September 20, 2021

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி!

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் திரிபுரா மாநிலத்தில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. அங்கு பாரதீய ஜனதா தனது கூட்டணி கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்திலும், மேகாலயாவிலும் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. நாகாலாந்தில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதேபோல் மேகாலயா மாநிலத்திலும் பாரதீய ஜனதா கூட்டணியே ஆட்சி அமைக்க இருக்கிறது.

60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது, 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது.

ஆளும் கட்சியான காங்கிரசுக்கு அதிகபட்சமாக 21 இடங் கள் கிடைத்தன. மறைந்த தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் கொன்ராட் சங்மா எம்.பி. தலைமையிலான தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கட்சி மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது.

ஐக்கிய ஜனநாயக கட்சிக்கு 6 இடங்களும், மக்கள் ஜன நாயக முன்னணிக்கு 4 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 2 இடங்களும் கிடைத்தன. மலைப்பகுதி மக்கள் ஜனநாயக கட்சி 2 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ், தேசிய விழிப்புணர்வு இயக்கம் ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

அதிகபட்சமாக 21 இடங் களை கைப்பற்றி தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்கும் காங்கிரஸ் மேகா லயாவில் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. இதற்காக டெல்லியில் இருந்து மேகாலயா தலைநகர் ஷில்லாங் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், அகமது பட்டேல், சி.பி.ஜோஷி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மாநில கவர்னர் கங்கா பிரசாத்தை சந்தித்து, அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில், தேசிய மக்கள் கட்சியின் தலைமையில் ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பிற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா முயற்சி செய்தது.

இதற்காக அசாம் மாநில நிதி மந்திரி ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மாவை ஷில்லாங்குக்கு பாரதீய ஜனதா மேலிடம் அனுப்பி வைத்தது. அங்கு சென்று அவர்கள் நடத்திய ஆலோசனையில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கொன்ராட் சங்மா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கொன்ராட் சங்மா நேற்று மாலை கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் கங்கா பிரசாத்தை சந்தித்து, தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், எனவே ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறும் உரிமை கோரினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தங்களுக்கு 34 உறுப்பினர்களின் (தேசிய மக்கள் கட்சி-19, ஐக்கிய ஜனநாயக கட்சி-6, பா.ஜனதா-2, மலைப்பகுதி மக்கள் ஜனநாயக கட்சி-2, தேசியவாத காங்கிரஸ்-1, தேசிய விழிப்புணர்வு இயக்கம்-1, சுயேச்சைகள்-3) ஆதரவு உள்ளது என்றும் எனவே கவர்னர் அழைப்பு விடுப்பார் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைக்க கொன்ராட் சங்மாவுக்கு கவர்னர் கங்கா பிரசாத் நேற்று இரவு அழைப்பு விடுத்தார்.

கவர்னரின் அழைப்பை ஏற்று மேகாலயாவின் புதிய முதல்-மந்திரியாக கொன்ராட் சங்மா நாளை (செவ்வாய்க் கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர்.