக்குப் பார்வையில்லாத, மாநில உணர்வும், மொழி, இனப்பாகுபாடும் மிக்க, சந்தர்ப்பவாத அரசியலில் மாநிலக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தலுக்குப் பின், மூன்றாவது அணி அமைத்து, மத்தியில் ஆட்சியை பிடிக்கும் சொக்கட்டான் விளையாட்டில், இடதுசாரி கட்சிகள் இறங்கியிருக்கின்றன. தங்களது தனித்தன்மையை இழந்துவிட்ட பொது உடைமைவாதிகள், ஜனநாயகத்தின் பெயரால் சுயலாபம் அடைந்து வரும் இதர அரசியல் கட்சிகளுடன், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கூட்டுச் சேர்ந்தோ அல்லது கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றனர். அக்கட்சிகள் மிகவும் பிகு பண்ணி, பெரிய மனது வைத்து பிச்சை இடுவது போல் தரும் ஒரு சில, லோக்சபா, சட்டசபை இடங்களைப் பெற்று, தங்களை உழைப்பாளிகள் மற்றும் ஏழைகளின் தோழர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.பதவி, புகழ், பணத்திற்காக இவர்களும், மற்ற அரசியல் வியாபாரிகள் போல், சில்லரை அரசியல் வணிகர்களாக மாறிபோயிருப்பது காலத்தின் கட்டாயத்தினாலா அல்லது இவர்களும் சுயநலவாதிகளாக மாறிபோய்விட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
comunist sympal
ரஷ்யா, சீனா ஆகிய மிகப்பெரிய கம்யூனிச நாடுகளே, பொது உடைமைக் கொள்கையை பெருமளவில் கைவிட்டு, சந்தைப் பொருளாதாரக் கொள்கையை ஏற்று, மேற்கத்திய நாடுகளுடன் வர்த்தகப் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருகின்றன. இந்திய கம்யூனிஸ்டுகள் இன்னும் பொதுவுடைமை சித்தாந்தம் பேசிக்கொண்டே, நடைமுறையில் அதற்கு நேர்மாறான பாதையில் பயணித்துக் கொண்டு இருப்பது, அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனரா அல்லது மக்களை முட்டாள்களாகக் கருதுகின்றனரா என்று தெரியவில்லை.இந்திய மக்களில், 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை, கடந்த, 66 ஆண்டுகளுக்கும் மேலாக வஞ்சித்து வரும் காங்கிரஸ், அதன், மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து, தனித்து நின்று போராடி, தங்களை மக்களின் உண்மையான நண்பர்கள் என, நிரூபிப்பதை விட்டுவிட்டு, கொள்கைகளற்ற துக்கடா கட்சிகளான மாநிலக்கட்சிகளின் தயவுடன், இந்திய அரசியலில் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள, இடதுசாரி கட்சிகள் முயற்சி செய்வது கேலிக் கூத்தாக இருக்கிறது.

‘அத்தைக்கு மீசை முளைத்தால், சித்தப்பன் ஆகிவிடுவான்’ என்ற நம்பிக்கையில், தேர்தலில் காங்கிரசும், பா.ஜ.,வும் தோற்றுப் போனால் மாநில கட்சிகளுடன் சேர்ந்து, மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற கனவு காண்கின்றன.மொத்தம், 543 உறுப்பினர்களைக் கொண்ட லோக்சபாவில், 20 இடங்களைக் கூட பெற முடியாது என்ற நிலையில், இருக்கும் இவ்விரு கம்யூனிஸ்டுகளும், 50 இடங்களைக் கூட பெற முடியாதிருக்கும் சில மாநிலக் கட்சிகளுடன் இணைந்து, மத்தியில் ஆட்சி அமைக்க நினைப்பது, சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.காங்கிரசினர் செய்த மெகா ஊழல்கள் காரணமாக, மக்கள் மத்தியில் அக்கட்சி, தன் செல்வாக்கை இழந்து நிற்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமராக விஸ்வரூபம் எடுத்து வரும் நரேந்திர மோடி உருவாக்கியிருக்கும் புயலை, இந்த இடதுசாரி கூட்டணியினர் தாக்குப் பிடிப்பரா என்பது, மக்கள் மத்தியில் நிலவும் பிரதானமான கேள்வி.

இதைத் தெரிந்து வைத்திருப்பதால் தான், மோடியின் வளர்ச்சியை வேறு எந்தவிதத்திலும் தடுக்க முடியாது என்பதால், இக்கூட்டணி கட்சிகள் தங்கள் சுயநல அரசியலை மறைத்து, மதவாதத்தையும், மதச்சார்பின்மையையும் கையில் எடுத்து, நேரடியாக மோடியை எதிர்க்கும் திராணியின்றி. அவரது முதுகில் குத்தும் பேடித்தனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரிய கூத்து என்னவென்றால், இரு கம்யூனிஸ்ட்களும் பிற கட்சிகளை முந்திக் கொண்டு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, மூக்கறுக்கபட்டது தான். கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு இடம் ஒதுக்காமல், 40 தொகுதிகளுக்கும் தன் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பிரசாரத்தையும் துவங்கிவிட்டார் ஜெ.,

ஆரம்பமே இப்படி என்றால், போகப் போக இவ்விரு கம்யூனிஸ்டுகளும் கூட்டணியில் அங்கம் வகிக்கப் போகிற மற்ற மாநிலக் கட்சிகளிடமிருந்து, எத்தகைய மரியாதையைப் பெறப் போகின்றனரோ, தெரியவில்லை. கம்யூனிஸ்ட்களுக்கு ஏன் இந்த பரிதாபநிலை?இவ்விரு கட்சிகளுக்கும் ஏழை, எளிய, பாமர மக்களை ஈர்க்கும் சரியான பொருளாதாரக் கொள்கைகள் இல்லை. நம்பகமான சுதேசி வெளியுறவுக் கொள்கை இல்லை.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முற்போக்கு திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை. பொருளாதார ஏற்ற, தாழ்வுகளைப் போக்கி, மக்களை பொருளாதார முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவும், இவர்கள் கைவசம் இல்லை. பிற கட்சிகளிடம் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்தி, அதன் மூலம் ஆதாயம் தேடும் முயற்சியைத் தான் தங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர்.குறுக்கு வழியில் மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து, மூன்றாவது அணி அமைத்து, நாட்டைக் கெடுக்கும் சொக்கட்டான் விளையாட்டில் கவனம் செலுத்துவதை, இவ்விரு கம்யூனிஸ்டுகளும் கைவிட்டு, நாட்டையும், மக்களையும் காக்க முன்வர வேண்டும்.
Email:Krishna_Samy 2010 @ Yahoo.Com

ஜி.கிருஷ்ணசாமி
கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணிநிறைவு), எழுத்தாளர், சிந்தனையாளர்@ தினமலர்