October 18, 2021

தாம்பரத்தில் ‘நமோ டீக்கடை’:தொண்டர்களுக்கு இலவச டீ!

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சிறு வயதில் டீ விற்றதை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர். டீ விற்றவர், பிரதமர் ஆக முடியாது என அவர்கள் கிண்டல் செய்தனர். காங்கிரசாரின் விமர்சங்களை சாதகமாக்கி கொண்ட பா.ஜ.க.வினர், நாடு முழுவதும் நரேந்திர மோடி பெயரில் ‘‘நமோ’’ டீக்கடையை திறந்து வரும் நிலையில் சென்னையில் நாளை நடைபெறவுள்ள மோடி பொதுக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக தாம்பரத்தில் ‘நமோ டீக்கடை’ திறக்கப்பட்டுள்ளது.
ModiTeaParty_feb 7
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சிறு வயதில் டீ விற்றதை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர்.
நரேந்திர மோடி டீ வியாபாரியாகலாமே தவிர பிரதமர் ஆக முடியாது என்று கிண்டல் அடித்தனர்.காங்கிரசாரின் விமர்சன பேச்சை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட பா.ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் நரேந்திர மோடி பெயரில் ‘‘நமோ’’ டீக்கடையை திறந்து வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னையில் நாளை மாலை பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. வண்டலூர் வி.ஜி.பி. திடலில் நடக்கும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.இதற்காக வி.ஜி.பி. திடலில் 100 ஏக்கர் நிலம் பொதுக்கூட்டத்துக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற வடிவில் 160 அடி நீளம் 40 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தையொட்டி தாம்பரம் தொகுதி பா.ஜ.க. சார்பில் இரும்புலியூர் பாலம் அருகே ‘நமோ டீ ஸ்டால்’ திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இலவசமாக டீ விநியோகிக்கப்பட்டது.இதேபோல், நாளை நடக்கும் மோடி பொதுக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் அனைவரும் இலவசமாக டீ விநியோகிக்கப்படும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.