September 27, 2022

நதிகள் இணைப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய நதிகள் இணைப்பு திட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரின், விவசாயிகளின் கனவு. பல ஆண்டாக இதுபற்றி பேசினாலும் ஒரு தீர்வும் வரவில்லை. ஆனால், சந்திரபாபு நாயுடு, ஐந்தே மாதத்தில் முழுமூச்சாக அதே சிந்த னையாக இருந்து கோதாவரி – கிருஷ்ணா நதிகள் இணைப்பை நிறைவேற்றி சாதித்து காட்டியுள்ளார்; இதை நாடு முழுவதும் பாராட்டி உள்ளனர். ஒரு முதல்வர் முயற்சி செய்தால் இப்படி ஒவ்வொரு மாநிலமும் நதிகள் இணைப்பை கூட செய்ய முடியாதா என்ன? என்று விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்….
Water-transfer-links
இத்தனைக்கும் தமிழகத்தில் வேளாண் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படுத்துவதாக அறிவிப்பு வருகிறது; ஆனால் ஏட்டளவில் தான் உள்ளதே தவிர, செயல்பூர்வமாக எங்கும் காணமுடியவில்லை என்பதும் விவசாயிகளின் வேதனை குரல். இதனால், வேறு வழியில்லாமல், பெரும்பாலான உணவு பொருட்களுக்கு நாம் அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமி ழகத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு 60 லட்சம் ஹெக்டேருக்கு மேல் இருந்த விவசாய நிலப்பரப்பு தற்போது 47 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த நீராதரத்தில் 3 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. ஆனால், மொத்த பாசன பரப்பு 33.11 லட்சம் ஹெக்டேராக உள்ளது. நெற்களஞ்சியமான திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரியில் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே விவசாயம் சாத்தியம். மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் கேரளாவின் முல்லை பெரியாறு அணையையும், கோவை, திருப்பூர் மாவட்டங் கள் பரம்பிக்குளம் – ஆழியாறு அணைகளையும், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் பவானி ஆற்று பாசனத்தையும் நம்பி யிருக்க வேண்டியுள்ளது.இது தான் தமிழகத்தின் இன்றைய நிலை; இதை மாற்ற முடியுமா? ஏன் முடியாது; பக்கத்து மாநிலங்களில் செய்வதை காப்பி அடித்தால் கூட நம்மால் சாதிக்க முடியும் என்றெல்லாம் இன்றளவும் சொல்லி வருகிறார்கள்

இந்நிலையில் நீர்வள அமைச்சகத்தின் நதிகள் இணைப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.அதாவது நாட்டில் உள்ள நதிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் இணைக்க வேண்டும், நதிகள் இணைப்பு தொடர்பாக திட்டம் தீட்டி செயல்படுத்துவதற்கு உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2012–ம் ஆண்டு, பிப்ரவரி 27–ந்தேதி தீர்ப்பு அளித்தது. அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியது.இந்த உயர் மட்டக்குழுவில், மத்திய நீர்வளத்துறை அமைச்ச, அந்த துறைக்கான செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், நீர்வளத்துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம், திட்ட கமிஷன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நியமிக்கும் 4 நிபுணர்கள் இடம் பெற வேண்டும் என தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.அத்துடன் உயர் மட்டக்குழுவில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களை சேர்ந்த விவசாயம், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மந்திரிகளும், முதன்மை செயலாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இதன்படி, மத்திய அரசு உயர் மட்டக்குழுவை அமைத்துள்ளது.இந்த உயர்மட்டக்குழு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில், கூடி, நதிநீர் இணைப்பு குறித்து விவாதிக்க வேண்டும். இதில் விவாதிக்கக் கூடிய விஷயங்கள் குறித்து, பதிவு செய்து பராமரித்து வர வேண்டும்.நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்து வது பற்றியும், அது தொடர்பான விதிமுறைகளை வகுப்பது குறித்தும் விவாதித்து மத்திய அரசுக்கு அறிக்கை தர வேண்டும்.இந்த நிலையில், நதிகள் இணைப்பு தொடர்பான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் நிலவரம், முன்னேற்ற அறிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இந்த அறிக்கை 6 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய மந்திரிசபையின் தகவலுக்காக அளிக்கப்படும்.இது தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை கண்காணிப்பதற்கு உதவும். மேலும் இந்த அறிக்கை, நாட்டு நலனையொட்டி நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கு ஏற்ற வகையில், திட்டம் தொடர்பாக இறுதி முடிவுகளை எடுப்பதை உறுதி செய்யும் என்று நம்பிக்கைக் கொள்ள செய்கிறார்கள்.. ம். பார்ப்போம்.