September 18, 2021

தலைமை பதவியில் உள்ள பெண்களுக்கு பிரஷர் ஜாஸ்தி! – சர்வே தகவல்

நவீன உலகில் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் நடுத்தர வயதினரும் பெரும் எண்ணிக்கையில் வேலைக்கு செல்வதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 32 வயது முதல் 58 வயது வரையான பெண்களில் 78% பேர் கடும் பணிச்சுமை காரணமாக மண அழுத்தம், உடல் பருமன், முதுகுவலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மட்டுமில்லாமல் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் அசோச்சம் முன்னரே தெரிவித்திருந்தது.மேலும் ம், ஏதோ ஒரு வகையில் ஆண்களை விட பெண்களுக்கு ஒரு விதமான மன அழுத்தம், அல்லது மனக் குழப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மற்ற துறைகளைப் போல் நிர்வாக துறையில் உள்ள பெண்களின் மனநிலை எப்படி உள்ளது என்று ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது.
depressed_female_boss
இதில், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆயிரத்து 300 ஆண் மற்றும் ஆயிரத்து 500 பட்டதாரி பெண்களை 1993ம் ஆண்டிலும், அதன் பின்னர் 2004ம் ஆண்டிலும் பேட்டி கண்டனர். ஆய்வில் கலந்து கொண்டவர்களுக்கு 1993ம் ஆண்டு 54 வயதாகவும், 2004ம் ஆண்டு 64 வயதாகவும் இருந்தது.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட பலர் நிறுவனங்களின் நிர்வாகிகளாக செயல்பட்டனர். ஆண் நிர்வாகிகள் பிறரை பணியில் இருந்து நீக்கும் போது மன அழுத்தம், நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவித்தனர். இந்த ஆய்வில் ஆண் நிர்வாகிகளை விட பெண் நிர்வாகிகளே அதிக மன அழுத்த பாதிப்புக்கு உள்ளானது தெரியவந்தது. நிறுவனத்தில் நல்ல சம்பளம் மற்றும் பணி அதிகாரத்தில் உள்ள பெண், சாதாரண நிலையில் உள்ள பெண்களை விட 9 சதவீதம் அதிக மன அழுத்தத்துடன் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முன்னணி ஆராய்ச்சியாளரான டெட்யானா புரோவ்ஸ்கா கூறும்போது, ”எங்கள் ஆய்வில் கலந்துகொண்ட பெண்கள் அதிகமாக படித்தவர்கள். அதிக வருமானம் ஈட்டுபவர்கள். மிகுந்த மரியாதைக்குரிய தொழிலில் உள்ளவர்கள். அதிகபட்ச பணி நிறைவு மனப்பான்மை கொண்டவர்கள். இருப்பினும், வேலை நெருக்கடி இல்லாத வருமானம் குறைந்த பெண்களுடன் ஒப்பிடும் போது, நிர்வாகத்தில் தலைமைப் பதவியில் உள்ள பெண்களுக்கு அதிக மன நெருக்கடி இருப்பதை கண்டோம்” என்றனர்.

லண்டனில் உள்ள சிட்டி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ருத் ஷிலே கூறும்போது, ”மனிதர்களுக்கே உரிய இயற்கை குணத்தால் பெண்களுக்கு நெருக்கடி அதிகமாகிறது. ஆண், பெண் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் போது, பெண் தன் தனித்தன்மையை நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. அப்படியே தலைமை பதவிக்கு வந்தாலும், அவருடன் பணிபுரியும் சக அதிகாரிகள், அந்தப் பெண்மணியை எந்தளவுக்கு நம்பி பணியை ஒப்படைக்கின்றனர் என்பது கேள்விக்குரிய விஷயம். தன்னை சக பணியாளர்கள் நம்பாத நிலையில், தன் பணியை நிரூபிப்பதற்காக தலைமை பதவியில் உள்ள பெண்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது அதிகரிக்கிறது” என்கிறார்.

 

தகவல் :http://jannalmedia.com/dpages.php?id=2615