October 25, 2021

துப்புரவுத் தொழிலாளி காந்தி…

ஜுலை 1947ல் காந்திஜி கல்கத்தாவிற்கு வந்தார், காரணம் இந்து முஸ்லிம் பிரச்சனை. அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காந்திஜி தீவிரமாக உழைத்தார். ஒரு முஸ்லிம் பெண் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் சதீஷ் சந்திரதாஸ் குப்தா என்பவரின் ஆசிரமத்திலும் சில நாட்கள் தங்கியிருந்தார். வங்காளத்தின் பிரதமராக இருந்த சோராவதி என்பவரை அழைத்து தன்னோடு சேர்ந்து ஒற்றுமைக்கு வழிவகுக்க உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். முஸ்லிம்கள் வந்து இந்துக்களைப் பற்றிக் குறை சொல்லிவிட்டுப் போவார்கள். இந்துக்கள் முஸ்லிம்களைப் பற்றி குறை சொல்லிச் செல்வார்கள். காந்திஜி அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவார். கிட்டத்தட்ட மூன்று நாட்களாக இது தொடர்ந்தது. அவருக்கு ஓய்வே இல்லை.
Gandhi-jayanti-
ஒருநாள் மதிய வேளையில் காந்திஜி இயற்கை உபாதையைக் தணிப்பற்காக கழிவறைக்குச் சென்றிருந்தார். அவர் வரும்போது அவரது செயலாளர் எதிரே சென்று, ‘எனக்கு எந்த வேலையுமில்லை. சும்மாவே இருக்க மிகவும் சிரமமாக இருக்கிறது’ என்றார். உடனே காந்திஜிக்கு கோபம் வந்து விட்டது.

என்னது வேலையில்லையா, எத்தனையோ வேலைகள் இருக்கின்றனவே! இப்போதுதான் நான் கழிவறைக்குப் போய் வந்தேன். போ, அதைப் போய் சுத்தம் செய், போ’ என்று கூறினார். செயலாளரும் உடன் அந்த வேலையைச் செய்யச் சென்றார்.

காந்திஜி அந்த அளவுக்கு சமத்துவம் பேணுபவராக இருந்தார். ஸ்வீப்பர் வந்துதான் அதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். அவரே பலமுறை அவ்வாறு பல கழிப்பிடங்களைச் சுத்தம் செய்திருக்கிறார். பலரது கழிவுகளைத் துப்புரவு செய்திருக்கிறார். அவர் ஒரு துப்புரவுத் தொழிலாளியாக பல சேரிப்பகுதிகளுக்குச் சென்று அவ்வேலையை, எந்தவித முகச் சுளிப்பும் இல்லாமல் செய்திருக்கிறார். அதனால் தான் அவர் மகாத்மா.

காந்திஜி பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அங்கே வந்தார். அவர் காந்திஜியிடம், ’உங்களை ஒருநாள் மட்டும் இந்நாட்டின் கவர்னர் ஜெனரலாக நியமித்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு காந்திஜி, ‘கவர்னர் ஜெனரலிம் மாளிகை அருகே அமைந்துள்ள துப்புரவுத் தொழிலாளிகளின் குடியிருப்பைச் சுத்தம் செய்வேன்’ என்றார்.

‘உங்களை மேலும் ஒருநாள் அப்பணியில் நீட்டித்தால்?…’

‘மறுநாளும் அதே பணியைத் தான் செய்வேன்’ என்றார் காந்தி.

பத்திரிகையாளர் காந்திஜியின் உறுதியை நினைத்து வியந்தார்.

காந்திஜியிடம் ஆலோசனை கேட்பதற்காக ஒருமுறை சேவாகிராமத்திற்கு சர்தார் படேலும், ஜவஹர்லால் நேருவும் வந்திருந்தனர். அப்போது காந்திஜி பயிற்சியாளர்களுக்கு செருப்பு தைப்பது எப்படி என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். “துண்டுகளை இப்படிப் பொருத்த வேண்டும். தையலை இப்படிப் போட வேண்டும். அடிப்பாகம் அதிக எடையைத் தாங்குவதால் சரியான முறையில் அதனைப் பொருத்த வேண்டும்’ என்றெல்லாம் அவர் மாணவர்களுக்கு விரிவாக விளக்கி செய்முறைப் பயிற்சி தந்து கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த நேருவும், படேலும், ‘என்ன இது பொன்னான இந்த நேரத்தை இந்தப் பயிற்சியாளர்கள் இப்படிப் பாழடிக்கிறார்களே!’ என்று அங்கலாய்த்தனர்.

உடனே காந்திஜிக்குக் கோபம் வந்து விட்டது. ‘அவர்கள் பாடம் கற்றுக் கொள்வதைக் குறை சொல்லாதீர்கள். வேண்டுமானால் நீங்களும் வந்து இப்படி அமர்ந்து நல்ல ஜோடி செருப்பை எப்படிச் செய்வது என்று கற்றுக் கொள்ளலாம்’ என்றார்.

நேருவும், படேலும் பதில் பேச முடியாது மௌனமாக நின்றனர்.

1934 ஆம் ஆண்டில் ஒருமுறை காந்திஜி குற்றாலத்துக்கு வந்திருந்தார். உடன் வந்திருந்தோர் உட்பட அனைவரும் அருவியில் குளிப்பதற்கு மிக்க ஆவலாக இருந்தனர். திடீரென காந்தி அங்கே குளிப்பதற்கு வந்திருந்த பிற சுற்றுலாவாசிகளிடம், ” இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா?” என்று கேட்டார். உடன் அவர்கள், “ இல்லை. கோயிலின் முன்பாக வரவேண்டியிருப்பதால் அவர்கள் இங்கே வந்து குளிப்பதற்கு அனுமதியில்லை” என்றனர்.

அவ்வளவுதான். “என்றைக்கு இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களோ, அதன் பிறகு நானும் வந்து குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, உடன் வந்தவர்கள் திகைத்து நிற்க, திரும்பிக்கூடப் பார்க்காமல் நடந்து சென்றார் காந்திஜி.

காந்திஜியின் கருணை

காந்திஜி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து விட்டு, இந்தியாவில் வக்கீலாக பணிபுரிந்து வந்து கொண்டிருந்த காலம். வக்கீல் தொழில் செய்வது போக எஞ்சியிருந்த நேரங்களில் சமூகப் பணி செய்து வந்தார் காந்தி.

ஒருநாள், காந்திஜியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவன் வந்து பிச்சை கேட்டான். அவனைக் கண்டு காந்தியின் மனம் இரங்கியது. அவனைப் பற்றி, அவன் குடும்பம் பற்றி, அவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தது பற்றி விசாரித்தார். அவனுக்கு ஒருவேளை சோறு மட்டும் போட்டு அனுப்பி வைத்துவிட அவர் விரும்பவில்லை. எனவே அவனைத் தன் வீட்டிலேயே தங்கச் சொன்னார். அவனுடைய உடம்பிலிருந்த புண்களைத் தாமே துடைத்து மருந்திட்டார். அவன் ஓரளவு குணமாகும் வரை சில நாட்கள், அந்த பிச்சைக்காரனுக்குத் தொண்டு செய்தார். அவன் உடல் நலம் சற்றுத் தேறியதும், ஒப்பந்தக் கூலிகளுக்காக ஏற்பட்ட மருத்துவமனைக்கு அவனை அனுப்பி வைத்தார். அதுமுதல் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காந்திஜியின் உள்ளத்தில் அதிகமாகியது.

நண்பர் அளித்த நன்கொடை மூலம் ஏழைகளுக்காக ஒரு இலவச மருத்துவமனையை நிறுவிய காந்தி, டாக்டர் பூத் என்பவரை அதன் பொறுப்பாளராக நியமித்தார். தான் அவருக்கு உதவியாளராகப் பணி செய்தார். நோயாளிகளுக்கு தானே தன் கையால் மருந்திட்டு அவர்களைத் தேற்றினார்.

இது போன்றவற்றால் காந்தியை மகாத்மா என்கிறோம். இந்த தேசத்திற்கு ஓராயிரம் காந்திகள் தேவை அல்லவா?