September 27, 2021

த.நா.காங்.தலைவராகிறார் குஷ்பு!

திமுக தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து திடீரென வெளியேறிய நடிகை குஷ்பு , கொஞ்ச மாதங்கள் எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார், இதனிடையே காங்கிரஸ் தரப்பில் ’தமிழ்நாடு தலைவர் பதவி’ தருவதாக உறுதிக் கூறப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தொடர்ந்தே அண்மையில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாராம் நடிகை குஷ்பு, இதையடுத்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை  சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை பெற்றவர் ‘எக்காரணம் கொண்டும் தி.மு.க.வை விமரிசிக்க மாட்டேன்’ என்றாராம். அப்போது அவரிடம் ராகுல்,”ஓ.கே.ஆனால் சக தலைவர்கள் தி.மு.க.வைப் பற்றி பேச மறுப்புச் சொல்லக் கூடாது”என்று சொன்னதை குஷ்பு ஆமோதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
kusboo TN
திமுகவில் முக்கிய அந்தஸ்துடன் வலம் வந்த நடிகை குஷ்பு அக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து ஒரு பேட்டி கொடுத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.அப்போது திருச்சியில் நடந்த திருச்சி சிவா எம்பி மகள் திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்ற குஷ்புவை ஸ்டாலின் ஆதரவாளர்கள் விரட்டி விரட்டி அடித்து அவர் மீது செருப்பையெல்லாம் வீசியதுடன் சென்னையில் அவரது வீட்டில் கற்களை வீசி தாக்கினார்கள்.அப்போது திமுக தலைவர் கருணாநிதி அவருக்கு ஆதரவாக இருந்தாலும் தொடர்ந்து குஷ்பு புறக்கணிக்கப்பட்டார். அவரை முக்கியமான பொதுக்கூட்டங்களுக்கோ,நகரில் நடந்த  போராட்டங்களுக்கோ அழைப்பதில்லை. அத்துடன் நாடாளுமன்ற தேர்தலின் போது அவரை பிரசாரத்துக்கு கூட அழைக்கவில்லை.இதனிடையே, ஸ்டாலின் குடும்பத்து பெண்மணிகள் இருவர் குஷ்புக்கு போன் செய்து தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பட்டதையடுத்து அவர் திமுகவில் இருந்தே அதிரடியாக விலகினார்
பின்னர் சினிமா, டி.வி தொடர்கள் தயாரிப்பு என பிஸியாக இருக்கும் குஷ்புவை தமிழக காங்கிரஸ் தலைவரான ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேரடியாக தொடர்பு கொண்டு ‘காங்கிரஸில் சேரலாமே?’என்று கேட்ட போது,” அப்படிச் சேர்ந்தா என்னை லீடரா ஆக்குவீங்களா? என்று கேட்டார். அதைக் கேட்டு அசராத ஈவிகேஎஸ்,”தாராளமா இந்தப் பொறுப்பை எடுத்துக்கங்க.. உங்களுக்கு சம்மதம் என்றால் நான் மேலிடத்தில் பேசுகிறேன்” என்றதும் குஷ்பு மவுனமாகி விட்டார். இதையடுத்து நடிகர் கார்த்திக் மூலம் அடுத்தடுத்து நான்கு முறை பேச்சு வார்த்தை நடந்தது. அதன் ஒரு கட்டமாக பேச வந்த கார்த்திக்கை காங்கிரசில் இணைய வந்ததாக மீடியாவிடம் மாட்டி விட்டது தனிக் கதை.
குஷ்புவிடம் நடந்த பேச்சுவார்த்தையின் போது போட்ட கண்டிசனில் முக்கியமானது,”நான் சோனியா முன்னிலையில்தான் கட்சியில் இணைவேன்” ’இணைந்த ஒரு மாதத்தில் தலைமைப் பொறுப்பை கொடுக்க வேண்டும்”என்பது உள்ளிட்ட எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட ஈவிகேஎஸ். மேலிடத்தில் “தமிழகத்தில் ஜெ.,ஆட்சியையும், பா.ஜ.தமிழக தலைவர் தமிழிசையையும் மட்டுமின்றி,பிரிந்து சென்ற வாசன் குரூப்பையும் சமாளித்து காங்கிரஸைப் பலப்படுத்த சரியான சாய்ஸ் குஷ்பு” என்று சொன்னதை ராகுல்,சோனியா ஒப்புக் கொண்டதையடுத்து இணைப்புப் படலம் இனிதே முடிந்ததாம்.விரைவில் அடுத்த நடவடிக்கையாக தலைவி பொறுப்பேற்கும் படலம் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நடக்கும் என்றும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரம் தெரிவிக்கிறது.
தகவல் உதவி :ப்ரீத்தி@http://jannalmedia.com/dpages.php?id=2724