September 20, 2021

நம்மூரிலிருந்து களவு போன கண்டுப் பிடிப்பு – ஷுவிலிருந்து மின்சாரம்!

சில ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் பணகுடி, ரோஸ்மியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ரம்யா. இவரும் இவரது அறிவியல் ஆசிரியை அந்தோணி பிரேமாவும் இணைந்து உருவாக்கிய, இந்த எளிய படைப்பு மின்சாரம் தயாரிப்புக்கு புதிய உத்தியாகும். அதாவது தரையில் பாதத்தை அழுத்தும்போது உருவாகும் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து விளக்குகளை எரியவைக்கும் (Electricity from Footsteps).
power shoe
இத் தொழில்நுட்பம் குறித்து ரம்யா கூறும்போது, “மின்சாரத் தேவை அதிகரித்திருக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தியை மேற்கொள்ள புதிய திட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் மனிதர்கள் நடக்கும்போது பாதங்கள் தரையில் கொடுக்கும் அழுத்தத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எண்ணம் உருவானது. அது தொடர்பான மாதிரியை உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.
பின்னர் அவருக்கு யாரும் போதிய அளவு ஊக்கம் கொடுக்காததால் ரம்யா அப்கிரெட் பண்ணவில்லை.

இந்நிலையில் நாம் நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தைக் கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்று வழக்கம் போல் உரத்த குரலில் சொல்லி அதற்கு ஏற்ப ஷூக்கள் உருவாக்கபட்டுள்ளதாக கனடா ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். இதை அணிந்து கொண்டு நடந்தால் இதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகி ஷூ-வோடு இணைக்கப்பட்டுள்ள பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தைக் கொண்டு ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் கேமரா போன்ற குறைந்த மின் பயன்பாடுகள் கொண்ட சாதனங்களை இயக்கலாம். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கையோடு சார்ஜர் அல்லது பவர் பேங்கை தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை.இந்த ஷூ வை மாட்டிக்கொண்டு நடந்தால் போதும். உடனடி மின்சார தேவைக்கு ஓடவும் செய்யலாமாம். ஹு.. இதைதான் நம்மூர் ரம்யாவும் சொன்னார்.