December 6, 2022

தேவையில்லாமல் குளறுபடிகளைச் செய்கிறார்கள்!(கொங்கும் அருந்ததியரும்…!)_

தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வன்னியர் – பறையர் என்பதைப் போல தெற்கில் தேவர் – தேவேந்திர குல வேளாளர் என்று சாதியக் கட்டமைப்பு இருப்பது போல, மேற்கை எடுத்துக் கொண்டால் கொங்கு வேளாளர் – அருந்ததியர் என்கிற கட்டமைப்பு. கொங்கு வேளாளர்களின் நிலங்களில் காலங்காலமாக ஊழியம் செய்து வரும் அருந்ததியர்கள் ஒப்பீட்டளவில் பறையர் களை விடவும், பள்ளர்களை விடவும் பல படிகள் கீழே இருக்கிறார்கள். எதில் ஒப்பீடு செய்வது என்றால் எல்லாவற்றிலும் தான். கல்வி, வேலை வாய்ப்பு, வசதி என எதையும் ஒப்பிடலாம். வடக்கிலும் தெற்கிலும் தலித் மக்களிடையே இருக்கும் அரசியல் விழிப்புணர்வு மேற்கில் இருக்கும் அருந்ததிய மக்களிடையே இல்லை என்பதுதான் உண்மை நிலை.

கொங்குப் பகுதியில் ‘அவங்களுக்கு என்ன மேலே வந்துட்டாங்க’ என்று அருந்ததியர்களைச் சுட்டிக் காட்டிப் பேசுவதை மிக இயல்பாகக் கேட்க முடியும். அருந்ததிய இளைஞர்கள் பலரும் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். பெரும்பாலும் சுற்று வட்டாரத்தில் இருக்கக் கூடிய மில்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். வெளிப்படையாகச் சாதி தெரிந்தால் ஓட்டல்கள், கடைகளில் ‘புழங்காத சாதியினரை’ வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த விதத்தில் மில்களும், தொழிற்சாலைகளும் சற்றுப் பொருத்தமானவை. இப்பொழுது பல அருந்ததிய இளைஞர்கள் பைக் வைத்திருக்கிறார்கள். செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு ‘அவங்களுக்கு என்ன?’ என்கிறவர்கள் அதிகம்.

வெறுமனே பைக் வைத்திருப்பதும், வீட்டில் தொலைக்காட்சி வைத்திருப்பதும்தான் சமூக முன்னேற்றமா? அருந்ததிய மக்களில் அடிப்படையான அரசியல், சமூகக் கட்டமைப்பு புரிந்த, தம் இன மக்களைச் சமூக நீதி அடிப்படையில் மேலே கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் மிகுந்த இளைஞர்கள் மிகக் குறைவு. அப்படியொரு விழிப்புணர்வு மேற்குப் பகுதியில் ஏற்படவே இல்லை என்பதுதான் பரிதாபகரமான உண்மையும் கூட.

கொங்கு மண்டலத்தில் ‘அருந்ததியரை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம்; எங்களுக்குள் எந்தப் பிரச்சனையுமில்லை’ என்று நிறையப் பேர் பேசுவதைக் கேட்க முடியும். இதை எழுதிய பிறகு குறைந்த பட்சம் நான்கைந்து கவுண்டர்களாவது ‘நாங்கதான் எங்கள் தோட்டத்தில் பணியாற்றிய பழனியின் பேத்தி திருமணத்தை நடத்தி வைத்தோம்’ ‘சுக்காவின் மகனைப் படிக்க வைத்தோம்’ என்றெல்லாம் எதிர்வினை ஆற்றுவார்கள். ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ளக் கூடிய எதிர்வினை தான் இது. தலைமுறை தலைமுறை யாகத் தோட்டத்தில் பணியாற்றிய வன் இன்னமும் தம் பேத்தியின் திருமணத்துக்கும், மகனின் படிப்பு க்கும் அடுத்தவர்களின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற உண்மையை வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ‘இதையெல்லாம் செஞ்சு கொடுக்கிறோம் தெரியுமா?’ என்பதுதான் வாதமாக இங்கு முன் வைக்கப்படுகிறது. ஒரு வகையில் இது உறிஞ்சுதல் இல்லையா?

‘நீங்க எல்லாம் வேலைக்குப் போய்ட்டா நாங்க எப்படி விவசாயம் பண்ணுறது? பொழைக்கிறது?’ என்கிற கேள்வியின் நாசூக்கான வடிவங்களைப் பல வகைகளில் எதிர் கொண்டபடியே இருக்கிறோம். அருந்ததியர்கள் தேர்தல் ஒதுக்கீட்டின் வழியாக உள்ளாட்சிகளில் இடம் பெறுவது, திருமண மண்டபத்தில் அனுமதி கேட்பது என எல்லாமே பலருக்கும் ஒவ்வாமை தான். இது வரை வரையப்பட்ட கோடுகளை விட்டு வெளியே கால் வைக்கிறார்கள் என்கிற பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. மறுக்க முடியுமா? ‘எங்க தாத்தன் காலத்துல செருப்புக் கூட போடாம இருந்தவன், இன்னைக்கு பைக்கில் லிஃப்ட் கேட்கிற அளவுக்கு வளர்ந்துட்டான்’ என்பதே கூட ஏகப்பட்ட விடலைகளை எரிச்சல் அடையச் செய்கிறது.

சமூக வளர்ச்சி, சமத்துவம் என்கிற சொற்கள் வெறுமனே பைக், செல்ஃபோன் என்பதில் இல்லை. அது பணத்தால் மட்டும் எடை போடப் படுவதில்லை. அவர்களுக்கான மரியாதை, சமூக அந்தஸ்து, சமூகத்தில் நிலவும் உரிமைகள் என பல காரணிகளைச் சார்ந்தது. ஒரு ஆதிக்க சாதி இளைஞனுக்குக் கிடைக்கக் கூடிய எல்லாமும் ஒரு தலித்துக்குக் கிடைக்கிறதா? இன்னமும் குறிப்பாகக் கேட்டால் ஒரு கவுண்டர் இன இளைஞனுக்குக் கிடைக்கும் உரிமையும், சமூக அந்தஸ்தும் அருந்ததிய இளைஞனுக்குக் கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கு ஆம் என்ற பதில் கிடைக்கும் வரை இங்கு சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்றுதான் அர்த்தம். அது வரைக்கும் என்னதான் ‘கவுண்டர்கள் நல்லவர் கள்’ என்று சொன்னாலும் ‘அவர்களைக் கமுக்கமாக அமுக்கியே வைத்திருக்கும் சாதிதான் இது’ என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கும்.

இத்தகைய விமர்சனத்தை முன் வைத்தால் ‘அதான் நாங்க பிரச்சனை இல்லாமல் இருக்கிறோமே? அப்புறம் ஏன் வம்பு பேசறீங்க?’ என்ற கேள்வி எழுப்பப்படக் கூடும். அவர்களிடம் ‘வீட்டுக்குள்ள விடுவீங்களா? அவர்களுக்கு நீங்கள் குடிக்கும் அதே டம்ளர்ல தண்ணி தருவீங்களா?’ என்று கேட்டால் அதிர்ந்து போவார் கள். பிரச்சனையில்லாமல் இருக்கிறோம் என்பதன் ஆழமான அர்த்தம் – அவர்கள் இன்னமும் தங்களுக்கு அடங்கியே இருக்கிறார் கள் என்பதுதான். ‘வீட்டுக்குள் விட்டுவிட்டால் உரிமை கிடைத்து விடுமா?’ என்கிற குறுக்குக் கேள்வி எழாது என நினைக்கிறேன்.

இது அடிப்படையான எளிய கேள்வி. அதே சமயம் பதில் சொல்ல விரும்பாத கேள்வி. துணிந்து அதற்கான பதிலை நம்மால் சொல்ல முடியுமென்றால் மட்டுமே சமூக சமத்துவம் என்பதன் நுனியையாவது பிடித்திருக்கிறோம் என்று அர்த்தம். அது வரைக்கும் ‘நாங்க நல்லவங்க’ என்று சொல்லிக் கொள்வது கூட சமூகத்தை ஏமாற்றுகிற சால்ஜாப்புதான். அருந்ததியர்கள் அமைதி யாக இருப்பதால்தான் இவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். இன்ன மும் அப்பட்டமாகப் பேசினால், வடக்கிலும் தெற்கிலும் உரிமைகளை உரக்கக் கேட்கும் குரல் கள் மேற்கில் இல்லை என்பதுதான் கொங்குப் பகுதியில் பெரும்பாலானவர்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. அதனால் தான் யாராவது ‘இதெல்லாம்தான் வளர்ச்சியா?’ என்னும்போது பதறி விடுகிறார்கள். தேவையில்லாமல் குளறுபடிகளைச் செய்கிறார்கள் என்று கோபமாகிறார்கள். எங்கேயாவது யாராவது ஒன்றிரண்டு இடங்களில் துள்ளும்போது அவர்களை அடக்க, ஏவல் புரிய அரசும், ஆளும் வர்க்கமும், அதிகாரி களும் இருக்கிறார்கள்.

இதுதான் கள நிலவரம்!
இதுதான் கள எதார்த்தம்!!

வழக்கறிஞர் அசோக்குமார்
துடி இயக்கம்