May 15, 2021

தொடக்கப்பள்ளி முதலே கட்டாய பாடமாகும் விவசாயம்! – ஒடிசா முடிவு

இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் வகிக்கும் பங்கு நமக்கெல்லாம் தெரிந்ததுதான். கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்கள் வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்திய விவசாயத் துறை இன்றைய நாளிலும் இந்தியத் தொழிலாளர் களில் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.
edu 26


உலகின் விவசாய உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த சிலவருடங்களாக பல்வேறு உணவுப்பொருள்களின் உற்பத்தியிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒரு காலத்தில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் பெரும்பங்கு வகித்தது. ஆனால் கடந்த சில தசாப்தங்களாக விவசாயத்தின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது. 1990-91ல் 30 சதவிகிதமாக இருந்த இது 13.7 சதவிகிதமாக (2012-13) சுருங்கிவிட்டது

மேலும் விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக பணி புரிவோர் எண்ணிக்கை 1999-2000 மற்றும் 2011-12 ஆகிய காலத்துக்கு இடையிலான காலத்தில் 60 சதவீதமாக இருந்தது 49 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அசோசேம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்தான் மாணவர்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ஒடிசா மாநிலத்தில் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை விவசாயத்தை கட்டாய பாடமாக்கும் அரசு உத்தரவு விரைவில் வெளியாக இருக்கிறது.

கல்காந்தி மாவட்ட தலைநகர் பவானிபாட்னாவில் அமைந்துள்ள அரசு வேளாண் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய மாநில வேளாண்துறை அமைச்சர் பிரதீப் மகாரதி இத்தகவலை தெரிவித்தார்.

விழாவில் மேலும் அவர் பேசுகையில், “விவசாய கல்வியின் மூலம் உயிரி உரங்கள் மற்றும் மண் சோதனைகள் போன்ற விவசாயம் தொடர்பான அடிப்படையான விஷயங்கள் கற்றுத்தரப்படும்“ என்றார்.

விழாவில் கலந்துக்கொண்ட ஒடிசா விவசாய மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மனோரஞ்சன், மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டுமென்றும் அரசு வேளாண் கல்லூரியை சிறந்த கல்லூரியாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளிடம் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.