September 20, 2021

தீர விசாரிப்பதே மெய், ஆனால்?

உத்தரப்பிரதேச தலித் குடும்பம் காவல்துறையினர் முன்னிலையில் ஆடை களையப்பட்ட சம்பவம் இப்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சாதாரண பிரச்னைக்குப் புகார் செய்ய வந்தவர்கள் அவர்களாகவே ஆடை களைந்து கொண் டார்கள் என்பது போன்ற விளக்கத்தைக் காவல் துறையின் ஓர் உயர் அதிகாரி கூறி யுள்ளார். தாங்களே ஆடைகளைக் களைந்து நடுத்தெருவில் அம்மணமாக நிற்க மொத்தக் குடும்பமும் என்ன மனநிலை பிறழ்ந்தவர்களா? காவல் துறையினருக்கும் அவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் அசாதாரணமான, மோசமான ஏதேனும் ஒன்று இடம்பெற்றிருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது.
edit oct 12
இந்தியாவில் காவல்துறை பெற்றிருக்கும் அதிகாரம் யாரும் சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றில்லை. அவர்களின் நடைமுறை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஒரே ஒருமுறை காவல்நிலையம் சென்று வந்தால் போதுமானது. அண்மையில் என் நண்பனுக்கு வங்கிக்கடன் வாங்கித்தர வந்த ஒரு ஏஜெண்ட் அவன் தந்த காசோலையைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்கி லிருந்து ஏறக்குறைய 30 ஆயிரம் ரூபாயைத் திருடிவிட்டான். அதுகுறித்து புகார் கொடுக்க காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தோம். எங்களிடமிருந்து அடிப்படைத் தகவல்களைக் கேட்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. பதிவு செய்வதெல்லாம் அதிகபட்சக் கனவு. எரிந்துவிழுந்தபடியே காவலர் ஒரு வெள்ளைத்தாளைக் கொடுத்து புகாரை எழுதச் சொன்னார். ‘ரெண்டு நாள் கழிச்சு வாங்க’ என்றார். அவமானத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே நண்பன் விழிப்படைந்து, ‘விடுடா… இவங்ககிட்ட போய் நின்னு அவமானப்பட்டுக்கிட்டு…’ என்று அத்தோடு விலகிவிட்டான். எங்களிடம் சிடுசிடுப்புடன் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ சிபாரிசுடன் வந்த ஒருவரிடம் இன்முகத்துடன் புகாரை இன்னொரு காவலர் பதிவு செய்துகொண்டிருந்தார். இன்றுவரை எனக்கும் என் நண்பனுக்கும் அந்தச் சம்பவம் ஒரு கெட்ட கனவு தான். அவர்களின் தகவல்தொடர்பு முறை எல்லோரையும் சந்தேகப்படுவதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் புகார் கொடுக்க வருபவர்களில் பலவீனமான பிரிவினரைக் கேவலப் படுத்துவதாக இருக்கும் என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உ.பி தலித் குடும்ப விவகாரத்தில் பிரச்னையில் அழுத்தம் கொடுக்குமளவுக்குச் செயல்பட எந்தத் தரப்புக்கு வலு இருக்கிறது? காவல் துறைக்கா, தலித் குடும்பத்துக்கா?அவர் களே தங்கள் ஆடைகளைக் களைந்துகொண்டார்கள் என்ற செய்தி உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், தங்கள் பைக் காணாமல் போய்விட்டது என்று புகார் கொடுக்கச் சென்ற ஒருவருக்கு ஏன் இப்படியொரு நிலை ஏற்பட வேண்டும்? நாட்டில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய புகார்களோடு காவல் நிலையங் களுக்கு ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். உயர் சாதியினர் என்று சொல்லப் படுபவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இப்படி பல்வேறு சாதியினரும் புகார் கொடுப்பவர் களில அடக்கம். அவர்கள் யாரேனும் இப்படி ஆடை களைந்து நின்றதாகச் செய்திகள் வந்ததுண்டா? சம்பந்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருப்பது இதில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறதா இல்லையா?

நடுத்தெருவில் ஒரு தலித் குடும்பம் ஆடையின்றி நிற்கும் காணொளி அவர்கள் காவல்துறை யினரால் அம்மணமாக்கப்பட்டார்கள் என்ற தவறான செய்தியைக் கொடுத்துவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். இப்படி ஒரு காணொளி வெளி யானதும், அவர்கள் காவல்துறையினரின் அத்துமீறலால்தான் இந்த அவமானத் துக்கு உள்ளானார்கள் என்ற முடிவுக்குப் பலர் வரக் காரணம், இதுவரை காவல் துறையினர் மூலம் தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே இப்படி அவமானங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். விளிம்பு நிலை மக்கள் அதிகார வர்க்கத்தால் கேவலப்படுத்தப்படுவது நம் நாட்டில் மிக சாதாரண நிகழ்வு. இந்த நிலை இருக்கும்வரை, இதுபோன்ற காணொளிகள் மூலம் முந்தைய அனுபவங்கள் காட்டும் திசையில்தான் மனித மனம் முடிவெடுக்கும்.அதற்கு விதிவிலக்காக ஒரு ஆதாரம் அமைந்துவிட்ட சூழ்நிலையில்,அதற்கான எதிர்வினையை தவறு என்று சொல்லலாம். அதை எள்ளி நகையாட ஒன்றும் இல்லை. எதிர்வினைகள் மிகையாக இருக்கும்விதத்தில்தான் இங்கே வினைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

காவலர்களிடம் புகார் கொடுக்க வந்த ஒரு தலித்(மட்டும்) குடும்பம் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நிற்குமளவுக்கு நம் சமூக நிலை இருக்கிறதே என்று நொந்துகொள்வதுதான் சொரணை யுள்ள சமூகத்தின் எதிர்வினையாக இருக்கும். பொது இடங்களில் நம் ஆடையை அடுத்தவர் களைந்தாலும் நாமே களைய நேர்ந்தாலும் அவமானம் ஒரே அளவுதானே.தலித் குடும்பம் தங்களைத் தாங்களே அம்மணமாக்கிக்கொண்டது என்ற செய்தியை பிபிசி வெளியிட்ட தமிழ்க் கட்டுரையில் படித்தேன். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற வாக்கியங்களோடு அந்தக் கட்டுரை தொடங்குகிறது. தீர விசாரிப்பதுதான் மெய். ஆனால் யாரிடம் விசாரிப்பது? அந்தக் கட்டுரையில் தலித் குடும்பத்தின் குரலாக காவல் துறையும் ஓர் உள்ளூர் செய்தித்தாளுமே பேசியிருக்கிறார்கள்.

பிரச்னையில் சம்பந்தப்பட்ட தலித்கள் ஒருவரின் குரலும் அதில் பதிவாகவில்லை. ஆனால் இந்தக் குடும்பம் ஆடை களையப்பட்ட காணொளிக்கான உடனடி எதிர்வினைகளை இப்போது பரிகசித்துக் கொண்டிருக்கும் எதிர்வினையாளர்களுக்கு அந்தக் குரல்கள் தேவைப்படவே இல்லை. பாதிக்கப் பட்ட நபர்களின் பதில் இல்லையே என்பதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அந்தக் கட்டுரையை பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு குற்றம் தொடர்பான பிரச்னையில் தீர விசாரிப்பது என்பது காவல் துறை அதிகாரி கொடுக்கும் விளக்கம் தான் என்று நம்புவார்கள் எனில், இவர்கள் எவ்வளவு அப்புராணியானவர்கள்?

தலித்கள் ஆடை களையப்பட்ட காணொளியையும் அதைப் பதிவு செய்த புகைப் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சரியா தவறோ ஓரளவோ முழுமையானதோ அரசியல் புரிதல் உள்ளவர் களே இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர் களுக்குப் படம் போட்டுக் காட்டி அவலத்தைப் புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை. பாதிக்கப் பட்டவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கையை அந்தப் பதிவுகளும் சேர்த்துப் பாதிக்கலாம். அவர்களை ஆதரிக்கும் செயல்பாடுதான் எனினும் ஏதோ ஒரு விதத்தில் இத்தகைய காட்சிப் பதிவுகளைப் பரப்புவது அவர்களைச் சங்கடப்படுத்தும் ஒரு செயலாகவே இருக்கும் என்றும் கருதுகிறேன். ஆனால் இப்படி துன்பியல் காட்சிகளைப் பகிர்வதில் பிரச்னைக்குரிய உள்ளம் என்று எதுவும் இயங்க வாய்ப்பு இல்லை. சட்டென ஒரு வாய்ப்பு கிட்டும்போது நடந்தது எல்லாமே பொய் என்று மறுப்பதிலும் நீங்கள் எல்லாரும் கோமாளிகள் போல அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள் என்பதிலும்தான் பிரச்னை இருக்கிறது.

செல்லையா ஆனந்த்