September 17, 2021

நடிகர் ரஜினியை வீடு தேடி போய் சந்தித்தார் மோடி!

தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.முன்னதாக இந்த சந்திப்பை விமான நிலையத்தில் வைத்துக் கொள்ள ரஜினி மறுத்து விட்டதால் மோடி வீடு தேடி போனதாகவும் ‘இல்லையில்லை.. மோடியே போயஸ்கார்டனில் ரஜினியை மீட் பண்ண விரும்பினார்’ என்றும் செய்திகள் வெளியாகிறது
modi met rajni.1
சென்னை – போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.35 மணிக்கு நடந்த இந்த சந்திப்பின் போது ரஜினியின் வீட்டுக்குள் மோடியின் கார் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் பட்டது. உடன் வந்த பாஜகவினரின் மற்ற கார்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டன.

மேலும் இந்தச் சந்திப்பில் ரஜினியும் மோடியும் பேசியதன் விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. அதே சமயம் ரஜினியின் இல்லத்துக்குச் சென்று திரும்புவதற்குள், ரஜினி உடனான சந்திப்பின் புகைப்படப் பதிவு உடனடியாக மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது. ‘ரஜினி உடன்’ என்று பதிவிடப்பட்ட மோடியின் அந்த ட்வீட், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது.மேலும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்திதத்தாக பாஜகவினர் கூறினர்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து நடிகர் ரஜினி கூறுகையில், மோடியுடனான சந்திப்பில் அரசியல் கிடையாது. எனக்கு உடல்நிலை சரியில்லாத போது, தன்னை மோடி சந்தித்தார். தற்பாது அவர் என்னை சந்திக்க வந்துள்ளார். சென்னை வந்த அவரை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தேன். அவர் என்னுடைய நலம் விரும்பி. நான் அவருடைய நலம் விரும்பி. மோடி சிறந்த நிர்வாகி மற்றும் தலைவர், மோடி நினைப்பது வெற்றியடைய வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்