October 16, 2021

தூர்தர்ஷனை ‘துர்’தர்ஷனாக்கும் தேசிய திட்டம்!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முக்கியமான தேசியப் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி சான்றளிக்கிறார். அவர் பேச்சில் ஒரு செய்தி மதிப்பு இருக்கிறது என்பதால் ஒளி பரப்பினோம் என்கிறார் தூர்தர்ஷன் தலைமை இயக்குநர். அவர் பேச்சை நேரடியாக ஒளி பரப்புவது என்று தூர்தர்ஷன் எடுத்த முடிவு அதன் சொந்த முடிவு, அரசாங்கம் தலையிடவில்லை என்கிறார் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர்.
dd with rss
மோடியின் உரையை அகில இந்திய வானொலி நேரடியாக ஒலிபரப்பியதிலாவது ஒரு குறைந்தபட்ச நியாயம் இருக்கிறது – அவர் நாட்டின் பிரதமர். ஒரு கலாச் சார இயக்கம் என்று சொல்லிக் கொள்கிற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் உரையைச் செய்தியாக அல்ல, நேரடியாக ஒளிபரப்ப அரசின் தகவல் தொடர்பு நிறுவனம் முடிவு செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது?

ஒரு பேச்சுக்கு அது அந்த நிர்வாகத்தின் “சொந்த முடிவு” என்றே வைத்துக்கொண்டாலும் கூடஇந்துத்துவா என்பது அனைவரையும் உள்ளடக்கிய தத்துவம் என்பதாகத் தொடங்கி, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வந்து குடியேறுகிறவர்களால்தான் பிரச்சனை என்று தொடர்ந்து, விலங்குக்கறிகள் ஏற்றுமதியை – குறிப்பாக மாட்டுக்கறி ஏற்றுமதியைத் தடுக்க வேண்டும், பசுவதைக்குத் தடை விதிக்க என்பதாக முடித்திருக்கிறார் மோகன் பகவத். தமிழ்நாட்டில் ஜிகாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று கிளப்பிவிட்டு, மாநில நிர்வாகத்தில் மத்திய பாஜக அரசின் நாட்டாமைக்கு தோது செய்து கொடுக்க முயன்றிருக்கிறார். இவையெல்லாம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் என்கிறார் மோடி.

இந்துத்துவா என்பது “அனைவரையும் உள்ளடக்கிய” தத்துவம் என்பதில்தான் சிக்கலே. மேலோட்டமாகப் பார்த்தால் எல் லோரையும் சமமாக மதிக்கிற தத்துவம் என் பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். வெளித்தோற்றத்தில் கிறங்கிவிடாமல் உள்ளே சென்று பார்த்தால், அனைத்து மாறு பட்ட நம்பிக்கைகளுக்கும் ஒரே பெயரைச் சூட்டி, அடையாளங்களை அழிக்கிற மேலாதிக்க நோக்கம் மறைந்திருப்பதைக் காண முடிகிறது. பிற மத நம்பிக்கைகளை மட்டுமல்ல, மதமே வேண்டாம் என்று கூறுகிறவர்களையும், இறை நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்களையும் எவ்வளவு தந்திரமாக “இந்துத்துவா” கும்பத்திற்குள் அடக்குகிறார்கள் என்ற வியப்பு ஏற்படுகிறது அல்லவா!

அப்படி அடக்குகிற ஆர் எஸ்எஸ் செயல்திட்டத்திற்காகத்தான் மோடியிடம் அரசாட்சி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் வியப்பு ஏற்படாது. மக்கள் அனைவரின் சொத்தாகிய பொதுத்துறை தகவல்தொடர்பு நிறுவனத்தை எவ்வளவு அப்பட்டமாக ஒற்றை மதவெறி ஆதிக்க நோக்கத்திற்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற ஆவேசம்தான் மக்களுக்கு ஏற்பட வேண்டும்.

செய்தி மதிப்புக்காகத்தான் இதை ஒளிபரப்பியதாக தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் சொல்கிறார். செய்தி மதிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற ஊடக நெறிப்படிதான் இதை ஒளிபரப்பினார்கள் என்றால், நாளை இஸ்லாம் ஒரு உலக தத்துவம் என்று ஒரு முஸ்லிம் கலாச்சார அமைப்பின் தலைவர் பேச முன்வந்தால் அதை நேரடியாக ஒளிபரப்புமா தூர்தர் ஷன்? கிறிஸ்துவம் பேரண்டத்தையே உள்ளடக்கிய சமயநெறி என்று ஒருவர் பேச வந்தால் அதற்கும் இடம் தருவார்களா? பகுத்தறிவாளர்கள் முற்போக்குக் கருத்துகளைக் கூறுவதற்கு தூர்தர்ஷன் நேரலை நிகழ்ச்சியை ஒதுக்குவார்களா?
இதற்கெல்லாம் அனுமதியில்லை, மோகன் பகவத்துகளின் பேச்சில்தான் செய்தி மதிப்பு இருக்கிறது என்று தூர்தர் ஷன் நிர்வாகம் சொல்லுமானால், அதை துர்தர்ஷன் என்று மக்கள் ஒதுக்கி அலை வரிசையை மாற்றிவிடுவார்கள்.

(‘தீக்கதிர்’ அக்டோபர் 6 இதழில், ‘தெருவிளக்கு‘ பகுதியில் வெளியாகியுள்ள
Kumaresan Asak கட்டுரை.)
பட உதவி : சதீஷ் ஆச்சார்யா