September 20, 2021

திரையுலகத்தில் குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்!

குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி பெரும் விவாதம் எழுந்துள்ளது. அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் மசோதா பற்றிய தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளன. 14 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வியளிக்கும் திட்டம் ஏற்கெனவே அமலில் இருந்தாலும், குழந்தைத் தொழிலாளர் முறையை முழுவதுமாக ஒழித்துவிட முடியவில்லை.
edit jun 3
குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துபவர்களைத் தண்டிப்பதற்குரிய சட்டம் வலுவாக இல்லாததே இதற்குக் காரணம். புதிய சட்டத் திருத்தம் மூலமாக தண்டனைகள் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

பள்ளி நேரம் தவிர்த்த நேரங்களில் பெற்றோரின் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவது, விளையாட்டுத் துறை, விளம்பரங்கள், திரைப்படங்களில் நடிப்பது ஆகியவற்றுக்கு இந்தச் சட்டத் திருத்தத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் தொழிலில் குழந்தைகள் உதவி செய்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நவீன யுகத்தின் தாக்கத்தால் பரபரப்பாகி வரும் சூழலில் பலருக்குக் குடும்பத்தைக் கவனிக்கக்கூட நேரம் இருப்பதில்லை. குடும்பங்களில் விரிசல்கள் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய சூழலில் பெற்றோரின் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பெற்றோரின் கஷ்டங்கள் குறித்து புரிதல் உணர்வு குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோரும் குழந்தைகளின் பலம், பலவீனங்களைத் தெரிந்து கொள்கின்றனர். அதற்கேற்ற வகையில் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு வழிகாட்ட முடியும். ஆபத்தான தொழில்களைப் பெற்றோர் மேற்கொண்டால், குழந்தைகளை அதில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், பள்ளி நேரத்தில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை, அது கல்வியுடன் இணைந்தே நம் நாட்டில் பார்க்கப்படுகிறது. அந்தத் துறையை ஊக்குவிப்பதற்காக, உயர்கல்விச் சேர்க்கைகளில் சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், கல்வியறிவில் பின்தங்கிய மாணவர்கள், விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் அடையும் வாய்ப்பும் உண்டு. இதனால், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் “ஏதாவது எதிர்காலம் நிச்சயம்’ என்ற நம்பிக்கையை விளையாட்டுத் துறை ஏற்படுத்துகிறது.

ஆனால், அந்த வரிசையில் விளம்பரத்தையும், திரைப்படத் துறையையும் இணைத்தது எந்த வகையிலும் நியாயமாகத் தெரியவில்லை. குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு இவை எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் விளம்பரங்களும், திரைப்படங்களும் குழந்தைகளை எப்படி முன்னேற்றும்? பெற்றோரின் உடனடி பணத் தேவைகளைப் நிறைவேற்றுவதைத் தவிர, இந்த விதிவிலக்கில் நன்மைகள் எதுவும் இல்லை.

குழந்தைகளை விளம்பரத்தில் பார்க்கும் மற்ற குழந்தைகள், அதில் வரும் குழந்தைகளின் சாகசங்களை உண்மையென்று நம்பி விடுகின்றனர். அதனால், தேவையற்ற பொருள்கள் மீது மோகம் ஏற்படுகிறது. இத்தகைய விளம்பர உத்தியால் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர்.

திரைத் துறையைப் பற்றி கேட்கவே வேண்டாம். இன்றைய காலக்கட்டத்தில் தயாரிக்கப்படும் படங்களில் பெரும்பாலும் கலையம்சம் காணப்படுவதில்லை. வெறும் வணிக நோக்கில் அமையும் படங்களே பெரும்பாலும் வெளிவருகின்றன.

திரைப்படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள், குதூகலம் நிறைந்த மாணவப் பருவத்தை இழக்கின்றனர். அவர்களது கல்விச் சூழல் பாதிக்கப்படுகிறது. கல்வி பெறும் வாய்ப்பையும் கோட்டை விடுவதோடு, எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் குழந்தை நட்சத்திரங்களே இங்கு அதிகம்.

குழந்தை நட்சத்திரங்களின் நிலையைவிட மோசமானது இளம் நாயகிகளின் வாழ்க்கை.குழந்தை முகம் கூட மாறாத பெண்கள் 13, 14 வயதிலேயே கதாநாயகிகளாக அரங்கேறி விடுகின்றனர். அதனால் அவர்கள் படும் இன்னல்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. முழுமையான பெண்மை கூட மலராத வயதில், நாயகிகளாக நடிப்பதற்கு அந்தக் குழந்தைகள் தரும் விலை அதிகம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படம் வெளிவந்து நன்றாக ஓடியது. அதில் நாயகியாக நடித்தவர் 13 வயதுச் சிறுமி. அப்போது அந்தப் பெண்ணின் நிலை பற்றி சமூக ஆர்வலர்கள் கோபம் அடைந்தாலும், நாளடைவில் அது மறக்கப்பட்டது.

அந்தக் குழந்தைகளுக்கும் வாழ்க்கை என்று இருக்கத்தானே செய்கிறது. அவர்களுக்கும் கல்வி தேவை என்ற உண்மையை அரசு ஏற்க மறுப்பது ஏன்? சுயமாக முடிவெடுக்கத் தெரியாத வயதில் பெற்றோரின் பணத் தேவைகளுக்காக நடிப்பது குழந்தைத் தொழிலாளர் என்ற வரைமுறையில் அடங்காதா?

குழந்தைகளின் கலைத் திறனை பள்ளி நாடகங்களிலும், அவர்களது நட்பு வட்டாரங்களிலும் வெளிப்படுத்தினால் யாரும் குற்றம் சொல்லப் போவதில்லை. விழிப்புணர்வு சார்ந்த விளம்பரங்களில் தோன்றுவதில் தவறும் இல்லை.

ஆனால், அவர்களின் கலைத் திறனை தொழிலாகக் கருதி, அதற்கு விலக்கு அளித்திருப்பது எதனால் என்பது புரியவில்லை.

திரையுலகத்தில் குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்தால், திரையுலக ஆதரவுகளை அரசியல் கட்சிகள் இழக்க நேரிடலாம். ஆனால், எதிர்கால சந்ததியினர் காலம் முழுவதும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் செலுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சந்திர. பிரவீண்குமார்