September 29, 2021

திட்ட கமிஷனுக்கு பதில் புதிய அமைப்பு: முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்க வேண்டிய புதிய அமைப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநில முதல்–மந்திரிகளின் மாநாட்டை டெல்லியில் கூட்டி ஆலோசனை நடத்தினார்.இந்த மாநாடு முடிந்ததும், எந்த அதிகாரிகளின் துணையும் இல்லாமல் அவர் மாநில முதல்–மந்திரிகளுடன், ஓய்வாக சாதாரண முறையில் கலந்துரையாடினார். அவர்களது மாநிலங்களின் வளர்ச்சித்திட்டங்கள்பற்றி கேட்டறிந்தார்.முதல்–மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் புதுமையான முறையில் அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வரும்திட்டங்கள்பற்றி பிரதமர் மோடியிடம் சகஜமாகப் பேசி எடுத்துரைத்தனர்.
இதை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிந்திருந்தது.
pm cm lawn
மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட உள்ள புதிய அமைப்பு குறித்து பிரதமர் தலைமையில் முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய அமைப்பை உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதேசமயம், இப்போது உள்ள அமைப்பை கலைப்பது குறித்து இம்மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

கூட்டத்தில் மோடி,”திட்டக் குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட உள்ள அமைப்பானது “இந்திய அணி’ (டீம் இந்தியா) என்ற சித்தாந்தத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, பிரதமர் – முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மத்திய – மாநில அதிகாரிகள் என்ற மூன்று அணிகளைக் கொண்டதாக இருக்கும்.புதிய அமைப்பில் மாநிலங்களுக்கு முக்கியப் பங்கு இருக்க வேண்டும். சில நேரங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க உரிய மேடை இல்லை என்று மாநிலங்கள் கருதுகின்றன. எனவே, மாநிலங்களுக்கு இடையிலான தகராறுகளைத் தீர்க்க திறன்வாய்ந்த கட்டமைப்பு அவசியம்.தற்போது, வளர்ச்சி என்பது நம் அனைவருக்கும் முன்னுரிமையான விஷயமாகும். வளர்ச்சியை ஏற்படுத்த புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்கான நேரம் இப்போது வந்துள்ளது.அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசின் கொள்கைகளை வகுப்பதில் சிந்தனையாளர் அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன.இந்தியாவிலும், அரசாங்க அமைப்புக்கு வெளியே மிகப்பெரும் அளவில் பொருளாதாரச் செயல்பாடுகள் நிகழ்கின்றன. அவற்றுக்கான கொள்கைகளை வடிவமைக்க வேண்டியதும் அவசியம். முதல்வர்கள் தெரிவித்துள்ள யோசனைகள், திட்டக் குழுவுக்கு மாற்று அமைப்பை உருவாக்க உதவும்.” என்று குறிப்பிட்டார்.
pm cm satand
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “மத்திய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக புதிய அமைப்பைத் துவங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியக் கூட்டாட்சி முறையில், மாநிலங்கள் நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.கடந்த ஆண்டுகளில் திட்டக் கமிஷன் இந்தப் பணிகளை செய்யத் தவறி, ஆலோசனை கூறும் அமைப்பு என்பதில் தவறி விட்டது. பொது நிதிப் பங்களிப்பு திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் திட்டக் கமிஷன் தோல்வியடைந்து விட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, தனியார் துறை வளர்ச்சி கண்டு விட்டது. தற்போது திட்டக் கமிஷனுக்கு பதில் புதிய அமைப்பு ஏற்படுத்த பிரதமர் முயற்சிப்பது வரவேற்கத்தக்கது.” என்றார்