September 17, 2021

திருபாய் அம்பானி காலமான தினம் – ஜூலை 6

அந்த கால பாம்பேயில் சிங்கிள் ரூம் கொண்ட மச்சு வீட்டில் தூங்கி எழுந்து உலாவிக் கொண்டிருந்த ஒருத்தர், காலமாகும் போது 3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகவும் உயருவார் என்று எவராலும் கணித்திருக்க முடியாது.❤ ஜஸ்ட் 50,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு, இன்னிக்கு இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி காலமான தினம் ஜூலை 6

ambani
1932 -ம் ஆண்டு குஜராத் மாநிலம் சோர்வாத் நகரில் பிறந்தார் அம்பானி. நடுத்தரக் குடும்பம். இவரது கையில் செல்வம் புரளவில்லை. ஆனால் மனதில் நம்பிக்கையும், திறமையும் வற்றாத ஜீவநதி போல் ஊற்றெடுத்தது. தனது 16 வயதில் ஏமன் சென்ற அம்பானி, அங்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். சிறிது காலம் கழித்து அந்த பெட்ரோல் பங்கிலேயே நிர்வாகம் பார்க்கத் தொடங்கினார். பின்னர் இவர் 1958ல் இந்தியா திரும்பி, சொந்தமாக தொழில் செய்யத் தொடங்கினார். 1966 ல் இவர் ரிலையன்ஸை தோற்றுவித்த பிறகு நடந்ததெல்லாம் உலகம் அறியும்.

இத்தனைக்கும், தனது 16 வயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் அம்பானி. இதனால் இவரது வலது கரம் செயலிழந்தது. இவர் என்றுமே இயலாமை என்ற வார்த்தையைப் பற்றி நினைத்தது இல்லை. தனது குறைகளை துச்சமாய் நினைத்து, வெற்றியை மட்டும் தனது இலக்காய் நிர்ணயித்துப் பயணித்தார். “உன் கனவுகளை நீ நனவாக்கத் தவறினால், பிறர் அவர்களது கனவுகளை நிறைவேற்ற உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று கூறிய அம்பானி, தனது கனவுகளை விரைந்து நனவாக்கினார்.

ஆனால் தொடர்ந்து கனவு காண்பதை மட்டும் அவர் நிறுத்தவேயில்லை.

1958-ல் தனது நண்பர் சம்பக்லால் தமானியுடன் இணைந்து ‘மஜின்’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார் அம்பானி. அதுதான் 50,000 ரூபாய் முதலீட்டில் 350 சதுரடியில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம்.

மிகவும் அதிரடியான வியூகங்களோடு செயல்படுவாராம் அம்பானி. விலையேற்றங்களை முன்னரே கணித்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவதில் இவர் வல்லவர். சற்றே நிதானமாக வியாபாரம் செய்பவரான தமானி, அம்பானிக்கு ஈடுகொடுக்க முடியாததால் மஜின் கூட்டு நிறுவனம் பிரிய நேரிட்டது.

அந்த பிரிவுதான் ரிலையென்ஸ் என்னும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டது.

1966-ல் டெக்ஸ்டைல் சந்தையில் அடியெடுத்து வைத்தது ரிலையன்ஸ். தனது அண்ணன் மகனான விமலின் நினைவாக ‘விமல்’ என்ற பெயரில் தங்களது பொருட்களை தயாரித்து வெளியிட்டனர். கூடிய விரைவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயரானது விமல். அதன்பிறகு பாலியஸ்டரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்.

அன்றைய காலகட்டத்தில் இவர் இறக்குமதி செய்த பொருட்கள் எல்லாம் குறைந்தபட்சம் 300 சதவிகித லாபத்தை ஈட்டித் தந்தன. இறக்குமதியில் மட்டுமின்றி ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தினார் அம்பானி. மிள்காய் விளைச்சல் அதிகமாக இருந்ததால் வளைகுடா நாடுகளுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்தார். லாபத்தை இன்னும் அதிகரிக்க பாலியஸ்டரை தானே தயாரிக்க நினைத்தார் அம்பானி. அதற்கான கனரக இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து பாலியஸ்டர் தொழிற்சாலையை உருவாக்கினார். உலக வங்கியிலிருந்து அத்தொழிற்சாலையை பார்க்க வந்த வல்லுநர்கள், ‘வெறும் 14 மாதங்களில் இவர்கள் இத்தொழிற்சாலையை அமைத்த விதம் அபாரமானது. உலகத்தரத்தில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது’ என்று சான்றளித்தனர். இதுதான் அம்பானியின் தொலைநோக்குப் பார்வை.

சக போட்டியாளர்களைவிட பல அடிகள் முன்னர் இருப்பார் அம்பானி.  அது மட்டுமின்றி தான் மட்டும் உயர வேண்டும் என்று நினைத்தவரல்ல. தன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் முதற்கொண்டு பணிபுரியம் ஊழியர்கள் வரை அனைவருக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்தவர் அம்பானி. ஊழியர்களின் சம்பளத்தை சீராக உயர்த்திக்கொண்டே இருப்பார். சலுகைகளை ஐப்பசி மாத வருணன் போல் வாரி வழங்குவார். 1986ல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்கு, உலகமே வியக்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரம்மிக்கவைத்தனர்.

பாலியஸ்டர் உற்பத்தியில் இவர் எடுத்த முயற்சிகள் பெரும் லாபத்தை ஈட்டியது. இதனால் ‘பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

1990களுக்குப் பிறகு ரிலையன்ஸ் கண்டதோ அசுர வளர்ச்சி. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் கால்பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம். கால்பதித்த ஒவ்வொரு துறையிலும் விருட்சமடைந்து இன்று உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் சக்தியாய் நிற்கிறது ரிலையன்ஸ்.

உலக வணிக சந்தையில் ஒரு பெரும் இடம்பிடித்த ரிலையன்ஸை தனது ஒற்றை மூளையால் செதுக்கிய திருபாய் அம்பானி, தனது மூளை ஒத்துழைக்காமல் போக மீண்டும் வலிப்பு ஏற்பட்டு தனது 69வது வயதில் 2002-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் இயற்கை எய்தினார் திருபாய் அம்பானி.