September 27, 2021

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பிச்சாரம் செய்வது கிரிமினல் குற்றம்!-தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..

இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தால் வேட்பாளர் இந்திய தண்டனைச் சட்டம் 451 பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார்.அதிலும் ‘‘வாக்கு சேகரிக்கிறோம் என்று கூறி, இரவு 10 மணிக்கு மேல் வாக்காளர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பிரசாரம் செய்கிறார்கள் என்று பொதுமக்கள் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
praveen kumar
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை பயன்படுத்தியோ, ஊர்வலமாக சென்றோ பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷன் விதியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. தனி நபர்களை சந்தித்து இரவு 10 மணிக்கு மேலும் வாக்கு கேட்கலாம் என்று சட்டத்தில் அனுமதி இருக்கிறது. ஆனால், ஓட்டு கேட்கிறோம் என்று கூறிக் கொண்டு, இரவில் வீடுகளின் கதவை தட்டி, அத்துமீறி நுழைந்து பிரசாரம் செய்பவர்கள் மீது பொதுமக்கள் போலீசில் புகார் செய்யலாம்.

தமிழகத்திற்கு 39 பொது பார்வையாளர்கள் வந்துள்ளனர். சொத்து பட்டியலில் வேட்பாளர்கள் தவறான தகவலை கொடுத்தது தெரிய வந்தால் 1 வருடம் சிறை தண்டனை கிடைக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர். இன்னும் சில நாட்களில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு துணை பட்டியலாக வெளியிடப்படும்.