October 16, 2021

நம்ம பிரைம் மினிஸ்டர மோடியோட சொத்து மதிப்பு தெரியுமோண்ணோ?

நரேந்திர மோடி கடந்த 2014–ம் ஆண்டு மே 26–ந் தேதி பிரதமராக பதவி ஏற்றார். அவரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை பிரதமர் அலுவலகம் அறிவித்து இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தின் இணையதள பக்கத்தில் கடந்த 30–ந் தேதி மோடியின் சொத்து குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
modi eat feb 2
அது பற்றிய விவரம்–

* 2015–ம் ஆண்டு மார்ச் 31–ந் தேதி நிலவரப்படி, நரேந்திர மோடிக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 893 ஆகும். அதற்கு முந்தைய ஆண்டு அவரது சொத்தின் மதிப்பு 1 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 288 ரூபாய்.

* 2015–ம் ஆண்டு மார்ச் 31–ந் தேதி நிலவரப்படி மோடியிடம் இருந்த ரொக்க கையிருப்பு வெறும் 4,700 ரூபாய் ஆகும். அதற்கு முந்தைய நிதி ஆண்டில் அவரிடம் ரூ.38 ஆயிரத்து 700 இருந்தது.

* பிரதமர் மோடிக்கு சொந்தமாக மோட்டார் வாகனங்களோ, விமானமோ, படகோ, கப்பலோ கிடையாது.

* அவருக்கு குஜராத்தில்தான் வங்கி கணக்குகள் உள்ளன. டெல்லியில் வங்கி கணக்கு எதுவும் கிடையாது.

* கடன் எதுவும் இல்லை.

* சுமார் 45 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள் வைத்து இருக்கிறார். 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாத நிலவரப்படி அந்த மோதிரங்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 21 ஆயிரம். கடந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி நிலவரப்படி அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 19 ஆயிரமாக குறைந்து விட்டது.

* ரூ.20 ஆயிரத்துக்கு எல் அண்டு டி இன்ப்ரா சேமிப்பு பத்திரமும், ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்துக்கு தேசிய சேமிப்பு பத்திரமும், ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்துக்கு ஆயுள் காப்பீடு பத்திரமும் வைத்து இருக்கிறார்.

* பாரத ஸ்டேட் வங்கியில் 94 ஆயிரத்து 93 ரூபாயும், ராஜ்கோட் நக்ரிக் சகாரி கூட்டுறவு வங்கியில் 30 ஆயிரத்து 347 ரூபாயும் அவரது பெயரில் வைப்புத்தொகையாக உள்ளது. இதுதவிர பாரத ஸ்டேட் வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக 30 லட்சத்து 72 ஆயிரத்து 17 ரூபாய் இருக்கிறது.

* அவருக்கு இருக்கும் அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.41 லட்சத்து 15 ஆயிரம் ஆகும்.

* குஜராத் மாநிலம் காந்தி நகரில் மோடிக்கு சொந்தமாக 3,531.45 சதுர அடி நிலம் உள்ளது. இதில் 169.81 சதுர அடியில் சிறிய கட்டிடம் உள்ளது. இது பூர்வீக சொத்து அல்ல. 2002–ம் ஆண்டு அக்டோபர் 25–ந் தேதி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 488 விலையில் இந்த நிலத்தை அவர் வாங்கினார். பின்னர் நிலத்தை மேம்படுத்தி அதில் சிறிய கட்டிடம் கட்டியதை தொடர்ந்து அதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 208 ஆனது. தற்போது அந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். அதாவது, 13 ஆண்டுகளில் அந்த நிலத்தின் சந்தை மதிப்பு 25 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து இருக்கிறது.

* மோடிக்கு சொந்தமாக வேறு வீட்டு மனைகளோ, விவசாய நிலமோ கிடையாது.

* மோடியின் மனைவி யசோதாபென்னின் சொத்து குறித்த விவரம் எதுவும் பிரதமர் அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்படவில்லை. அதுபற்றிய ‘விவரம் தெரியாது’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.