October 16, 2021

நடப்பு நாடாளுமன்றம் பற்றிய மினி ரிப்போர்ட்!

15வது நாடாளுமன்றம் மிக மோசமாகச் செயல்பட்டிருக்கிறது. அது கூடிய நாட்களை விடவும் ஒத்திவைக்கப்பட்ட நாட்களே அதிகம். மிகக் குறைவான சட்டமுன்வரைவுகளே இந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிர் இட ஒதுக்கீடு, ஊழல் தடுப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல முக்கியமான சட்ட முன்வரைவுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, உழைப்பாளிகளின் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டப் பணமாக மாற்றுதல் உள்ளிட்ட கார்ப்பரேட் நலன் காக்கும் சட்டமுன்வரைவுகள் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
parliment clean
இதற்கு ஆளும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி, பெரிய எதிர்க்கட்சியான பாஜக இரண்டுமேதான் கூட்டுப் பொறுப்பு. நாடாளுமன்றம் கூடியபோதெல்லாம் அமளியில் ஈடுபட்டு, மக்கள் பிரச்சனைகள் எதையும் பேசவிடாமல் கெடுத்தது பாஜக. அந்த அமளி நல்லதுதான் என்று அதற்கு சாதகமாக நடந்துகொண்டு, மக்கள் பிரச்சனைகள் விவாதிக்கப்படுவதிலிருந்து நழுவியது காங்கிரஸ். சீத்தாராம் யெச்சூரி சொன்னது போல இது இவ்விரு கட்சிகளுக்கிடையேயான ‘மேட்ச் ஃபிக்ஸிங்.’ “நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவுற மாதிரி அழு… ரெண்டு பேருமா சேர்ந்து உள்நாட்டு-வெளிநாட்டுப் பெருமுதலாளிகள் ஆசையை நிறைவேத்திடுவோம்,” எனும் மோசடியாட்டம்.

காங்கிரஸ் ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் ஏற்படும் அதிருப்தியை பாஜக அரசியல் அறுவடையாக்க முயல்கிறது. பாஜக-வின் மதவாத அரசியலைக் காரணம் காட்டி, மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று மறுபடியும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற மிதப்பில் இருக்கிறது காங்கிரஸ். இப்படியும் ஒரு கொடுக்கல் வாங்கல். நாடாளுமன்ற முடக்கல் இதற்கும் உதவியாக இருக்கிறது.

2001ல் நடைபெற்ற நாடாளுமன்ற/மாநில சட்டமன்ற தலைவர்கள், முதலமைச்சர்கள், கட்சிகளின் நாடாளுமன்ற/சட்டமன்ற தலைவர்கள் மாநாடு, ஆண்டுக்குக் குறைந்தது 110 நாட்கள் நாடாளுமன்றம் செயல்படுவதை உறுதிப்படுத்துகிற சட்டம் தேவை என்று வலியுறுத்தியது. இன்று வரையில் அது நிறைவேறவில்லை.

அமெரிக்க நாடாளுமன்றம் சராசரியாக ஆண்டுக்கு 140 நாட்கள் கூடுகிறது. பிரிட்டனில் 160 நாட்கள் கூடுகிறது. அந்த நாடுகளிலும் போதுமான நாட்கள் சபை கூட்டப்படுவதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மக்கள் தேர்தலில் பங்கேற்று பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது தங்களுக்காக அவர்கள் நாடாளுமன்றத்தில் வாதாடுவார்கள் என்பதற்காகத்தான். விவாதிக்காமலே சபையைக் கலைப்பதற்காக அல்ல. ஆனால் சபை முடக்கப்படுவதன் மூலம் அந்த மக்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.

இந்தப் போக்கு நீடிக்குமானால், நாடாளுமன்ற அமைப்பின் மீதே மக்களுக்கு அவநம்பிக்கையும் வெறுப்பும்தான் ஏற்படும். அந்த வெறுப்பு, புரட்சிகரமான அரசியல் மாற்றங்களுக்கு இட்டுச் செல்லுமானால் ஆரோக்கியமானது. மாறாக, சர்வாதிகாரமே மேல், மன்னராட்சியே நல்லது, அதிபர் அதிகார முறையே சிறந்தது என்று வரலாற்றைப் பின்னோக்கி இழுக்குமானால் அது நாட்டிற்குக் கேடு.

தாங்கள் அவமதிக்கப்படுவது பற்றிய கோபம் மக்களுக்கு வரவேண்டும். முறையாகச் செயல்படாத பிரதிநிதியைத் திரும்ப அழைத்துக்கொள்கிற சட்டம் வருவதற்காகக் களமிறங்கிப் போராட வேண்டும். அரசியல் விழிப்போடு மக்கள் அப்படி கோபம் கொண்டு எழுந்துவிட்டால் மாற்றங்கள் நிச்சயம். அந்த ஆக்கப்பூர்வ கோபத்தை மூட்டுவதே கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரிகள், முற்போக்கு இயக்கங்கள் பணி…

-திங்களன்று (பிப்.3) ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் ‘மக்களின் குரல்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சுகிதாவுடனான உரையாடலில் Kumaresan Asak முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

Kumaresan Asak