October 20, 2021

திறந்த வெளிக் கழிவறை குறித்து ஐ.நா. அறிக்கையும்: சென்னையின் அவல நிலையும்!

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடாக அறியப்படும் இந்தியாவில் (மொத்த மக்கள் தொகை 126 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் பேர்) 597 மில்லியன் மக்கள் (சுமார் 60 கோடி மக்கள்) திறந்தவெளிகளையே கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அவல நிலையை மாற்ற உயரிய அளவிலான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. அதே சமயம் சென்னையில் 40 சதவிகிதத்தினர் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மொத்த பொதுக்கழிப்பிடத்தின் எண்ணிக்கை 905 இதில் 234 கழிப்பிடங்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
toilet chennai
சென்னையில் உள்ள மக்கள் தொகையை விட 35 லட்சம் அதிகம் உள்ள மும்பை மாநகராட்சியில் பயன்பாட்டில் உள்ள கழிப்பிடங்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். இது சென்னையை விட பத்து மடங்கு அதிகம். சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்ற சைதை துரைசாமி முதல் பட்ஜெட்டில் சென்னை நகரின் தேவைக்கேற்ப பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்படும் என்றார். இரண்டாம் நிதி நிலை அறிக்கை மற்றும் மூன்றாம் ஆண்டு பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு எதுவுமே இல்லை.

சென்னை மாநகரில் 5 ஆயிரம் பிளாஸ்டிக் கழிவறைகள் அமைக்க 2012ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால் இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை. கடந்த ஜூலை மாதம் மன்ற கூட்டத்தில் சென்னையில் 2000 எண்ணிக்கையில் புதிய நவீன கழிப்பிடங்கள் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது, முதல் கட்டமாக 348 இடங்களை தேர்வு செய்துள்ளோம் இந்த பணி 2015 மார்ச்சுக்குள் முடிவடையும் என்று அறிவித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்த ஆண்டு ஆரம்பத்தில் ரூ 35 கோடி செலவில் நவீன சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல் அது பயன்பாடற்று சீரழிந்து கிடக்கிறது.

இந்நிலையில் உலக கழிவறை தினமான நேற்று வெளியிடப்பட்ட இது தொடர்பான ஐ.நா. ஆய்வறிக்கை, உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் (ஒரு பில்லியன் மக்கள்) பொது இடங்களையே கழிவறையாக பயன்படுத்தி வருவதாகவும், இவர்களில் 82 சதவீதத்தினர் (சுமார் 825 மில்லியன் மக்கள்) இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் மட்டும் வசித்து வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த 10 நாடுகளில் முதல் இடம் பெற்றுள்ள இந்தியாவில் நாள்தோறும் 597 மில்லியன் மக்கள் (சுமார் 60 கோடி பேர்) திறந்தவெளிகளையே கழிவறையாக்கிக் கொள்கின்றனர் என இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலின் இரண்டாமிடத்தில் (54 மில்லியன் மக்கள்) இந்தோனேசியா, மூன்றாமிடத்தில் (41 மில்லியன் மக்கள்) பாகிஸ்தான், நான்காமிடத்தில் (11 மில்லியன் மக்கள்) நேபாளம், ஐந்தாமிடத்தில் (10 மில்லியன் மக்கள்) சீனா உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், நைஜர், மொஸாம்பிக் ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களை இந்த பட்டியலில் பிடித்துள்ளன.
Selva Kumar