January 18, 2022

நாங்க தெளிவா இருக்கோம்! – மிஸஸ் விஜயகாந்த் பேச்சு!

திருநெல்வேலியில் நேற்று நடந்த தே மு தி க பொதுக் கூட்டத்தில் மிஸஸ் விஜயகாந்த பேசும் போது, “2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திருநெல்வேலியில் இருந்து தொடங்கியுள்ளேன். 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 8.33 சதவிகிதம், 10.3 சதவிகிதம் என வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டே வந்த தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகளும் விரும்பும் நிலை உருவாகியுள்ளது. அதற்கு தொண்டர் களின் உழைப்பே முக்கிய காரணம்.தொண்டர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் தலைவராக விஜயகாந்த் உள்ளார். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியதால்தான் ஊழலுக்கு சிறிதும் தொடர்பில்லாத தலைவர்களுடன் இணைந்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
dmdk mar 26
தேமுதிக பேரம் பேசியதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். தமிழகத்தில் லஞ்சம்-ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்க வேண்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநில மாக்க வேண்டும், விவசாயிகளை முதலாளியாக மாற்ற புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற பேரத்தைத் தான் எங்கள் கட்சி பேசுமே தவிர பண பேரம் பேசாது.

ஊடகங்களில் வந்ததைச் சொன்னதற்காக வழக்கு தொடுக்க நினைக்கும் திமுகவின் முடிவு சரியானதல்ல. மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அனுப்பிய நோட்டீஸை திமுக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் சட்டப்படி அந்த வழக்கை வைகோ சந்திப்பார்.தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியைப் பிரிக்க பலரும் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்ததும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்வார். அதிமுக, திமுகவுக்கு மாற்று இல்லை என்ற எண்ணத்தில் இருந்த மக்கள் புதிதாக உருவாகியுள்ள கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

தேமுதிக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், பொங்கல் பண்டிகையை ஒரு வாரத்துக்கு பாரம்பரிய விழாவாகக் கொண்டாடச் செய்தல், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துதல், நம்மாழ்வார் விவசாய திட்டம் போன்றவை மக்களுக்கு மிகவும் பயனுள் ளதாக இருக்கும். விஜயகாந்த் தலைமையில் அரசு அமைந்தால் இவை அனைத்தும் திறம்பட செய்து முடிக்கப் படும். இலவசங்கள், பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற நினைக்கிறார்கள். வறுமை இருக்கும் வரை இலவசம் இருக்கும். அதனால் வாக்காளர்கள் சிந்தித்து மாற்றத்துக்காக வாக்களிக்க வேண்டும்.

திருநெல்வேலி மாநகராட்சியில் சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது. பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் போன்றவை சீரமைக்கப்படாமல் உள்ளன. தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. விஜயகாந்த் அணி ஆட்சிக்கு வந்தால் இவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப் படும். பாளையங்கோட்டை-வண்ணார்பேட்டை புறவழிச்சாலை அமைக்கப்படும். வ.உ.சி. மைதானத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும். பாபநாசம், குற்றாலம், மணிமுத்தாறு போன்ற சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்.எனவே, பொதுமக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்துவிடாமல் மாற்றத்துக்காக வாக்களிக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.

முன்னதாக சென்னை ஏர்போட்டில் பேசிய அவர், “விஜயகாந்தை, பிரகாஷ் ஜவடேகர் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தார். 2009-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இருந்ததால் அவர் வந்து சந்தித்தார். மக்கள் நல கூட்டணி தலைவர்களும் ஒருமுறை வந்து சந்தித்தார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தி.மு.க.வுடன் அதிகார பூர்வமாக எங்கேயும் பேசவில்லை.

லஞ்ச, ஊழல் இல்லாத கட்சிகள், நல்லவர்கள் ஒன்று சேர்ந்து பாண்டவர் அணி உருவாக்கப்பட்டு உள்ளது. இதை மக்கள் வரவேற்கின் றனர். இதனால் லஞ்ச, ஊழல் இல்லாத நல்ல ஆட்சியை நாங்கள் கொண்டு வருவோம். மற்றவர்களை போல் முதல்நாள் முதல் கையெழுத்து என சொல்ல மாட்டோம். மக்களுக்கு என்ன தேவையோ அதை விஜயகாந்த் செய்வார். 50 ஆண்டுகளாக நடக்காத பல பிரச்சினைகள் உள்ளன.

தே.மு.தி.க. ஒரு இரும்பு கோட்டை. விஜயகாந்த் ஒரு முடிவு எடுத்தால் அதை கடைக்கோடி தொண்டர்களும் ஏற்பார்கள். தே.மு.தி.க.வை உடைத்துவிடலாம். கலைத்துவிடலாம் என்பது நடக்காது. விஜயகாந்த் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நன்மையாக இருக்கும். நிச்சயமாக வெற்றி பெறுவோம். கிராமப்புற மக்களுக்கு புரிய வேண்டும். அவர்களிடம் சென்று சேரவேண்டும் என்பதற்காகத்தான் ‘விஜயகாந்த் அணி’ என்று அழைக்கப்படும் என வைகோ கூறி உள்ளார். ஊடகங்கள்தான் இதை பெரிதுபடுத்துகின்றன. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பெயரில் ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார்.