September 18, 2021

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணியை அறிய உதவும் கூகுள் !

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கூகுள், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு ரூ. 500 கோடி வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் .இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணியை அறிய சிறப்பு வசதி ஒன்றை கூகுள் தேடுபொறி நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.
google_lspolls
நாடாளுமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி தொடங்கி மே 12 வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலின் விளம்பரங்களுக்காக மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்தமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 2014 மக்களவை தேர்தலில் சுமார் 81 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில் முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்கள் மட்டும் 10 கோடி. 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்றால் அது 20 கோடியை தாண்டிவிடும். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைதளங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் கணக்கு வைத்திருப்பவர் கள்.தகவல்களை இணையதளத்தில் பறிமாறி கொள்பவர்கள். இந்த இளைஞர் பட்டாளத்தை அரசியல் கட்சிகளும் தற்போது அதிக அளவில் குறிவைக்க தொடங்கியுள்ளன.

இவற்றின் முக்கியத்துவம் கருதி தேர்தல் ஆணையமும் இணையதளங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் “நோ யுவர் கேன்டிடேட்ஸ்’ (உங்கள் வேட்பாளர்களை அறிந்து கொள்ளுங்கள்) என்ற பெயரிலான அந்த தேடலில் தற்போதைய எம்.பி.க்களின் தகவல்களையும் பெறலாம்.

ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து இதற்கான தகவல்கள் பெறப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் வரைபட வசதியில் தகவல் பெற விரும்புவோர் தங்களது இருப்பிட பின்கோடு எண்ணைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறலாம்.இத்தளத்தில் வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் கூகுள் இந்தியா தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.