April 13, 2021

திருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை!

ஊரடங்கு தடையை மீறி சிதம்பரத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு, பாஜக மாநில பொதுச்செயாளர் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மகளிரணி அழைப்பு விடுத்திருந்தது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், விசிக தலைவர் திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை குஷ்பு தலைமை தாங்குவார் என்றும், பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் விசிக – பாஜக இடையே கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்து தடை விதித்தது.

இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சிதம்பரத்திற்கு புறப்பட்ட போது சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு, மாமல்லபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குஷ்பு தவிர, பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜக நிர்வாகிகள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விசிக கட்சியினர் கோழைகள் என்றும், தாம் கைது செய்யப்பட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் தோல்வி என்றும், அதற்காக அக்கட்சியினர் மகிழ்ச்சியடைய வேண்டாம் என்றும் நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட்டார்.

பின் மாலையில் விடுதலையான குஷ்பு நிருபர்களை சந்தித்த போது, “மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி உயர்வாக பேசியுள்ள பகுதிகள் திருமாவளவனுக்கு தெரியவில்லை. பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம்.

தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது. கடலூர் வரை போக வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைத்தோம். இது கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல. ஒரு பெண் என்ற ரீதியில் போராட வந்துள்ளேன். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் எதிரான கருத்து. ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.கொள்கைகளை வீட்டில் இருந்து துவங்க வேண்டும். பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார், மதிக்காத இடத்தில் கடவுள் இருக்கமாட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார்.” என்றார்