October 16, 2021

தலித் அடையாளம் அவசியமா?

சில மாதங்களுக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார். தலித்துகளுக்கும் கருப்பின மக்களுக்கும் ஒரே விதமான பாகுபாடு இருந்தாலும் தலித்துகளுக்கு ஒரு சாதகமான அம்சம் இருக்கிறது. அதாவது தலித்துகள் நிறம் மற்றும் அடையாளம் எல்லா இந்தியர்களைப் போன்றே இருக்கிறது. ஆகவே பொது சமூகத்தில் தலித் என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது. இது சாதகமான அம்சம் தானே என்று கேட்டார்.இந்த சாதகமான அம்சம் தான் தலித்துகளை முடக்கி வைத்திருக்கிறது என்றேன்.
edit oct 18
அமெரிக்க அதிபர் ஒபாமா தான் ஒரு கருப்பு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. அவரது நிறம் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும். இதனால் கருப்பின சமூகம் தங்களது விடுதலைக்காக ஒன்றிணைய பெரும் வாய்ப்பாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தங்களுடைய நிறம் வெளிப்படையாக தெரிவதனால் அவர்களுக்கு எவ்வித உளவியல் சிக்கலும் இல்லை. ஆனால் தலித்துகள் வேறுவிதமான சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர். தலித் ஒருவர் ஐ.ஏ.எஸ். படித்திருக்கலாம், அவரது மனைவி உயர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். நிறைய சொத்துக்கள் உடையவராக இருக்கலாம். ஆனால் தான் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறமுடிவதில்லை. அதுவே பிற சமூகத்தினர் எந்தவிதமான சொத்துக்களும் வசதிகளும் இல்லாமல் இருந்தாலும் தங்களது சாதியை பகிரங்கமாக கூற முடிகிறது. இது ஏன்?

மென்பொருள் துறையில் பணியாற்றும் தலித் இளைஞர் ஒருவர் மாதம் ரூ.1,50,000 சம்பளம் வாங்குகிறார். அவரது காதல் மனைவி வடமாநிலத்தைச் சேர்ந்தவர். தம்முடைய குழந்தை அபர்ணாவை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது சான்றிதழில் சாதியை குறிப்பிடாமல் புறக்கணித்தார். அதற்கு முக்கியக் காரணம், “சின்ன வயதில் தான் அதிகமான சாதி கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னைப்போன்று என் மகளும் பாதிக்கப்படக் கூடாது. ஆகவே என் மகளுக்கு சாதி அடையாளம் தேவையில்லை. இது ஒரு விதத்தில் சாதி ஒழிப்பிற்கான நடவடிக்கை தானே” என்று கேட்டார்.

இது சாதி ஒழிப்பிற்கான நடவடிக்கையாக தெரியவில்லை என்றேன். சாதிய துவேசத்தால் பாதிக்கப்படுகிற தலித்துகள் தங்களுடைய அடையாளத்தை மறைப்பதனால் சாதி ஒழிந்துவிடாது. சாதியை கடைபிடிக்கிற குழுக்களிடமிருந்து மாற்றம் வர வேண்டும். அதுதான் சாதி ஒழிப்பாக இருக்க முடியும் என்றேன். வெளிப்படையாக தலித் ஒருவரின் அடையாளம் தெரிந்தும் அவரது உழைப்பினை, திறமையை, அறிவினை பொதுச் சமூகம் என்று ஏற்றுக் கொள்கிறதோ அன்றுதான் சாதி ஒழிப்பு நாளாக அடையாளப்படுத்த முடியும். ஆண்டாண்டு காலமாக மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் ஒரு சமூகத்தை ஒதுக்கி வைத்திருக்கிறோம் என்கிற குற்ற உணர்வு சாதியை கடைபிடிப்பவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த குற்றஉணர்வு தான் மாற்றத்திற்கான துவக்கம். இந்த மாற்றம் நம்மில் ஏற்பட்டிருக்கிறதா?

சாதி உணர்வு என்பது மனசு சம்பந்தப்பட்டது. தேனீர் கடையில் இரட்டை குவளை முறை, கோவிலுக்குள் தலித்துகள் செல்ல அனுமதி மறுப்பு, சாதி வாரியான சுடுகாடு போன்ற பல தீண்டாமை பாகுபாடுகள் உள்ளன. இவையெல்லாம் சாதி நிறுவனங்கள். ஆனால் அவற்றை இயக்குவது சாதிய உணர்வு. பிற சமூகத்தினர் தலித்துகளை தொட்டுவிட்டால் தீட்டு என்கிறார்கள். தலித்துகள் பிற சமூகத்தினரை தொட்டுவிட்டால் பாவம் என்கிறார்கள். தீட்டிற்கு பரிகாரம் உண்டு. பாவத்திற்கு பரிகாரம் இல்லை. இதுபோன்ற போலி கருத்துக்கள் சாதிய சாசனமாக இருக்கின்றன. இவைதான் இன்றைக்கு நம் தேசத்தை கூறுபோட்டு வைத்துள்ளன.

உத்தபுரத்தில் உள்ள தீண்டாமை சுவரை இடிப்பது எளிது. ஏனென்றால் அவை வெறும் சிமிண்ட், இரும்பு, கற்களால் கட்டப்பட்டவை. ஆனால் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் தீண்டாமை சுவரை எப்படி இடிப்பது. ஆண்டாண்டு காலமாக புரையோடிக் கிடக்கும் சாதி விஷ வித்துக்களை ஒப்படி ஒழிப்பது.

இந்த விஷ வித்துக்களால் நொறுக்கப்பட்ட மக்களாக தலித்துகள் உள்ளனர். தம்முடைய அடையாளம் வெளியே தெரிந்தால் தங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்கிற அச்ச உணர்வோடு பெரும்பான்மை தலித்துகள் உள்ளனர். இந்த அச்ச உணர்வு உடைபட வேண்டும். தீண்டாமையை கடைபிடிக்கிற, வன்கொடுமையை நடத்துகிறவர்கள்தான் குற்றவாளிகள். அதனால் பாதிக்கப்படுகிறவர்கள் நீதியின் குழந்தைகள். ஆகவே குற்றம் செய்தவர்கள்தான் அச்சப்பட வேண்டுமே தவிர, பாதிக்கப்படுபவர்கள் சுதந்திரத்தை உணர வேண்டும். அதனால் தான் தலித் அடையாளம் என்பது அவசியமாகிறது.
தலித் என்பது சாதி அல்ல. சமூகத்தால் நொறுக்கப்பட்ட மக்களின் விடுதலை அடையாளம். தலித் என்றால் நொறுக்கப்பட்டவர்கள் என்று பொருள். ஏன் தங்களையே தாழ்மைபடுத்திக் கொள்ள வேண்டும். தலித்துகளுக்கு வீரமான வரலாறு உண்டு. இந்த மண்ணை காத்த பண்பாடு உண்டு. ஆகவே இந்த அடையாளம் அர்த்தமற்றது என்றும் சிலர் சொல்லுகின்றனர். இந்த கூற்று ஓரளவு உண்மை என்றாலும் சமூகம், பொருளாதாரம், அரசியல், அதிகாரம் போன்ற பல நிலைகளில் தலித்துகள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருகிறது. மறுக்கப்பட்டவர்கள் தங்களை நொறுக்கப்பட்டவர்களாக ஒன்றிணைவதன் மூலம் நொறுக்குகிறவர்களின் மனசாட்சியை தட்டி எழுப்புவதற்கான பயணமாகவே இந்த அடையாளம் விருட்சமெடுத்து நிற்கிறது.

பொது சமூகத்தில் தலித் அடையாளம் குறித்து பல விவாதங்கள் நடைபெறுகின்றன. சாதி ஒழிப்பு பேசுபவர்கள் இடஒதுக்கீடு கேட்கக்கூடாது. இடஒதுக்கீட்டினால் தான் சாதி அடையாளம் வெளியே தெரிகிறது. ஆகவே சாதியை ஒழிக்க வேண்டுமென்று சொன்னால் இடஒதுக்கீட்டையும் ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டில் 18 சதவீதம் தான் தலித்துகளுக்கு வழங்கப்படுகிறது. சமவாய்ப்பு கொடுத்து சம அந்தஸ்த்தினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஓரளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் சமூக அந்தஸ்த்து என்பது தலித்துகளுக்கு எட்டாத கனவாக இருந்து வருகிறது.

நீதியரசர்கள், அரசு செயலர், விஞ்ஞானிகள் போன்ற பல உயர்ந்த பொறுப்புகளில் தலித்துகள் இருந்தாலும் அவர்கள் மீது சாதிய பாகுபாடு கடைபிடிக்கப்பட்டு தான் வருகின்றன. இதற்கு காரணம் இடஒதுக்கீடு அல்ல. அவர்களை தலித்துகளாக பார்க்கக்கூடிய பொது சமூகத்தின் சாதிய மனோபாவம். இடஒதுக்கீடு அவர்களுக்கு உயர்ந்த பொறுப்பினை கொடுத்திருக்கிறது. சாதிய மனோபாவம் அவர்களை தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கிறது. இந்த பார்வை நம்மில் எப்போது ஒழியும்?
சாதி வன்மத்தை நடத்துபவர்கள் சாதியாக ஒன்றிணைகிறார்கள். சாதி வன்மத்தால் பாதிக்கப்படுபவர்கள் தலித்துகளாக ஒன்றிணைய வேண்டும். இந்த ஒன்றிணைப்பு என்பது அநீதிக்கு எதிரான முன்னெடுப்பு. இரண்டையும் ஒரே அடையாளத்தில் பார்க்க முடியாது.

சாதி வன்மத்தால் பாதிக்கப்படுவர்களை சாதிக் குழுக்களாக பார்ப்பது அபத்தம். ஏனெனில் அவர்கள் சாதியால் ஒன்றிணைய வில்லை. நீதிக்காக ஒன்றிணைகிறார்கள். இந்த அர்த்தப்பூர்வமான முன்னெடுப்பிற்கு தலித் அடையாளம் அவசியமாகிறது. ஆகவே தலித் என்பது சாதி அல்ல. நீதிப் பயணத்தின் முன்னெடுப்பு அடையாளம்.

எவிடென்ஸ் கதிர்