October 16, 2021

“நாங்க எப்பவுமே ஃபிரண்ட்ஸ்தான்”.!ராமதாஸ் – கருணாநிதி ஓப்பன் டாக்!

”மணமக்கள் உறுதிமொழி ஏற்கும்போது குறிப்பிட்டார்கள் – “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்த்துக்களோடு இந்த மணவிழாவினை நிறைவேற்றிக் கொள்கிறோம்” என்று கூறினார்கள். அதிலே ஒரு சிறு திருத்தம். “முன்னாள் முதலமைச்சர்” என்று குறிப்பிட்டதற்குப் பதிலாக, என்னையும் ராமதாஸோடு சேர்த்து உங்களுடைய தாத்தா என்று அழைத்திருந்தால் நான் மிகுந்த பெருமை அடைந்திருப்பேன்.அந்தத் “தாத்தா” என்ற முறையில், இந்தக் குடும்பத்தோடு நீண்ட நெடுநாட்களாக பழகி வருகின்ற நான், தாத்தாவின் ஆசீர்வாதமாக, வாழ்த்துரையாக இன்று மணவிழா மேற்கொண்டுள்ள அன்புச் செல்வங்களாகிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கினார்.
karuna oct 30 1
டாக்டர் ராமதாசின் இல்லத் திருமண விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி,”இந்த குடும்பத்தோடு நீண்ட நெடுநாட்கள் தொடர்பு கொண்டவன். அந்த வகையில் ஒரு தாத்தாவாக இருந்து அன்பு செல்வங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும், டாக்டர் ராமதாசுக்கும் இன்று நேற்றல்ல, பல்லாண்டு காலமாக நெருங்கிய பழக்கம் உண்டு.

எங்களுக்குள் கோப, தாபங்கள் ஏற்பட்டாலும், உறவு முறையில் தடங்கல்கள் ஏற்பட்டாலும் எங்களுக்குள் இருக்கும் அன்பு என்றும் குறைந்ததில்லை. உடல் நிலை சரியில்லாத நிலையில் இன்றுநான் வரமுடியுமா? என்று இருந்தேன். அதற்காகத் தான் மு.க.ஸ்டாலினை அனுப்பி எனது வாழ்த்துக்களை கூறி விடுமாறு சொல்லி இருந்தேன்.ஸ்டாலினும் நீங்களும் செல்லுங்கள் என்று கூறினார். உடல் வலியையும் பொருட்படுத்தாமல் இன்று இந்த விழாவில் கலந்து கொண்டேன்.மணமக்கள் மணவிழா ஒப்பந்தத்தை படித்த போது பெரியாரும், அண்ணாவும் எந்த வகையில் மணமக்கள் இருக்க வேண்டும் என்றார்களோ, அந்த நிலை கொஞ்சமும் மாறாமல் வாழ்க்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவுக்கு நான் வரவேண்டும் என்று டாக்டர் அழைத்த போது, நீங்கள் அழைத்தா நான் வரவேண்டும். என் பேத்தி திருமணத்துக்கு நீங்கள் அழைக்க வேண்டுமா? என்று உரிமையுடன் கூறினேன். அந்த உரிமையுடன் மண மக்களை வாழ்த்துகிறேன்.இந்த மண விழாவில் பாட்டாளி சொந்தங்களையும், எனது நண்பர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தார், இயக்கத்தார் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மணமக்கள் தமிழ் போல் தழைத்து என்றும் வாழ்க என வாழ்த்துகிறேன்.”என்று கருணாநிதி பேசினார்.

பின்னர் நன்றி தெரிவித்து டாக்டர் ராமதாஸ் பேசும்போது,”மகிழ்ச்சியில் திளைக்கிறேன் என்பார்கள் அதை இன்று நான் உணர்கிறேன். உடல் நலன் இல்லாததால் கலைஞர் வருவாரா என்று கூறினார்கள். ஆனால் எனக்கு தெரியும். அவர் எப்படியும் வருவார் என்று. அந்த வகையில் நேரில் வந்து வாழ்த்திய அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.92 வயது மூத்த முத்தமிழ் அறிஞர் நேரில் வந்து வாழ்த்து பெறுவது அரிய பேறு. எனக்கும், கலைஞருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். பேரன், பேத்திகளை கடந்து கொள்ளு பேரன்-பேத்திகளை பெற்றவர்கள் நாங்கள். அது யாருக்கு வாய்க்காது. எனக்கும், அவருக்கும் இடையே இருப்பது பழக்க மல்ல-நட்பு.

1989-ல் ஆலிவர்ரோட்டில் உள்ள அவரது வீட்டில் இட ஒதுக்கீடு பற்றி பேசிய நாள் முதல் எங்கள் நட்பு தொடர்கிறது.
எதிர் அணியில் இருந்த போதும் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆனதும் அவரை கைது செய்த போது உடனடியாக விடாவிட்டால் உண்ணாவிரம் இருப்பேன் என்றேன்.அவரை உடனே விடுதலை செய்தார்கள். அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினேன். நாங்கள் எந்த அணியில் இருந்தாலும் எங்கள் நட்பு மாறுவதில்லை. சில நேரங்களில் ஒரே அணியில் இருந்தாலும் ஆக்கப் பூர்வமான கருத்துக்களை நான் சொல்லத் தயங்கியது இல்லை.
karuna oct 30 2
எங்களுக்குள் சிறு வேற்றுமை உண்டு. நான் பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன். அவர் யோசித்து நளினமாக இரு பெ£ருள் படும்படி நயமாக சொல்வார். அப்படி சொல்வதில் எந்த தலைவரும் அவரை மிஞ்ச முடியாது. எங்கள் நட்பின் அடையாளமாக எப்போதும் நினைத்தாலும் அவரை சந்திப்பேன். தொலைபேசி யிலும் தொடர்பு கொள்ள முடியும்.

அந்த அரசியல் பண்பும் நாகரீகமும் அவரிடம் மட்டும்தான் உண்டு. அதில் அவரை மிஞ்ச முடியாது. அவரிடம் இன்னும் நான் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரது உழைப்பு, நேர நிர்வாகம், கட்சியை நடத்தும் பாங்கு ஆகிய மூன்றையும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”என்று அவர் பேசினார்.