September 25, 2021

தி.மு.க.வே தமிழகத்தின் நம்பிக்கை! – கருணாநிதி கடிதம்

”இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரவுள்ளது. ஆளுங்கட்சியின ருக்கு உள்ள நம்பிக்கையெல்லாம் பணத்தைக் கொண்டு, மக்கள் வாக்குகளை வாங்கி விடலாம் என்று நப்பாசையோடு இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்பட்டு விடக்கூடாது என் பதில் கண்ணும் கருத்துமாக இருந்து ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சில முக்கியமானவர்களைக் ’கொள்முதல்’ செய்து, அவர்கள் மூலமாக எதிர்க்கட்சிகளிடம் தேர்தல் உடன்பாடு ஏற்படாமல் இருக்கப் பிரித்தாளும் முயற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்த லில் வெற்றி பெற, வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக உறுதியோடு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்”என்று தி.மு.க. தொண்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
karunanidhi-sep 18
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொதுத்தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. அடுத்த ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறும்போது, தமிழ்நாட்டின் தலை விதி மாற்றப்பட்டிருக்கும். மாற்றப்பட்டாக வேண்டும். அந்தத் தலைவிதி மாற்றப்படாவிட்டால், தமிழ்நாட்டின் தலைவிதியே மாற்றப்பட்டுவிடும்.

கடந்த நான்காண்டு காலமாகத் தூங்கிவிட்டு, தற்போது பொதுத்தேர்தல் வருகிறது என்றதும் திடீரென்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டுவதாக அறிவித்து, அதுவும் கேலிக் கூத்தாக முடிந்துள்ளது. யாரும் இந்த ஆட்சியை நம்பி – ஆட்சியாளர்களின் வெற்று வார்த்தை களை நம்பி, தொழில் தொடங்குவதாக இல்லை. ஆனால் ஆட்சியினரின் கெஞ்சலுக்கு இசைந்து பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதாக ஒரு சிலர் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரண்டே நாள் மாநாட்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக அறிவித்தார்.

கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 26 நாடுகளுக்குப் பயணம் செய்து அதன் மூலமாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சேர்த்துக் கிடைத்த முதலீடே மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய்தான் என்று மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நமது முதல்-அமைச்சர் இரண்டே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார். இன்னும் சொல்லப்போனால், 2011-ம் ஆண்டு ஜனவரியில், மோடி குஜராத் மாநில முதல்-அமைச்சராக இருந்தபோது, சர்வதேச முதலீட்டாளர் களை அழைத்து 2 நாள் மாநாடு ஒன்றினை நடத்தினார். அப்போது அவரிடம், 7 ஆயிரத்து 936 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, அதன் மூலம் 450 பில்லியன் டாலர், அதாவது 20.83 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளைக் குவிப்பதாக மாநாட்டுக்கு வந்திருந்த தொழில் முதலீட்டாளர்கள் எல்லாம் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால் உண்மையில் வந்த முதலீடு எவ்வளவு தெரியுமா?. குஜராத், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 7,936 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 2011-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை மொத்தம் 407 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்தான் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன; அதாவது அந்த மாநாட்டில் உறுதி அளிக்கப்பட்ட 20.83 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்பதற்கு மாறாக, கடந்த நான்கரை ஆண்டுகளில், மோடி அவர்களின் பெரு முயற்சிகளுக்குப் பிறகும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 677 கோடி ரூபாய் முதலீடுகள் தான் குஜராத் மாநிலத்திற்குக் கிடைத்திருக்கின்றன என்றால், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அறிவிப்பு என்ன ஆகும் என்பது புரிகிறதா இல்லையா?.

தமிழகம் முழுவதிலும் மதுவிலக்குப் பிரச்சினை பற்றி எரிகிறது. சசிபெருமாள் என்ற காந்தியவாதி யின் உயிரே போய்விட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உடனடியாக மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிக்கைகள் கொடுத்துள்ளன. நம்மைப் பொறுத்தவரையில் இன்னும் ஒரு படி மேலே போய் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மது விலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று திட்டவட்டமாக, தெளிவாக நான் அறிக்கையே கொடுத்துவிட்டேன். ஆனால் ஆளுங்கட்சியினர் அதைப்பற்றி வாயே திறப்பதில்லை. மாறாக, அவர்களுக்கு வேண்டிய நபர்கள் நடத்தும் மதுபான உற்பத்தி தொழிற்சாலை கொள்ளை லாபம் சம்பாதிக்க வழிவகை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரவுள்ளது. ஆளுங்கட்சியினருக்கு உள்ள நம்பிக்கையெல்லாம் பணத்தைக் கொண்டு, மக்கள் வாக்குகளை வாங்கி விடலாம் என்று நப்பாசையோடு இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சில முக்கிய மானவர்களைக் ’கொள்முதல்’ செய்து, அவர்கள் மூலமாக எதிர்க்கட்சிகளிடம் தேர்தல் உடன்பாடு ஏற்படாமல் இருக்கப் பிரித்தாளும் முயற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால் மக்களின் தூய்மையான நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் நம் பக்கம்தான் இருக்கின்றது. நமக்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பவைகளும் அவைகளேயாகும்.

இந்த நிலையில்தான் நாம் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அப்படி இருக்கிற நிலையில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்,பிரச்சாரப் பணிகளிலே தீவிரமாக ஈடுபட்டு, கழகத்தின் முழு நேரத் தொண்டனாக மாநிலமெங்கும் பம்பரம் போல் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகிறார். வரும், 20-9-2015 முதல் ’நீண்ட நெடிய அணி வகுப்பு’ என்பதைப் போல ’நமக்கு நாமே’ பயணத்தை மேற்கொண்டு தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்திட வரவிருக்கிறார். அவரது அந்தப் பிரச்சாரப் பயணத்தை மிக வெற்றிகரமாக ஆக்கித் தர வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கழகத் தோழர்களுக்கும் உண்டு.

மக்களுக்கு உண்மையான நிலை இப்போதுதான் புரியத் தொடங்கியிருக்கிறது. புரிந்து கொண்ட மக்கள் நம்மை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். திசை மாறிச் சென்றவர்கள் எல்லாம், தி.மு.க.வே தமிழகத்தின் நம்பிக்கை என்று தீர்மானித்து, நம் பக்கம் அணி வகுக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த நேரத்தில் நாம் சோம்பியிருந்து விடக்கூடாது. கடமை ஆற்றுவதில் இருந்து நழுவி விடக்கூடாது.

2016-ம் ஆண்டுத் தேர்தலில் நமக்குத்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது. அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. எதிரிகளின் பண பலத்தையோ,சூழ்ச்சிகளையோ கண்டு பயப்படத் தேவையில்லை. நமது லட்சியம் மிகத் தூய்மையானது. அது இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்றே தீரும் என்று உங்களுக்குத் தெரிவிப்பதுடன், வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக உறுதியோடு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”என்று கருணாநிதி கூறியுள்ளார்.