October 21, 2021

‘திரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் -மீனா ஜோடியில் ”கோணங்கள்” ஆகிறது!

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வந்த ‘திரிஷ்யம்’ படத்தின் வெற்றி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இப்படத்தை ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது. இப்படி சகலரையும் விரும்பவைத்த ’திரிஷியம் படத்தின் கதை என்ன?
Drishyam_movie `1
ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) ஒரு அனாதை. ரியல்எஸ்டேட் தொழில்மூலம் முன்னேறி, தற்போது ராஜக்காட் என்ற சிறிய நகரில் லோகல் கேபிள் டிவி நடத்திவருபவர். ராணி (மீனா) என்ற பெண்ணைக் காதலித்து மணக்கிறார். அவர்களுக்குப் பிளஸ்டூ படிக்கும் அஞ்சு, மூன்றாம் வகுப்பு படிக்கும் அனு என இரு பெண் குழந்தைகள். ஜார்ஜ் ஒரு கறார் பேர்வழி. அனாவசியமான செலவுகள் அவருக்குப் பிடிக்காது. அவருக்குக் குடும்பத்தின் மீது அபரிமிதமான பிரியம். சினிமா மீது அளவில்லாத ஒரு மோகம். அவர் சில முக்கியமான முடிவுகளை எடுக்க சினிமாக்களை உதாரணம் கொள்ளக்கூடியவர். அவரின் குடும்பத்தாரைத் தொல்லைப்படுத்தாமல் இருக்க, பல நாட்கள் கேபிள் டிவி அலுவலகத்தில் தங்கி இரவில் சினிமா பார்ப்பவர்.

இதற்கிடையில் வெளியூரில் நடக்கும் பள்ளி மாணவர்களுக்கான முகாமில் அஞ்சு கலந்துகொள்கிறாள். அங்கு அஞ்சு குளிக்கும்போது சக மாணவன் வருண், குளியலறையில் கேமராவை மறைவாக வைத்துப் படம் பிடித்துவிடுகிறான். அவன், கேரள போலீசின் தலைமை அதிகாரி கீதா பிரபாகரின் மகன்.முகாமில் இருந்து அஞ்சு வந்த மறு நாள், அவளைத் தேடி வரும் வருண், அன்று இரவு அவள் வீட்டின் பின்புற அறைக்கு வரவேண்டும் என மிரட்டுகிறான். சிறு பெண்ணான அவள் பயப்படுகிறாள். அவள் ஒத்துழைக்க மறுத்தால் வீடியோவை இன்டெர்நெட்டில் போடப் போவதாக மிரட்டுகிறான்.

வருண் அவள் வீட்டின் பின்புற அறைக்கு வந்து அவளை உறவுக்கு அழைக்கிறான். அப்போது அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக ராணியும் அங்கே காத்திருக்கிறாள். தன் மகளைக் காப்பாற்ற, அஞ்சு ஒரு சிறு பெண், அவளின் வாழ்க்கையைப் பாழாக்க வேண்டாம் எனவும், அந்த வீடியோ க்ளிப்பை நீக்கி விடுமாறும் கோருகிறாள் ராணி. வருண் மறுக்கிறான். மகள் மீது அவ்வளவு பிரியம் எனில், நீ என்னோடு உறவுகொள் என்று ராணியிடம் இளக்காரமாகக் கூறுகிறான். இதனால் கோபப்படும் அஞ்சு , ஒரு இரும்புக் கம்பி கொண்டு அவனைத் தாக்குகிறாள். அவன் மொபைல் போனையும் உடைத்துவிடுகிறாள்.

அஞ்சுவின் செயலால் ராணி அதிர்ச்சியடைகிறாள். காரணம் வருண் இறந்துவிடுகிறான். அம்மாவுக்கும் மகளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதற்றத்துடன் தொலைபேசியில் அழைத்தால் அதை எடுத்து வைத்துவிட்டு ஜார்ஜ் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து வருணின் உடலை வீட்டின் தோட்டத்தில் ஜார்ஜ் தோண்டி வைத்திருந்த குழியில் போட்டுப் புதைத்துவிடுகிறார்கள்.மறுநாள் அதிகாலை வீட்டுக்குத் திரும்பும் ஜார்ஜ், நடந்த நிகழ்வுகளைக் கேட்டு அதிர்ச்சி அடையவில்லை, குடும்ப மானத்தைக் காக்க அவர்கள் செய்தது சரிதான் என்று சொல்லிவிட்டு, இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளி வருவது என்று ஆலோசிக்கிறார். அவர் பார்த்த பல படங்களின் புத்திசாலித்தனமான ஐடியாக்கள் மூலம் அவர்களது குடும்பம் பிரச்சினையிலிருந்து வெளிவருகிறது. இவற்றை அற்புதமாக இயக்குநர் இப்படத்தின் மூலம் நமக்குச் சொல்கிறார்.
Drishyam_movie `kamal
இப்படிப்பட்ட படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் நடிக்க கமலஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.இது குறித்து ‘திரிஷ்யம்’ படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறும் போது, திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமல் ஆர்வமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த வருடத்தின் மத்தியில் துவங்கும். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது என்றார். தமிழ் ரீமேக்கிலும் மீனாவே கமல் ஜோடியாக நடிப்பார் என படக்குழுவினர் தெரிவித்தனர். மீனாவின் குடும்ப பாங்கான கேரக்டர் ‘திரிஷ்யம்’ படத்தில் கச்சிதமாக இருந்தது. எனவே அவரையே தமிழிலும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது ‘கோணங்கள்’ என்று டைட்டில் வைத்துள்ள இப்படத்தில் மீனாவும் கமலுடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதன் மூலம் பட உலகில் மீண்டும் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்தும் முடிவில் இருக்கிறார். தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிப்பார் என தெரிகிறது.