January 29, 2022

தேசிய சிறுவர் பூங்கா – சென்னை:::: ரவுண்ட் அப்

சென்னை சிட்டியில இருந்தபடி ஒருநாள் முழுக்க குழந்தைகளோட ஜாலியா பொழுதை கழிக்கணும்னா, அதுக்கு பெஸ்ட் சாய்ஸ் கிண்டி சிறுவர் பூங்காதாங்க. கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள இந்த தேசிய சிறுவர் பூங்கா இந்தியாவிலேயே நகரத்தின் மையப்பகுதியில் உள்ள சில தேசிய பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது கூடுதல் பெருமை. சரி… பூங்காவுக்குள் நுழைவோம் வாருங்கள்!
sep 25 - GUINDY_PARK_
பூங்காவில் நுழைந்ததுமே நுழைவாயிலில் உள்ள பிரமாண்ட டைனோசர் நம்மை வரவேற்கிறது. அதைத்தாண்டி உள்ளே சென்றால், வண்ண வண்ண மீன்கள், மான்கள், பழுப்பு நிற கூழைக்கடா, செந்நிற கூழைக்கடா எனப் பலவித பறவைகள் கண்ணை கவர்கின்றன.

இங்கு 400 கருப்பு நிற கலைமான்கள், 2000 புள்ளி மான்கள் உள்ளன. புள்ளி மான்கள் பல சர்வ சாதாரணமாக அங்குமிங்கும் உலாவுகின்றன. குழந்தைகள் பலரும் இதற்கு உணவு கொடுக்கிறார்கள்.

130க்கும் அதிகமான பறவை இனங்களும், 14 வகையான பாலூட்டிகளும், 60 வகையான பட்டாம்பூச்சிகளும் உள்ளன.

இயற்கையான சூழலில் பறவைகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது. பூங்காவை சுற்றியபடி அனைத்து பறவை, மான்களை பார்க்கலாம். மேலும், பூங்காவிலேயே குளுகுளு காற்று வாங்கியவாறு, சாப்பிடவும், ஓய்வெடுக்கவும் நிறைய பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு மெத்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளை சுற்றிப்பார்த்தது போக, சிறுவர், சிறுமியர் இதில் சந்தோஷமாக விளையாடுகின்றனர்.

சிறுவர் பூங்காவை ஒட்டியே பாம்பு பண்ணை அமைந்துள்ளது. இங்கு பல கொடிய விஷமுள்ள மற்றும் அரிய வகை பாம்புகள் உள்ளன.

இந்திய மலைப்பாம்புகள், தென் கிழக்கு ஆசிய மலைப்பாம்பு, கட்டு வீரியன், குக்றிக் வகை பாம்புகள், மரங்களில் வசிக்கும் பாம்புகள், கடல் பாம்புகள், தண்ணீர் பாம்புகள், மண்ணுளி பாம்புகள் என 40க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த பாம்புகள் உள்ளன. இவை அனைத்துமே கண்ணாடி கூண்டில் பாதுகாப்பான வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூண்டிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் பாம்புகளின் பெயரும், அவை விஷத்தன்மை உடையவையா, இல்லாதவையா என்றும் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான முதலைகளும் இங்குள்ளன. சதுப்பு நிலத்தில் வாழும் முதலைகள், சகதியில் புரளும் முதலைகள், உப்பு தண்ணீரில் வாழும் முதலைகள், ஆப்ரிக்க முதலைகளை பார்க்க முடிகிறது., இணை பிரியா நண்பர்களாக இருக்கும் முதலைகள் என கூறப்படும் முதலைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்தவையாம்.

ஆமைகளும் நிறைய இருக்கு. இந்திய நட்சத்திர ஆமைகள், கடல் ஆமைகள், 100 வயதான ஆமைகள் என பலவகைகள் உண்டு. இது போக, பாம்பு, முதலை, ஆமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆய்வகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு பாம்புகளின் படங்களுடன் அவற்றின் குணாதிசயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பு கடிக்கு முதலுதவி சிகிச்சை, பாம்புகள் எப்போது ஆக்ரோஷப்படும், அவைகள் செய்யும் எச்சரிக்கை எப்படியிருக்கும் என்பது போன்ற விளக்க குறிப்பேடுகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

இங்கு வரும் பார்வையாளர்களுக்காக, காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணி, 4.30 மணிக்கு பாம்பிலிருந்து விஷம் எடுப்பது நேரிடையாக செய்து காண்பிக்கப்படுகிறது.

சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை இரண்டையும் சுற்றி பார்க்க காலையில் போனால் மாலையாகி விடுகிறது. இங்கு பொழுதுபோக்குடன், பாம்பு, முதலை, மான் பற்றி குழந்தைகள் பல தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

செவ்வாய் விடுமுறை

சிறுவர், சிறுமியருக்கு ரூ.5ம், பெரியவர்களுக்கு ரூ.20ம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கேமிராவுக்கு ரூ.20ம், வீடியோ கேமிராவிற்கு ரூ. 100ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாம்பு பண்ணையை சுற்றிப்பார்க்க சிறுவர், சிறுமியருக்கு ரூ.5ம், பெரியவருக்கு ரூ.20ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரு பூங்காக்களுக்கும் செவ்வாய்கிழமை வார விடுமுறை. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனுமதி உண்டு.

Nagoorkani Kader Mohideen Basha