October 16, 2021

நாட்டின் பொருளாதாரத்தை பிரகாசமாக்கும் சிறுதொழில்

சமீபத்திய புள்ளி விவரப்படி, பணிக்கு செல்லும் இந்தியர்களில் சுமார் 20 சதவீதத்தினர் மட்டும்தான் நிலையான மாதாந்திர சம்பளம் வாங்குகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணிகள் இதில் அடங்கும். தனியார் நிறுவனங்களில் பணிb புரிபவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி அமைவதில்லை. 80 சதவீதத்தினர், நிரந்தர வருவாய் இல்லாத தொழில்களைச் சார்ந்திருக்கின்றனர். வரன்முறைப்படுத்தப்படாத இம்மாதிரி தொழில்களில் பிணிக்கான செலவுத் தொகை, பிணிக்கால ஓய்வு மற்றும் ஓய்வு ஊதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகள் கிடையாது.
indian indutry
சமீப காலங்களில், விவசாயத் தொழில், தொழிலாளர்கள் போதிய அளவில் கிடைக்காதது, இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல இடர்ப்பாடுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.விதைக்கும், விற்பனைக்கும் இடையில் எஞ்சி நிற்பது கடன் மட்டும்தான் என்பதால் விவசாய தொழிலாளர்களில் பெரும்பகுதியினர், நகர்ப்புறம் நோக்கி, கூலித்தொழிலாளிகாக படையெடுக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கட்டுமானத் துறையில் தினக்கூலிக்கு பணி புரிகின்றனர்.

தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களாலும்,சில குறிப்பிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகளாலும், தொழில் உற்பத்தி பெருகி வருகிறது. ஆனால், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப, வேலைவாய்ப்புகள் பெருகவில்லை.பல மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை இயந்திரங்கள் செய்து முடித்துவிடுவதும், தொழில் நுட்ப மேம்பாடுகளும் (Technological development) இதற்கான முக்கிய காரணிகளாகும். தொழிற்சாலைகள் பெரும்பாலும் நகர்ப்புறம் சார்ந்தவைகளாக இருப்பதால், கிராமப்புறத்தினருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை.

குறைந்த விலையில் நிலம், தடையற்ற மின்சாரம், வரிச்சலுகை போன்ற பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, தொழிற்சாலைகளை நிறுவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம் மட்டும்தான் மனதில் நிற்கும். அந்தக் குறிக்கோளுக்கு ஏதாவது குந்தகம் நேர்ந்தால், தயவு தாட்சண்யம் இன்றி, தொழிற்சாலையை மூடிவிட்டு, உலகின் மற்றொரு பகுதிக்கு நிறுவனம் புலம் பெயர்ந்து விடும்.

சென்னைக்கு அருகில் செயல்பட்டுக்கொண்டிருந்த நோக்கியா நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது இதற்கு ஓர் உதாரணமாகும். இதனால், சுமார் 7,000 தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். வேலைவாய்ப்புகளுக்கு பெரிய தொழிற்சாலைகளை மட்டும் சார்ந்திருப்பது உகந்தது அல்ல. நகர்ப்புற தொழில் வளர்ச்சியுடன், கிராமங்கள் உள்பட, அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் மூலப்பொருள்கள் சார்ந்த சிறுதொழில்களை அடையாளம் கண்டு, அவற்றின் வளர்ச்சி மேம்படுத்தப்பட்டால், வேலைவாய்ப்புகள் பெருகும்.

தற்போது நாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சுமார் 18 மில்லியன் சிறு தொழில் நிறுவனங்கள் 45 சதவீத உற்பத்தியிலும், ஏற்றுமதியில் 40 சதவீதப் பங்கும் வகிக்கின்றன. மூன்று கோடிக்கும் மேற்பட்டோருக்கு அவை வேலைவாய்ப்பை அளிக்கின்றன. ஆனால், இது அட்சய பாத்திரம் போன்றது என்பதால், இந்தத் துறையின் வளர்ச்சிக்கு நிறைவே கிடையாது (Saturuation level) எனலாம். இதன் தொடர் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், அந்தந்தப் பகுதி சார்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் வல்லமையும் படைத்தது.

இவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அந்த வளர்ச்சி நாட்டின் பல பகுதிகளுக்கும் பயனளிக்கும் வகையில், பரவலாக்கப்பட வேண்டும். சிறுதொழில்களின் பரவலான வளர்ச்சி, நாட்டின் பல்வேறு பகுதிகளின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமநிலைப் படுத்த உதவும். மேலும், நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியால் ஏற்படும் கூடுதல் சுமையையும் குறைக்கும்.

மனித வளம் பெருகி இருந்தாலும், பல்வேறு தொழில்களுக்கு ஏற்ப, பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலான சிறு தொழில்கள் ஒரு நபர் திறமையை சார்ந்தே இயங்குகின்றன. இந்தக் குறையைப் போக்க, பள்ளிப்படிப்பில் தொழில் கல்வி பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதனால், ஆரம்பநிலையிலேயே, தொழில் கல்வியில் மாணவர்களின் ஆர்வம் தூண்டப்பட்டு, அவர்களின் பல்வேறு திறமைகள் அறியப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும். வருங்கால சிறு தொழில் அதிபர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள், பெற்றோரின் பங்களிப்பும் முக்கியமானது.

ஒவ்வொரு சிறு தொழிலுக்கும் தேவையான நிதி உதவி, சரியான தருணத்தில் கிடைக்க வேண்டும். 40 சதவீத சிறுதொழில் நிறுவனங்கள் தங்கள் நிதித் தேவைகளுக்கு தனியார் கடனுதவியையே சார்ந்திருக்கின்றன. கடனுக்கான அதிக வட்டி, சிறு தொழில்களில் ஈட்டப்படும் குறைந்த லாபத்தை விழுங்கி விடுகின்றன.

பெரிய தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்குவதில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வங்கிகள் சிறுதொழில்களுக்கான கடன்களுக்கு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. வங்கிக் கோட்பாடுகள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (Banking Codes and Standards Board of India) வழிமுறைகளின்படி, வங்கிகள் சிறுதொழில்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் தங்கள் ஈடுபாட்டை உறுதி செய்துள்ளன.

இதன்படி, சொத்து பிணையம் கோராமல் 10 லட்சம் ரூபாய் வரையிலான கடனுதவி, சிறுதொழில்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும். திட்டத்தின் வலுவைப் பொருத்து, வங்கிகள், பிணையற்ற கடன் தொகையை ரூ.25 லட்சம் வரை அதிகரிக்கலாம். அடமானத்திற்கு சொத்துகள் இல்லாத நிறுவனங்களுக்கு கடனுதவி கிடைக்கும் பொருட்டு, சிறுதொழில் நிறுவனங்களுக்கான நிதியகம் (Credit guarantee fund for small and medium enterprises)). செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், பெரும்பாலான வங்கிகள் இந்தத் திட்டத்தைப் பற்றி கடன் கேட்போரிடம் விவரிப்பதில்லை. இந்தத் திட்டத்தின் கீழ், எளிய முறையில் சிறு தொழில்களுக்கு வங்கிகள் கடன்களை அதிக அளவில் வழங்குவதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். பெரும் தொழில்களைப் போல், சிறு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய முழுத் தகவல் பரிமாற்ற வசதிகள் இல்லாதது, திட்டங்களின் நுணுக்கங்களை சிறு தொழில் துவங்குபவர்கள், வங்கியிடம் தெளிவுற விளக்க முடியாதது போன்றவைகள் சிறுதொழில்களுக்கான கடன்கள் வழங்குவதில் தடைக்கற்களாக இருப்பதை வங்கித் தரப்பு சுட்டிக் காட்டுகிறது.

கடன் உதவிகளுக்காக வங்கிகளை அணுகுவதற்கு முன்பு, சிறு தொழில் முனைவோர், தங்கள் திட்டங்களைப் பற்றி ஆழப்புரிந்து கொண்டு, வங்கிகள் எழுப்பும் வினாக்களுக்கு தெளிவான பதில்களை வழங்க வேண்டும். அந்த அணுகுமுறை வங்கிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, தேவையான கடன் வழங்க வழி வகுக்கும்.

வங்கிகளின் கடனுதவிச் செயல்பாடுகள், சிறுதொழில்களையும் ஊக்குவிக்கும் விதமாக மேம்படுத்தப்பட வேண்டும். சிறு தொழில்களுக்கான கடன் மனுக்களை ஒதுக்கி வைப்பது என்பது அதிகாரிகளின் தனிப்பட்ட மனநிலை குறைபாட்டை சார்ந்ததாகும். நாட்டின் பொருளாதார, சமூக முன்னேற்றத்தில் சிறு தொழில்களின் முக்கியப் பங்கினை உணர்த்தும் பயிற்சிகளை அதிகாரிகளுக்கு வங்கி நிர்வாகங்கள் அடிக்கடி வழங்கி, இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும்.

வளர்ந்து வரும் பல நாடுகளில், சிறு தொழில்களில் அன்னிய முதலீடுகள், சூழ்நிலைகளுக்கேற்ப அனுமதிக்கப்படுகின்றன. இதனால், சிறுதொழில் வளர்ச்சிக்குத் தேவையான பொருளாதார, தொழில்நுட்ப முதலீடுகள் கிடைக்கப்பெற்று, அவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன.

உள்நாட்டு சிறு தொழில் நிறுவனங்களுக்கு பன்னாட்டு பயிற்சி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுவதால், தொழில்நுட்பப் பரிவர்த்தனைகளும், ஏற்றுமதி வளர்ச்சியும் சாத்தியமாகின்றன. சிறு தொழில் வளர்ச்சிக்கு மற்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை ஆராய்ந்து, இந்திய சூழ்நிலைக்கேற்றவற்றைத் தேர்ந்தெடுத்து அரசு அமல்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்த “சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினரும், சில கிராமங்களைத் தத்தெடுத்து, மேம்படுத்த வேண்டும்.

சிறுதொழில்களுக்கான திறமையை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் பொறுப்பும் இந்தத் திட்டத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டால், விவசாயம் தவிர மற்ற மாற்று சிறு தொழில்களின் வளர்ச்சிக்கும் அது பெரிதும் உதவும்.
சிறுதொழில் துறையின் மூலதனத் தேவைகளுக்கு ஏற்ப புதிய நிதித் திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 2012-இல் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தின் கீழ், 71 சிறுதொழில் நிறுவனங்கள், கடந்த இரண்டு வருடங்களில் 600 கோடி ரூபாய் அளவில் பங்குச் சந்தையில் நிதி திரட்ட முடிந்தது.

வங்கிகளை மட்டும் சார்ந்திராமல், தங்கள் செயல்பாட்டுத் திறன்களை வெளிப்படுத்தி, மேலும் பல சிறுதொழில் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நிதி திரட்ட முற்பட வேண்டும் என்று செபியின் தலைவர் சின்ஹா,சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். பொருள் களைப் பெற்றுக்கொண்ட 45 நாள்களுக்குள் சிறு தொழில் நிறுவனங்களுக்குச் சேர வேண்டிய தொகையை, பெரிய நிறுவனங்கள் பைசல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருந்தபோதிலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள், பெரும்பாலான சிறுதொழில் நிறுவனங்களால் அதைப் பெற முடிவதில்லை.

வசூலாக வேண்டிய தொகைகளை ஏல முறையில் முன்கூட்டியே விற்று பணம் பெறுவதற்கான வசதிகள் அமல் படுத்தப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளது இந்தத் துறைக்கு சற்று ஆறுதலான தகவலாகும். சிறுதொழில்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, பெரிய தொழிற்சாலைகளைவிட அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. பல முதல் தலைமுறை இளம் தொழில் அதிபர்களை உருவாக்கி, அவர்களின் கவனம் வேறு திசைகளில் சிதறாமல் பாதுகாக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தை பிரகாசமாக்குவதில் சிறுதொழில் என்னும் பெரும் பொறியின் பங்கு மகத்தானதாகும். சிறு தொழில்களை ஆதரிப்பதன் அடையாளமாக, பண்டிகைக் காலங்களில் குடும்பத்திற்கு ஒரு கதர் ஆடை வாங்கினால், அது ஆயிரக்கணக்கான நெசவாள சகோதர, சகோதரிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

எஸ். ராமன்