October 20, 2021

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கம் என்பது ஓர் இயற்கை வரம். அதைத் தடுப்பதால் நோய்கள் வருகின்றன. பல நோய்நிலைகளில் வேதனை காரணமாக தூக்கம் தானே வருவதில்லை. இது ஒரு வகை. இங்கு தூக்கம் வருவதை நாம் தடுக்கவில்லை. தூக்கம் வரும்போது நாம் வேறு காரியங்களில் ஈடுபடுவதன் காரணமாக அதைத் தவிர்க்கிறோம். அதனால் தலைச்சுற்றுதல், தலையில் பாரம், இமைகள் கனத்தல், கொட்டாவி, உடலெங்கும் கடுப்புவலி போன்ற உபாதைகள் ஏற்படும். இரவில் விழித்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ள நீங்கள் பகலில் அரைகுறையாகத் தூங்கக் கூடாது. பகலில் வீடு வந்து சேர்ந்ததும் உடனே உணவைச் சாப்பிடாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினம் தூங்க எத்தனித்தால் அதுவே பழக்கமாகி தூக்கம் நன்றாக வரும்.
sleep nov 7
பொதுவாகவே பகல் தூக்கத்தை ஆயுர்வேதம் வலியுறுத்தவில்லை. பகலில் உணவைச் சாப்பிட்ட பிறகு தூங்குவதால் உடலில் கொழுப்பு அடைப்பு, சர்க்கரை உபாதை, உடல் பருமன், கல்லீரல் வீக்கம் போன்ற உபாதைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் வீடு வந்து சேர்ந்ததும் கை, கால் முகம் கழுவி சுகம் தரும் ஒரு படுக்கையில் சுமார் ஐந்து முதல் ஏழு மணிநேரம் வரை உறங்கலாம். இரவு தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பகலில் உறங்குவதால் தவறேதுமில்லை. இருந்தாலும் உணவைச் சாப்பிட்டு பகலில் உறங்கினால் அதனுடைய தாமதமான செரிமானம் மப்பு நிலையை ஏற்படுத்தி உடலின் உட்புறக்குழாய்களில் ஒருவிதமான பிசுபிசுப்பையும் தடிப்பையும் ஏற்படுத்தக்கூடும். இந்த உட்புறக் குழாய்களில் ஏற்படும் இந்த பிசுபிசுப்புத் தன்மை பல நோய்களுக்கும் வித்தாக அமையக் கூடும்.

வெறும் வயிற்றில் படுத்துறங்கிய உங்களுக்கு நல்ல நித்திரை ஏற்படுவதால் உடல் லேசாகிறது. நீங்கள் குறிப்பிடும் இமை கனத்தல், உடல் வலி, கடுப்புவலி போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம். பகல் தூக்கம் முடிந்து எழுந்ததும் பல் துலக்கி, நாக்கை வழித்து வாயை வெந்நீர் விட்டுக் கொப்பளிப்பதும், சிறிது வெந்நீர் உள்ளுக்குச் சாப்பிடுவதும், குடல் உட்புற சுத்தத்தை ஏற்படுத்தித் தரும். பகல் தூக்கத்திற்குப் பிறகு பொதுவாக உடல்பளுவைக் கூட்டும் மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை போன்றவற்றைத் தவிர்த்து அவற்றிற்கு மாற்றாக சூடான புழுங்கலரிசி சாதத்துடன் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து சூடான ரசம் சாதம் சாப்பிடுவதும், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா போன்றவற்றைத் துவையலாகத் தொட்டுக் கொள்வதும் உசிதமாகும்.

பகல் தூக்கத்தின் வாயிலாக நாம் பட்டினியாகக் கிடந்து உறங்கினாலும் உட்புறப் பிசுபிசுப்பு அணுக்களில் ஏற்படத்தான் செய்யும். அதை மாவுப் பண்டங்கள் மேலும் வளர்த்துவிடக்கூடிய அபாயம் இருப்பதால் இதுபோன்ற சூட்டைத் தரும் மிளகு, சீரகம், பூண்டு போன்ற உணவுப்பதார்த்தங்கள் அந்த பிசுபிசுப்பை அகற்றுவதோடு மட்டுமல்லாமல் உட்புறக்குழாய்களிலும் தாதுக்களிலும் ஒரே சீரான சூட்டை பரப்பிவிட்டு அவற்றின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்துவதால் அதுவே உடல் போஷணைக்கு ஏதுவாகிறது. இரவில் அலுவல் வேலையை இதன்மூலம் தொய்வின்றி செயல்படுத்த அது உதவுகிறது.
பகல் தூக்கத்தை பொதுவாக ஆயுர்வேதம் வரவேற்பதில்லை என்பதால் அலுவல் நிர்பந்தம் காரணமாக இரவில் வேலை செய்யும் நீங்கள் மேல் அதிகாரிகளிடம் பேசி பகலுக்கு மாற்றிக் கொள்ள ஏதேனும் வழி உள்ளதா என்று வினவி மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முயற்சிக்கவும்.

ஆயுர்வேத மருந்துகளாகிய ச்யவனப்ராசம், ப்ரம்ம ரஸôயனம், அஸ்வகந்தாதி லேஹ்யம், அஸ்வகந்தாரிஷ்டம், பலாரிஷ்டம், தசமூலாரிஷ்டம், மஹாமாஷதைலம், பலா அஸ்வகந்தாதிதைலம் போன்றவை உடலுக்கு வலுவூட்டக்கூடியவை. தூக்கத்தின் இழப்பினால் துன்பப்படும் உங்களுக்கு இவை நல்ல ரசாயன மருந்துகளாக உள்ளும் புறமும் பயன்படும். இவற்றில் எது மிகுந்த பயனைத் தரும் என்பதை ஆயுர்வேத மருத்துவர் மட்டுமே அறிவர் என்பதால் அவர்களின் ஆலோசனையின்படி நீங்கள் சாப்பிட்டு வரலாம்.!

 

Rajesh Khanna