October 22, 2021

நல்லெண்ணெய்யின் மருத்துவகுணங்கள் இவை!

நல்லெண்ணெய் சுவையில் இனிப்பு மேலாகவும், கசப்பு, துவர்ப்பு குறைவாகவும் உள்ளது. குடலில் ஜீரணமான பின்பு ஜீரண இறுதியில் இனிப்புச் சுவையாகவே நிற்கும். உடலில் ஜீரணம் செய்யும் ஜாடராக்னி எனப்படும் பசித் தீ தாதுக்களில் பரவியுள்ள நெருப்பு எல்லாவற்றையும் சீர் செய்யும். செய்கையில் சூடான வீரியமுடையது. குடலில் செரிமானம் ஆவதற்கு முன்பே தாதுக்களில் முற்றிலும் சீக்கிரம் பரவும் சக்தி உள்ளது. உடல் அங்கங்களுக்கு உறுதி, பலம், நல்ல நிறம், பருமன், தெளிவு, உணவில் திருப்தி, குடல்களில் நெய்ப்பு, போக சக்தி இவற்றை உண்டாக்கும்.
nalla oil oct 20
IBS எனப்படும் உபாதையில் பெருங்குடல் பகுதியிலிருந்து அடிக்கடி மலம், வாயு ஆகியவற்றின் வெளியேற்றத்தால் அவ்விடம் வெற்றிடமாக மாறுவதால் அங்கு மறுபடியும் வாயுவின் சீற்றம் ஏற்படுவது இயற்கையே. ஏனென்றால் மலப்பொருளின் தேக்கத்தையுடைய பெருங்குடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மலப்போக்கினால் வெற்றிடம் ஏற்படும் பகுதியில் அபானன் எனும் வாயு நிரம்புகிறது. வாயுவை அடக்குவதில் நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதனால் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் அதாவது சுமார் 10 முதல் 15 மில்லிலிட்டர் வரை நல்லெண்ணெய்யை நக்கிச் சாப்பிடுவதால் அதனுடைய வரவானது பெருங்குடல் பகுதியில் வாயுவினால் ஏற்படும் சீற்றத்தின் உபாதைகளுக்கு அருமருந்தாகப் பயன்படும்.

நல்லெண்ணெய்யை வைத்தே ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஆசனவாய் வழியாகச் செலுத்தி குடலிலிருந்து வாயுவை வெளியேற்றுவதன் மூலமாகவும் வேறு சில நல்லெண்ணெய் மருந்துகளை வாய் வழியாக உள்ளுக்குச் சாப்பிடுவதன் மூலமாகவும் இந்த ஐஆந எனப்படும் உபாதையை நீக்க முடியும்.

நல்லெண்ணெய்யை வெளிப்பூச்சாகப் பயன்படுத்துவதன் மூலமாகவும் குடல்களிலுள்ள வாயுவை தனியே சமனம் செய்யும். ஒருசில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய மஹாமாஷம், தான்வந்திரம், பலா அச்வகந்தாதி, கார்ப்பாசஸ்த்யாதி போன்றவை உடலுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு சிறந்த ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டைச் சூடாக்கி வயிற்றுப் பகுதியின் மீது இதமாகத் தடவி வயிற்றுள்ள தசைப்பகுதிகளை நன்றாகப் பிடித்துவிட்டு சுமார் அரைமணி முக்கால் மணி ஊறிய பிறகு வெந்நீரால் அந்த தசைப்பகுதியை அலம்பிவிடுவதன் மூலமாக குடலின் உட்புறத்திலுள்ள வாயுவின் சஞ்சார விசேஷத்தை நம்மால் மட்டுப்படுத்த முடியும். இதனால் தசைப்பகுதி வலுப்படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

குடல்பூச்சிகளை அழிக்கும் தன்மையுடைய நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துவதனால் கிருமியினுடைய உபாதையினால் ஏற்படும் பெரும் மலப்போக்கானது குணமாகும். முற்றாத வில்வக்காயினுடைய உள்பகுதியிலுள்ள சுளை 5 கிராம், வெல்லம் மூன்று கிராம், நல்லெண்ணெய் 5 மில்லி, அரிசித் திப்பிலி இரண்டு கிராம், சுக்குப்பொடி இரண்டு கிராம் என்ற வகையில் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு குழைத்து காலை, மதியம், இரவு என்ற வகையில் மூன்றுவேளை உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக சாப்பிட்டு வந்தால் இந்த ஐஆந எனப்படும் குடல் உபாதைக்கு ஒரு நல்ல தீர்வைத் தரும்.

தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் மூளைக்கு – புத்தி மேதை, தோலுக்கு மிருது, பளபளப்பு, தசைகளுக்கு உறுதி, கண்களுக்குத் தெளிவு, விசேஷ பலம் முதலியவை உண்டாகும். மூப்பை மிகவும் ஒத்தி போடும். அழுக்கிலிருந்து வெளித்தோலில் ஒட்டிய அணுப்பூச்சிகளையும் அப்புறப்படுத்தும், காணாக்கடி என்ற தோல் நோயைத் தடுக்கும், தலைவலி, காதுவலி, பெண் உறுப்பு வலிகளைத் தீர்க்கும். கருக்குழியைச் சுத்தப்படுத்தி மாதவிடாய் ஒழுக்கைச் சீர்செய்யும். வெள்ளை ஒழுக்கைப் போக்கும். பலவித வெட்டு ரணங்கள் சிதைவுகள் எலும்பு முறிவுகள், தடியடிகள், மிருகக் கடிப்புண்கள் முதலியவற்றின் வேதனையை சமனம் செய்து முறைப்படி ஆற்றிவிடும்.

மேலும் பகுமூத்திரம் என்ற நீரிழிவு நோயில் மூத்திரம் அதிகம் போவதைக் குறைக்கும். கேசம் உதிர்வதைத் தடுத்து, வளர்த்து நன்றாக்கும். சுகமாய் நல்ல நித்திரையைக் கொடுத்து உடனே களைப்பு, சிரமத்தைப் போக்கும். வாயு தோஷத்தை உள்ளுக்குச் சாப்பிடுவதனாலும், வெளியே தேய்ப்பதனாலும் நல்லெண்ணெய் தனியே சமனம் செய்யும். நல்லெண்ணெய்யில் உஷ்ண வீரியம், லேகனம் எனும் சுரண்டுதல் என்ற குணங்கள் உள்ளதால் மற்ற கொழுப்புகளைப் போல இதில் உடலில் கபம் கொழுப்பை அதிகமாக்கும் துர்குணம் கிடையாது. அதிகமான கொழுப்பை தாதுக்களிலிருந்து இழுத்து வெளிப்படுத்தவே செய்கிறது. ஆனால் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர், தலைசுற்றல் மற்றும் கிறுகிறுப்புகளில் தனியாக நல்லெண்ணெய்யை தேய்த்துக் குளித்தால் இந்த உபாதைகள் அதிகமாகும்.

Rajesh Khanna with Jayanthi Jagadeesh