April 12, 2021

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்..

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திராணாமுல் காங்கிரஸ் கட்சியும், எப்படியாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, நான் எப்போதும் நந்திகிராமில்தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவேன். அந்த அளவுக்கு அது எனக்கு ராசியான தொகுதி. வரும் சட்டசபை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போகிறேன். முடிந்தால், தற்போது நான் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பவானிப்பூர் (கொல்கத்தா) தொகுதியிலும் கூடுதலாக போட்டியிடுவேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த மார்ச் 5-ம் தேதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியீட்டது. அதில், பானர்ஜி நந்திகிராமில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நந்திகிராம் தொகுதி, கடந்த 2000-ம் ஆண்டுகளில், கம்யூனிஸ்டு ஆட்சிக்காலத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிராக நடந்த போராட்டங் களால் பிரபலமான தொகுதி ஆகும். அந்த போராட்டங்கள்தான், 2011-ம் ஆண்டில் மம்தா பானர்ஜி ஆட்சியை பிடிக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இத்தொகுதியில் மனுத் தாக்கல் செய்த பின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி சிலரால் தள்ளிவிடப்பட்டுள்ளார்.இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “நான் காரில் ஏற முயன்றபோது என்னை நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டனர். எனது காலைப் பாருங்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல். நிச்சயமாக இதில் சதி இருக்கிறது. என்னைச் சுற்றி திடீரென்று காவலர்கள் யாருமே இல்லை” என்றார்.

ஆனால் பா.ஜ.க இது குறித்து கூறுகையில், மம்தா வேட்புமனு தாக்கல் செய்தது முதல் அவர் காரில் ஏறிய வரை 300 போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். தேர்தல் என்பதால் அனுதாப அலை ஏற்படுத்த நாடகம் ஆடுகிறார்” என்றனர்