தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்!- டாக்டர் ராமதாஸ் யோசனை

“தனியார் நிறுவனங்கள் எந்த கண்காணிப்பும் இல்லாமல் தாது மணலை கொள்ளை அடித்து வருவதால் தமிழக அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் தனியாருக்குச் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமளவில் மணல் கொள்ளை நடைபெற்றிருப்பது அதிகாரிகள் குழு ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் அரிய கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது.எனவே, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.”என்று ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்”தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் குழு ஓரிரு நாட்களில் அதன் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது. தாது மணல் கொள்ளை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் இந்தக் குழுவின் ஆய்வில் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் குழு விசாரணை நடத்திய தூத்துக்குடி மாவட்டத்துடன் ஒப்பிடும்போது, அதன் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மிகப் பெரிய அளவில் தாது மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இது குறித்தும் அதிகாரிகள் குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கும் அரிய வகை தாது மணல்களை வெட்டி எடுத்து, அவற்றிலிருந்து இந்திய அμசக்தித் துறைக்கு தேவையான மோனாசைட், இல்மனைட் ஆகிய தாதுக்களையும், மிகப்பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் கார்னெட் தாதுவையும் பிரித்தெடுப்பதற்காக இந்திய அருமணல் நிறுவனத்தை 50 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு தொடங்கி நடத்தி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக் குறிச்சியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தான் கன்னியா குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் தாது மணல் உள்ளதா? என்பதற்கான ஆய்வுகளை அதன் சொந்த செலவில் நடத்தியது.

அதன்பின்னர் இந்தத் தொழிலில் ஈடுபட்ட சில தனியார் நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் துணையுடன் இந்த மாவட்டங்களில் கிடைக்கும் தாது மணல் முழுவதையும் மொத்தமாக வெட்டி எடுத்து விடுவதால் அருமணல் ஆலைக்கு போதிய அளவு தாது மணல் கிடைக்கவில்லை. இதனால் அருமணல் ஆலை அதன் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் 30 விழுக்காடு அளவுக்கே தாதுக்களை உற்பத்தி செய்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் தாது மணலை வெட்டி எடுக்க இந்த நிறுவனம் கடந்த 2000 ஆவது ஆண்டிலேயே விண்ணப்பித்த போதிலும், அதன் மீது மாநில அரசு இன்று வரை எந்த முடிவும் எடுக்க வில்லை. இதனால் இந்த ஆலை கடுமையான இழப்பை சந்தித்து வருகிறது; இந்த ஆலையை நம்பியுள்ள 4,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இது ஒரு புறமிருக்க, நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான மோனாசைட் தாதுப் பொருளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் உரிமை இப்போது தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், அது நமது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்து விடும்.

அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் எந்த கண்காணிப்பும் இல்லாமல் தாது மணலை கொள்ளை அடித்து வருவதால் தமிழக அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் தனியாருக்குச் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமளவில் மணல் கொள்ளை நடைபெற்றிருப்பது அதிகாரிகள் குழு ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் அரிய கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது.

எனவே, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். இதன் மூலம் தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில், அந்த நிறுவனம் செயல்பட்டு வரும் பகுதியில் உள்ள மணல் குவாரிகளுக்கான குத்தகையை அதற்கு வழங்க வேண்டும்.”என்று அதில் கூறியுள்ளார்.