September 23, 2021

“திருவரங்கம் தந்த மறு கீதையே !” -முதல்வர் ஓ.பன்னீரின் ஜெ, அர்ச்சனை!!

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த முதல் – அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல் – அமைச்சர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இருக்கையை அவர் பயன்படுத்தாமல் தான் ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கையிலேயே அமர்ந்தார்.மேலும் காலியாக இருந்த அந்த இருக்கையை வணங்கி விட்டு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுவதற்கு முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வணங்கி போற்றி புகழ்ந்து, ஓ. பன்னீர் செல்வம் நீண்டக் கவிதை இன்றை வாசித்தார்.
o-panneerselvam dec 4
அதில்…“ என் மக்கள் எதற்காகவும்,

எப்போதும் யாரிடமும் கையேந்தி நிற்காத

காலத்தை உருவாக்குவதே

என் வாழ்நாள் லட்சியம்” – என்று சூளுரைத்து

தமிழர்தம் வாழ்வு செழிக்க

தம் வாழ்வையே அர்ப்பணித்து,

தமிழகம் முதல்நிலை காண

விழிகாட்டி, வழிகாட்டி, ஒளிகாட்டும்

“அம்மா” எனும்

மூன்றெழுத்து மந்திரமே !

கன்னித் தமிழ் பூமி வழியே,

கழகம் என்னும் கோவில் வழியே

காலத் தாய் அள்ளித் தந்த

கருணை தெய்வமே !

முத்தான தமிழ் மண்ணைக் காப்பதற்கு

வித்தாக வந்துதித்த வெற்றித் திருமகளே !

வாடுகிற ஏழைக்கும்,

வருங்காலத் தலைமுறைக்கும்

பூரண ஒளியேற்றும்

புண்ணியமே !

விழிகளில் எல்லையில்லா கருணை தேக்கி,

வீடுதோறும் விலையில்லா அரிசியாக்கி,

நித்தமும் தமிழர் இல்லங்களில்

நிலாச்சோறு ஊட்டுகிற சத்தியத் தாயே !

சிப்பிக்குள் இருந்து தவம் செய்தே

முத்துக்கள் பிறப்பது போல்

செந்தமிழ் நாட்டுக்கு

சேவையாற்றி திளைப்பதற்கே

பிறப்பெடுத்து வந்த பேரறிவே !

ஏழைத் தொழிலாளிக்கு

என்.எல்.சி உரிமையைக்

காத்துத் தந்தும்,

கழனிவாழ் உழவர்க்கு

காவேரி, முல்லைப் பெரியாறை

மீட்டுத் தந்தும்,

அவர்தம் கட்டுத் துறைக்கு

ஆடு-மாடுகளை

விலையில்லாது அள்ளித் தந்தும்,

வெள்ளாமை காத்திட்ட வீரமங்கையே !

வெண்மைப் புரட்சிக்கும் வித்திட்ட விவேகமே !

பூமி வெப்பம் ஆகுதென்று

உலகம் இன்று புலம்புவதை,

தன் தீர்க்க தரிசனத்தால் உணர்ந்து

மண்ணைக் குளிர்விக்க

மழைநீர் சேகரிப்புத் திட்டம் தந்த

மாதரசியே !

அன்னைத் தமிழ் மண்ணில்

அந்நிய முதலைகளை அனுமதியேன் என்று

சிறு-குறு வணிகத்தைக் காத்திட்ட

காவல் அரணே !

கழனியும், கணினியும் ஒருசேரத் தழைத்திட,

மண்ணுக்கு நீரும்,

மாணவர்க்கு மடிக்கணினியும் தந்த

வள்ளலே !

அன்று வறுமையில் வாடிய தமிழ் மண்ணை

இன்று செழுமையில் கிடத்திய

செந்தமிழே !

பத்துக்கோடி தமிழினம்

பாசத்தோடு “அம்மா” என அழைக்கும்

தேவாரமே !

தியாகமே உருவான

திருமந்திரமே !

திருவரங்கம் தந்த

மறு கீதையே !

தாயே ! தங்கள் பொற்பாதம் பணிந்து

தாங்கள் வீற்றிருக்கும் திசை நோக்கி

என் தலைவணக்கம் செய்கின்றேன்!”

என்று கூறிவிட்டு  பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த படு நீளமான அறிக்கை ஒன்றை வாசித்தார் .