October 16, 2021

தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!

பட்டம், பதவி எல்லாம் எனக்கு ஒரு தூசுக்குச் சமானம்!” என்று ஓர் அரசியல்வாதி சொன்னால் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பாராட்டிக் கை தட்டுவார்கள். ஆனால் விஞ்ஞானிகள் “”உண்மைதான், பட்டம், பதவி என்ற தூசுகள் இல்லாவிட்டால் அவரும் இருக்க மாட்டார்!” என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ஏனென்றால் தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது. பூமியும் இருக்காது. நாமும் இருக்க மாட்டோம். தூசி அவ்வளவு மகத்துவமும் மகாத்மியமும் கொண்டது.
8 - dust space
தூசு என்பதில் முக்கால்வாசி } மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் உடலிலிருந்து உதிர்ந்து விழுகிற உயிரற்ற துணுக்குச் செதில்கள்தான். அவற்றைப் பல வகையான சிறு பூச்சிகள் உண்டு வாழ்கின்றன. அத்தகைய சிறு பூச்சிகள் பெரிய பூச்சிகளின் இரையாகின்றன. பெரிய பூச்சிகளைச் சிறிய பிராணிகள் சாப்பிடுகின்றன. சிறிய பிராணிகளைப் பெரிய பிராணிகள் உண்கின்றன. இந்த வரிசைக்கு “உணவுச் சங்கிலி’ என்று பெயர். அதில் தூசு முதல் கண்ணி. இந்த உணவுச் சங்கிலி உயிரினப் பரிணாமத்தில் ஒரு முக்கியமான அம்சம். அதன் கண்ணிகளில் ஒன்று அறுந்தாலும் எல்லா உயிரினங்களுமே அழிந்து போகும்.

தூசியில் நுண்ணிய மண் தூள்கள், கல் பொடி, உலோகத் துணுக்குகள், ரசாயன மூலக்கூறுகள் போன்றவையும் இடம்பெறுகின்றன. அவை நமக்குப் பலவிதமான உதவிகளைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாகப் பகல் நேரத்தில் வெளியில் மட்டுமே வெயிலடித்தாலும் வீட்டுக்குள் வெளிச்சமாக இருப்பதற்குக் காரணம் தூசிகள் சூரிய ஒளியை நாலா திசைகளிலும் பிரதிபலித்துச் சிதற வைக்கின்றதுதான். தூசிகள் இல்லாவிட்டால் நேரடியாக வெளிச்சம் வர முடியாத இடங்களெல்லாம் கன்னங்கரேலென இருட்டாயிருக்கும். பட்டப்பகலில் கூட வீட்டுக்குள் நிறைய விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டியிருக்கும். மின்வெட்டு இன்னும் தீவிரமாயிருக்கும். மரத்தடிகளில்கூட இருள் சூழ்ந்திருக்கும். மின்சாரச் செலவு, கிரசின் செலவு எல்லாம் வானளவுக்கு உயர்ந்துவிடும்.

வளிமண்டலத் தூசிகள் மீது சூரிய ஒளி படும்போது அதற்கு லம்பமான திசையில் நீல ஒளி மட்டும் அதிக அளவில் பூமியை நோக்கித் திருப்பிவிடப்படுகிறது. அதனால் வானம் நீல நிறம் பெறுகிறது. அந்த நிறத்தைக் கடல் பிரதிபலிப்பதால் அதுவும் நீலமாகத் தெரிகிறது.

காலையிலும் மாலையிலும் சூரியன் அடிவானத்தை நெருங்கும்போது தூசிகள் அதன் ஒளியைப் பூமியை நோக்கி வளைக்கும். அப்போது சிவப்பு நிற ஒளி மற்ற ஒளிகளைவிட அதிகமாக வளைவதால் அந்த நேரங்களில் சூரியனும் வானமும் சிவந்து காணப்படுகின்றன. “பொன் மாலைப் பொழுது’ என்று பாடத் தோன்றுகிறது.

மழை வளத்துக்கே தூசிகள்தான் காரணம். கடல்களிலிருந்தும் நீர் நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாகி வானில் பரவுகிறது. அதன் வெப்பநிலை குறையும்போது அது தூசுத் துகள்களைப் பற்றிக் கொண்டு திரவமாகிறது. தூசுகளில்லாது போனால் நீராவி திரவத் துளியாக மாறி மேகங்களாக உருவாகாது. மழையும் பெய்யாது.

வானில் வெகு உயரத்தில் பறக்கும் விமானங்கள் செல்லும் பாதையில் அவற்றுக்குப் பின்னால் நீண்ட வால்களைப்போல வெண்புகைக் கோடுகள் தோன்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தாழப்பறக்கும் விமானங்களுக்கு அவ்வாறு வால்கள் உண்டாகாது. நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்கள் கிட்டத்தட்ட 50 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். அங்கெல்லாம் காற்றின் அடர்த்தி குறைவாயிருக்கும். தூசிகளேயிராது. அதனால் அங்கு பரவியிருக்கிற நீராவி, ஆவி நிலையிலேயே நீடித்திருக்கும். அதன் ஊடாக ஒரு விமானம் பறந்து செல்லும்போது அதன் எஞ்சினிலிருந்து வெளிப்படும் புகைத் துணுக்குகளைப் பற்றிக் கொண்டு ஆவி திரவத்துளிகளாக மாறும்; அவையே வெள்ளைப் புகைக் கோடுகளாகத் தெரிகின்றன.

இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தூசி வடிவத்தில்தான் அவதரித்தது. 1,400 கோடி ஆண்டுகளுக்கு முன் “பெருவெடி’ என்ற சம்பவம் நிகழ்ந்து பிரபஞ்சம் விரிவடைந்தது. அதில் முதலில் தோன்றிய நுண்துகள்கள் கூடி எலக்ட்ரான்களாகவும் புரோட்டான்களாகவும் நியூட்ரான்களாகவும் திரண்டன. அவை ஒன்றுகூடி ஹைட்ரஜன் அணுக்களாக மாறின. ஹைட்ரஜன் அணுக்கள் திரண்டு விண்மீன்களாக இறுகின. விண்மீன்களுக்குள் அணுக்கருப் பிணைவுகள் ஏற்பட்டு ஹீலியம், கார்பன் இத்யாதி தனிமங்கள் தோன்றின.

விண்மீன்களுக்கு வயதாகிவிட்டபின் அவை வெடித்துச் சிதறின. அவற்றின் துகள்கள் விண்வெளியில் தூசுகளாகப் பரவின. அவை மீண்டும் மேகங்களாகித் திரண்டு இறுகிச் சூரியன் போன்ற விண்மீன்களாகவும் பூமி போன்ற கோள்களாகவும் மாறின. எனவே பூமியின் “பூர்வாசிரம’ நிலை தூசிகள்தான்.

இந்தப் பிரபஞ்சத்தில் இன்னமும் ஏராளமான தூசுப் படலங்கள் மிதந்துகொண்டு தானிருக்கின்றன. அவற்றிலிருந்து புதிய விண்மீன்களும் கோள்களும் உருவாகிக் கொண்டிருக்கக்கூடும். அவை வயதான பின் மீண்டும் வெடித்துத் தூசு மண்டலங்களாகச் சிதறலாம். பழந்தமிழ்ப் புலவர் பரஞ்சோதி முனிவர் “”அண்டங்கள் எல்லாம் அணுவாகி, அணுக்களெல்லாம் அண்டங்களாகிப் பெரிதாய்ச் சிறிதாயினும்” என்று இதே கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தூசுகள், அளவுக்கு மீறித் திரண்டாலும் ஆபத்துத்தான். சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் வானத்திலிருந்து ஒரு பெரிய விண்கல் பூமியில் வந்து விழுந்தது. அதனால் ஏகப்பட்ட தூசி எழுந்து வானம் முழுவதிலும் அடர்த்தியாகப் படர்ந்து சூரிய ஒளியை மறைத்துவிட்டது. பூமியில் “இருள்’ சூழ்ந்தது. சூரிய ஒளியில்லாததால் தாவரங்கள் பட்டுப்போய் அழிந்தன. அப்போது உலகில் உலவிய டைனாசார்களில் சாக பட்சிணிகளாயிருந்தவை உணவு கிடைக்காமல் முற்றாயழிந்தன. மாமிச பட்சிணிகளாயிருந்தவையும் அசைவ உணவு கிடைக்காமல் அழிந்தன. அப்போதிருந்த உயிரினங்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் வரை முற்றாயழிந்து போனதாகச் சொல்கிறார்கள். கரப்புகள் போன்ற பூச்சிகளும் மூஞ்சுறு போன்ற பாலூட்டிகளும் மட்டுமே மிஞ்சின. அந்தப் பாலூட்டிகளின் சந்ததிகள்தான் இன்றுள்ள மனிதர்களும் மற்ற விலங்குகளுமாகும்.

சிமென்ட் ஆலைகள் போன்ற தொழிற்சாலைகள் வெளியிடும் புகையில் சிமென்ட் துகள்கள் அதிகமிருக்கும். அது ஆலையைச் சுற்றியுள்ள வயல்களிலும் தோப்புகளிலும் உள்ள தாவரங்களின் இலைகளில் விபூதி அபிஷேகம் செய்ததைப்போலப் படிந்துவிடும். அதன் காரணமாகத் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் தமக்குத் தேவையான சத்துகளை உற்பத்தி செய்து கொள்ள முடியாமல் வாடி வதங்கிவிடும். விரைவிலேயே அவை அழிந்து போகும்.

அளவுக்கு மீறித் தூசிகள் காற்றில் பரவியிருந்தால் மனிதர்களும் விலங்குகளும் சுவாசக் கோளாறுகளாலும் நுரையீரல் நோய்களாலும் தோல் நோய்களாலும் பீடிக்கப்படுகின்றனர். சிமென்ட் ஆலைகள், கல்நார்ப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், பாறைக்கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள், பாறைகளைச் செதுக்கவும் மெருகேற்றவும் செய்கிற தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் காற்றில் கல்தூசி நிறைந்திருக்கும். அதைச் சுவாசிக்கிறவர்களின் நுரையீரல்களில் அது படிவதால் “சிலிக்கோசிஸ்’ என்ற கொடிய நோயுண்டாகிறது. அதேபோலப் பெரிய பண்ணைத் தோட்டங்களிலுள்ள காற்றில் மகரந்தத் துகள்கள் நிறைந்திருக்கும். சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா, மூச்சிரைப்பு போன்ற வியாதிகள் உண்டாகும்.

பெரு நகரங்களில் வாகனங்கள் உமிழும் புகையால் மக்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குளிர்காலங்களில் அந்தப் புகைத்துணுக்குகளில் நீராவி படிந்து தரை மட்டத்தில் மூடுபனியாகப் பரவுகிறது. ரயில்களும் விமானங்களும் மூடுபனி கலையும் வரை காத்திருந்து புறப்படவும் இறங்கவும் நேரிடும். சாலைகளில் வாகனங்கள் பாதை புலப்படாமல் விபத்துக்குள்ளாகலாம்.

குளிர்காலங்களிலும், “போகி’ போன்ற பண்டிகை நாள்களிலும் மக்கள் டயர்களையும் குப்பைகளையும் எரிப்பதாலும் காற்றில் புகையும் கார்பன் துகள்களும் பரவிக் கெடுக்கும். ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிக்கும்போது நச்சு வாயுக்களும் உருவாகி நுரையீரல் புற்றுநோய்கூட உண்டாகும்.

சுற்றுச்சூழலில் மாசு பரவாமல் தடுக்க “மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள்’ என்ற அமைப்புகள் மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் உள்ளன. அவ்வப்போது அவை “தங்களால் முடிந்த’ சில நடவடிக்கைகளை எடுக்கின்றன; எனவே நாம் நமது மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு நடமாடுவதே நல்லது.

கே.என். ராமசந்திரன்