திருப்பதிக்கு வராதீங்கோ! : போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி சீமாந்திராவில் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, திருமலைக்கும் எந்த வாகனங்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

சீமாந்திராவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தற்போது திருப்பதியிலிருந்து திருமலை வரை மட்டும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். எனினும் வரும் 13ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல், 15ம் தேதி வரை திருமலைக்கு பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று போராட்டத்திற்காக போக்குவரத்து ஊழியர்களை வலியுறுத்தியுள்ளனர்.
sep 11 - Tirupati
மேலும் திருமலைக்கு எந்த வாகனத்தையும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியுள்ள போராட்டக்காரர்கள், திருமலைக்கு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் போராட்ட நாட்களில் வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனிடையே சீமாந்திராவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் வரும் 13ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள சவுத் பவர் கார்ப்பரேஷன் நிறுவன மின் ஊழியர்கள் சித்தூர், நெல்லூர், கடப்பா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 12ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதனால் மின்சார பழுது நீக்கப் பணிகள் முழுமையாக பாதிக்கப்படம் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் தங்கள் மொபைல் போன்களை அணைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அனைத்து போராட்ட கூட்டுக்குழு சார்பில் வரும் 13ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தீர்மானித்துள்ளனர்.